வெளிநாடு | சமூக வாழ்வு | 2020-03-02 22:40:05

உலகை மிரட்டும் கொரோனா! மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா- வெளியான மகிழ்ச்சி செய்தி

உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா ரைவஸிற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. சீனா மட்டுமன்றி சுமார் 60இற்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தி பெரும் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

உலக மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளார்கள். ஆனாலும் இதுவரை எந்தவிதமான மருந்துகளையும் மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனாவிற்கு முதல் உயிர் பலியாகியிருக்கிறது.

இதற்கிடையில், சீனாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் நேற்று 35 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,870 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 573 பேருக்கு காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79,824 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்து தென்கொரியாவில் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 3,736 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற நிறுவனம் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வரும் ஜூலையில் வணிக ரீதியாக மருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்துக்கு புதிய மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் பயணிக்கு மருந்து வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சீனாவிலும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
 


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts