கல்வி | கல்வி | 2020-03-08 19:31:16

சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் பெறும் மாணவர்கள் கல்வித்துறையில் சாதனையீட்ட வேண்டும் -அம்பாறை மாவட்ட பணிப்பாளர்.

ஏ.எல்.எம்.ஷினாஸ்

சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் பெறும் மாணவர்கள் கல்வித்துறையில் சாதனையீட்ட வேண்டும் என அம்பாறை மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் தெரிவித்தார்.
சமூர்த்தி பாதுகாப்பு நிதியம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மாணவர்களுக்கான சமூர்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் (03) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
வறிய மக்களை சமூக மட்டத்தில் உயர்த்துவதற்காக அரசு பல்வேறு வேலைத்திட்டங்களை காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தி வருகின்றன. சுமார் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட சமூர்திப் பயனாளிகள் நாட்டில் உள்ளனர். இன்று பல மில்லியன் ரூபாய் நிதிகளை மாணவர்களாகிய உங்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்றன. ஆனால் நாம் வறுமையானவர்கள் அல்லது வசதி குறைந்தவர்கள் என்று காரணத்தை சொல்லி கல்வியில் முன்னெறாமல் இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். ஆரம்ப காலங்களில் விளக்கு வெளிச்சத்தில் கஸ்டப்பட்டு கல்வி கற்றவர்கள் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும்  பெரும் பெரும் பதவிகளில் இன்று இருக்கின்றால்கள். ஆனால் இன்று எமக்கு எல்லா வசதி வாய்ப்புக்கள் இருந்தும் கல்வியில் திறமைகளை வெளிக்காட்டாமல் இருக்கின்றோம். வறுமையை சவாலாக எடுத்து சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் பெறும் மாணவர்கள் ஏனைய மாணவர்களிலும் பார்க்க உயர்ந்த பெறுபேறுகளை பெறவேண்டும். வசதி குறைந்த உங்கள் பெற்றோர்களது கனவுகளை நனவாக்குவது மாணவர்களாகிய உங்களது பொறுப்பாகும் என்றார்.
மருதமுனை நற்பிட்டிமுனை சமூர்தி அபிவிருத்தி வங்கிக் கிளைகள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட சமூர்தி உதவி பெறும் பயனாளிகளின் குடும்பங்களில் கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரக் கல்வியை தொடர்கின்ற மாணவர்களின் கல்வி ஊகக்குவிப்புக்காக மாதாந்தம் 1500.00 ரூபா வீதம் இரண்டு வருடங்களுக்கு இந்த சமூர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்வில் மருதமுனை நற்பிட்டிமுனை சமூர்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன், பிரதேச திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், சமூர்த்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts