கட்டுரைகள் | அரசியல் | 2020-03-01 09:43:17

ஹக்கீமின் பேச்சு ஐ.தே.கவின் எதிர்கால வியூகத்தை சிதைத்ததா, சாணக்கியம் சறுக்கியதா..?

(மிஸ்பாஹுல் ஹக்)

மு.காவின் பேராளர் மாநாட்டில் மு.காவின் தலைவர் ஹக்கீம் பேசிய விடயங்கள் பெரும் பேசு பொருளாக உருவெடுத்துள்ளன. ஜே.வி.பி, த.தே.கூ ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து ஜனநாயகத்துக்கு எதிரான பரந்துபட்ட கூட்டணியை அமைக்கவுள்ளோம் என மு.காவின் தலைவர் ஹக்கீம் கூறியதற்கு ஜே.வி.பியிடமிருந்து பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. அவர்கள் மு.காவின் தலைவர் ஹக்கீமை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர். சர்ச்சைகள் ஒன்றும் மு.காவுக்கோ அல்லது மு.காவின் தலைவருக்கோ புதிதல்ல. இந்த பேச்சின் மூலம் ஹக்கீம் இராஜதந்திர பிழையொன்றை செய்துவிட்டாரா என்பதே இங்குள்ள முக்கிய விடயம்.

மு.காவின் தலைவர் ஹக்கீம், தான் வேறு விடயமொன்றை சொல்ல வந்ததாக கூறி மறுப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த விடயத்தை குறித்த நிகழ்வில் இரு மொழிகளில் ( தமிழ், சிங்கள ) ஒரே விதமாக குறிப்பிடுகிறார். சிங்கள மொழியில் ஜே.வி.பி என்ற வார்த்தையை மு.காவின் தலைவர் மொழிகிறார் என்றால், அவர் குறித்த விடயத்தில் எந்தளவு கவனமாக இருப்பார் என்பதை சொல்லித்தான் அறிய வேண்டியதில்லை. அவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் மிகக் கவனமாக வெளிவருவது பேசு பொருளான உண்மை. எனவே, இது சொல்ல வந்த விடயத்தை மாற்றி கூறிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

மேலும், ஜனநாயகத்துக்கு எதிராக ஜே.வி.பியையும் இணைத்துக்கொண்டு போராடவுள்ளோம் என அவர் பிறகு நியாயம் கற்பித்திருந்த அரசியல் கூட்டணியை கருதாத வேறு கூட்டணியை மு.காவின் தலைவர் ஹக்கீம் கூறுவதாக இருந்தாலும், இவர்களை ஜே.வி.பி ஜனநாயகத்துக்கு எதிராக போராடக்கூடிய தகமை வாய்ந்தவர்களாக கருத வேண்டுமல்லவா? கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.காவின் தலைவர் ஹக்கீமை அரசியல் புரோக்கரென ஜே.வி.பியின் தலைவர் கூறியிருந்தார். ஜே.வி.பியினர் வெற்றி பெறமாட்டோம் என நன்கு தெரிந்தும் சஜிதையும், கோத்தாவையும் ஏற்காது தனித்து போட்டியிட்டிருந்தனர். இப்படியானவர்களின் பெயரை இணைவொன்றிற்கு பயன்படுத்துவதாக இருந்தால், ஏதாவதொரு உடன்பாடு எட்டப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

அவ்வாறானால், இதனை ஜே.வி.பி மறுத்துள்ளதே, மறுத்தாலும் பறவாயில்லை தாறு மாறாக மு.காவின் தலைவரை கிழித்து தொங்க போட்டுள்ளதே என கேட்கலாம். அரசியல் வாதி ஒருவனை கள்ளன் என்று சொல்லிவிட்டு, மறுகனம் அவனிடமே கோள் பன்னி " மச்சான் ஒன்ன கள்ளன் என்டு இப்ப, இங்க சொல்லிருக்கன் " எனக் கூறுவதே அரசியல். இதனையெல்லாம் பெரிதாக தூக்கிப்பிடிக்கத் தேவையில்லை.

இவற்றிலிருந்து புரிந்துகொள்ளக் கூடிய விடயம், ஐ.தே.கவானது ஜே.வி.பியையும் இணைத்த ஏதோ ஒரு பரந்துபட்ட இராஜதந்திர நகர்வைவொன்றை முன்னெடுக்க வியூகம் வகுத்துள்ளது. அதனை இடம், காலம் தெரியாமல் பேசி குழப்பியடித்துள்ளார் மு.காவின் தலைவர் ஹக்கீம். இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதாலேயே ஊடகங்களும் தூக்கி பிடித்திருந்தன. கேலிச் சித்திர நையாண்டிக்கும் மு.கா தலைவர் ஹக்கீம் உட்படலானார். இது தொடர்பில் மு.கா தலைவர் ஹக்கீமும் உடனே மறுப்பு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். மு.கா தலைவர் ஹக்கீமின் அவசரமான மறுப்பே, அது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை துல்லியமாக்கின்றது.

மு.காவின் தலைவர் மிக நிதானமாக செயற்படக் கூடியவர். குறித்த இவ்விடயமானது அவர் நிதானமிழந்த நிலையில் இருப்பதை எடுத்துகாட்டுகிறது. மறைக்கப்பட வேண்டிய இரகசியங்களை கூறியாவது பேராளர்களை உற்சாகப்படுத்த வேண்டிய ஒரு நிலைக்கு மு.காவின் தலைவர் ஹக்கீம் தள்ளப்பட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts