கட்டுரைகள் | அரசியல் | 2020-03-15 07:53:25

புத்தள ஒன்றிணைவு, இரு கட்சிகளினதும் ஆரோக்கிய சிந்தனையை வெளிப்படுத்துகிறது...

(மிஸ்பாஹுல் ஹக்)

இலங்கையில் புத்தளம் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள ஒரு மாவட்டமாகும். அண்மையில் நடந்தேறிய அருவக்காலு குப்பை பிரச்சினையை யாருமே மறந்திருக்க மாட்டார்கள். இந் நிலையில், இது சார்பாக குரல் கொடுக்க, வழி காட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் அவசியத்தை அந்த மக்கள் பல தடவை உணர்ந்திருந்தனர். கடந்த 30 வருட காலமாக அப் பகுதி முஸ்லிம் மக்கள் எமது முஸ்லிம் கட்சிகளிடையே நிலவும் ஒன்றுமையின்மை காரணமாக தங்களது பிரதிநிதித்துவத்தை இழந்து வருகின்றனர். இது இன்னும் தொடர்வது ஏற்புடையதல்ல. இம் முறை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேயாக வேண்டும். அந்த வகையில் புத்தளத்தில் மு.கா, அ.இ.ம.கா ஆகியன ஒன்றிணைந்துள்ளதை பாராட்டியேயாக வேண்டும்.

சமூக விடயமொன்று, அதனை இரு கட்சிகளும் இணைந்து சாதிக்கலாமென்றால், அதற்கு இரு கட்சிகளும் ஒப்பந்த அடிப்படையில் அல்லது உடன்பாடு அடிப்படையில் இணைவதில் தவறேதுமில்லை. இந்த இணைவின்றி பல விடயங்களை சாதிக்க தவறியுள்ளோம் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். எது நடந்தாலும் அதனை விமர்சிக்க நாலு பேர் வருவர். அவர்கள் இதனையும் விமர்சிக்க தவறவில்லை. றிஷாத் ஹக்கீமை ஏற்றுக்கொண்டுவிட்டாரா, ஹக்கீம் றிஷாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்களா, அன்று இருவரும் மாறி மாறி விமர்சித்தார்களே அதுவெல்லாம் பொய்யா, அவைகள் பொய்யென கூறுவார்களா எனுமடிப்படையிலான விமர்சனங்களை அவதானிக்க முடிகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள கூட்டு புத்தளத்தில் முஸ்லிம் பா.உ பெறுவதற்கான கூட்டு மாத்திரமே. கட்சி ரீதியான கொள்கைகளை ஏற்ற ஒன்றல்ல. கொள்கையை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே மேலுள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டும். இது தெளிவாக இருக்க, மேலுள்ளவாறு விமர்சிப்பது அறிவிலித்தனமல்லவா?

தற்போது அமையவுள்ள கூட்டணியின் பிரகாரம் ஹக்கீமை ஏற்போர் ஹக்கீம் அணிக்கும், றிஷாதை ஏற்போர் றிஷாத் அணிக்கும் வாக்களித்து அவர்களது கட்சியை வெற்றி பெறச் செய்ய முடியும். ஒரு சின்னத்தில் இரு வெவ்வேறு கொள்கையுடைய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றன. இதனை உதாரணமொன்றின் மூலம் தெளிவாக விளங்கபடுத்த முடியும். ஒருவர் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அவ் இலக்கை அடைய இரு பாதைகள் உள்ளன. எதனூடாக சென்றால் விரைவாக, பாதுகாப்பாக, சொகுசாக செல்லலாம் என்பதை பயணிக்க வேண்டியவரே தீர்மானம் எடுக்க வேண்டும். இலக்கு பா.உறுப்புரிமை, இரு பாதைகளும் இரு கட்சிகள். இப்போது விளங்குகிறதா...?

" தனக்கு ஒரு கண் இல்லாது போனாலும் பறவாயில்லை, எதிரிக்கு இரு கண்களும் இரிக்க கூடாது " என நினைப்பவர்களே எம்மில் அதிகம். இவ் இணைவில், தனக்கு ஆசனம் கிடைக்காவிட்டாலும் பறவாயில்லை, தனது சகோதர கட்சிக்காவது ஆசனம் கிடைக்கட்டும் எனும் ஆரோக்கிய மனநிலை இரு கட்சியினரிடமும் வெளிப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது என்பதில் மறுப்பதற்கில்லை. இம் முறை மொட்டு அணியினர் பாராளுமன்ற பலத்தை பெற்றால் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அரங்கேற வாய்ப்புள்ளது. இந் நிலையில் ஒவ்வொரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமை. அவ் வகையில் இதனை நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றேயாக வேண்டும். நான் பெரிய இள், நீ பெரிய ஆள் எனும் ஈகோ பார்க்கும் நேரம் இதுவல்ல. இதனூடாக சமூகத்துக்கு பயனுள்ள ஒன்றே நடந்தேற போகின்றது. இம் மனநிலை தொடர இறைவனை பிராத்திப்போம்.

​​​​​​


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts