பிராந்தியம் | அரசியல் | 2020-08-02 09:06:10

மு.கா- தமிழ் கூட்டமைப்பு வரலாற்று தவறை தொடர்ந்தும் செய்துவருகிறது : தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா.

(ஹுதா உமர்)

தமிழர்களும் முஸ்லிங்களும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளாக பின்னி பிணைந்து வாழ்கிறோம். தினசரி ஒருவரை ஒருவர் எங்காவது பார்க்காமல் இருப்பதில்லை. நாம் யார் நினைத்தாலும் பிரிந்து வாழக்கூடாது உறவுகள். இந்த உறவு மிக நீண்ட கால உறவாகும் என தேசிய காங்கிரசின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். 

நேற்று (07) இரவு சாய்ந்தமருதில் நடைபெற்ற விளையாட்டுக்கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர். தொடர்ந்தும் தனது உரையில், 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை இஸ்தாபித்த மறைந்த தலைவர் அஸ்ரப் சிங்கள மக்களுக்கும் முஸ்லிங்களுக்கும் உறவுப்பாலமாக இருக்க எண்ணினார். அவருடைய ஆசிரியர்கள் எல்லோரும் தமிழர்களே. பின்னர் வந்த காலப்பகுதியில் தமிழர் விடுதலை போராட்ட களத்தில் குதித்த ஒரு குழுவினர் எதற்காக போராடுகிறோம், விடுதலை என்றால் என்ன ? யாருக்கு ? எப்போது ? எப்படி என்று தெரியாமல் போராடி பல்லாண்டு காலம் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். பொங்கலுக்கு தீர்வு தருவதாக கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் தமிழ் கூட்டமைப்பும். இனவாதத்தை பேசி பிரிவினைவாதத்தை வளர்க்கும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து தமிழ் மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். 

தமிழ்-முஸ்லீம்-சிங்கள மக்களை சூடாக்கியவர்கள் அரசியல்வாதிகள். தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் ஒன்றாக பயணித்த போதும் கல்முனை மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்த்துவைக்க முன்வரவில்லை. வரலாற்று துரோகமாக அதை நான் பார்க்கிறேன். சாய்ந்தமருது பிரச்சினை நாடறிந்த பிரச்சினை. ஒரு சமூகம் மற்றைய சமூகத்தை கண்டு மறைத்து கதைக்கும் நிலைக்கு நாம் ஆளாக்கப்பட்டோம். 

கடந்த அரசில் தமிழ் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் இது விடயமாக பேசியபோது அங்கு சமூகமளித்திருந்த நான் மூத்த தமிழ் தலைவரான சம்பந்த ஐயாவிடம் இந்த பிரச்சினையை தொடரவிடாமல் தீர்க்க வழிசமைக்க வேண்டும். நாங்கள் உங்களை நம்புகிறோம் என்றேன் . கடந்த காலங்களில் பல முக்கிய முஸ்லிம் தலைவர்கள் தமிழ் தலைமைகளின் தலைமையின் கீழ் பயணித்துள்ளார்கள் அந்த அனுபவத்துடன் கல்முனை விடயத்தை மத்தியஸ்தம் செய்வதை மூத்த தமிழ் தலைவரான சம்பந்த ஐயாவிடம் கொடுத்தோம். 

தமிழ் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் கேட்டிருக்க யாருக்கும் யாரும் அநியாயம் செய்ய வேண்டியதில்லை. அவரவருக்கான தேவைகளை நியாயமாக வழங்க வேண்டும் நீங்கள் வந்து இதை செய்து முடியுங்கள். இல்லாது போனால் ஆணைக்குழுவை நியமித்து தீர்வை பெறுவோம் என்றேன். கல்முனையின் வரை படத்தை வைத்துக்கொண்டு எல்லைப்பிரிப்பு கோட்டை வரைந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. அதை செய்யும் திராணியும் தைரியமும் எனக்கு இருக்கிறது. 

சம்பந்தன் ஐயா வரமுடியாமையை காரணம் காட்டி பல்வேறு திட்டங்ககளை முன்மொழிந்தார். ஒரே தலைமையை ஆதரிக்கும் தமிழ் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் மக்களை வாழவைக்க எதையும் செய்யவில்லை, இனவாதத்தை மட்டுமே விதைத்துவிட்டு சென்றார்கள். இந்த துவேசத்தை இல்லாமலாக மாற்ற பல வருடங்கள் செல்லும். 

அக்கறைப்பற்றை ஆதாரமாக கொண்டு நான் அமைச்சராக இருந்த போது என்னுடைய அமைச்சரவை விவாதம் ஒன்று பாராளுமன்றத்தில் சென்றுகொண்டிருந்த போது தமிழமைச்சர் ஒருவர் கல்முனைக்கு சபை கேட்டார். தமிழர்களுக்கான பிரதேச சபை உரித்தை வழங்க தயாராகவே இருந்தேன். அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் செயலகம் என்பது மக்களின் தேவை என்பதை விட அது அரசின் தேவை. அரச காரியங்களை செய்ய அரசாங்கம் அமைக்கும் அலுவலகம் அது. அது எங்கும் இருக்கலாம் அது பிரச்சினை இல்லை. அந்த மக்களுக்கு தேவை செயலகம் என்பதை விட உள்ளுராட்சி சபையே. அதன் மூலம் தான் அந்த மக்களின் பங்குகள் சரியாக கிடைக்க வழியேற்படும். 

எல்லைகள் போடப்படும் போது தமிழர்களினதோ அல்லது முஸ்லிங்களினதோ கூரைக்கு மேலால் போட முடியாது. அது கூடாது. யுத்தம் எதற்காக இந்த நாட்டில் நடைபெற்றது என்பது தெரியாமல் பல உயிர்களையும், விலைமதிக்க முடியாத சொத்துக்களையும் இழந்திருக்கிறோம். ஆகவே நீதி,நியாயத்தை நாங்கள் நிலைநாட்ட வேண்டும். அண்மைய பிரதமரின் சந்திப்பில் எமது எண்ணங்களை தெளிவாக அரசுக்கு கூறிவைத்துள்ளோம். நான்கு சபைகளையும் பிரித்து நான்கு பிரதேச செயலகங்களை உருவாக்க வேண்டும். அரசியலுக்காக இனவாதம் பேசி பயனில்லை. இந்த பிரதேச மக்களின் தேவைகளை பெறுவதில் நாங்கள் நியாயமாக நடக்க வேண்டும். எமது பதவிகளை கொண்டு நமது மக்களை நிம்மதியாக வாழவைக்க வேண்டும். 

தேசிய காங்கிரஸின் சிந்தனை எப்போதும் நாட்டின் கரிசனையை இலக்காக கொண்டதாக இருக்கும் அதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. நாங்கள் எங்களுக்குள் சந்தேகப்பட தேவையில்லை. ஒற்றுமையின் மூலமே நமது தேவைகளை அடைய முடியும். அரசியல்வாதிகள் மக்களை சூடாக்கி அரசியல்செய்வதை நிறுத்த வேண்டும் என்றார்.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

GENERAL ELECTION-2020

Popular Posts