கட்டுரைகள் | அரசியல் | 2020-02-07 18:26:08

தனி அபிலாஷைகள் சமூக வேட்கைகளுக்கு வேட்டா?

சுஐப் எம் காசிம்

சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புக்களை சிவில் அமைப்புக்கள் பாரமெடுக்கும் தேவைகள் அதிகமாக உணரப்படுகின்ற காலம்தான் இது. இந்தப் பொறுப்புக்கள் அபிவிருத்தி, கல்வி, மதம், சமூக சேவைகள் உள்ளிட்ட அரசியலிலும் இருப்பது அவசியம். இச்சிவில் அமைப்புக்களின் வகிபாகம் ஏனைய துறைகளில் தாக்கம் செலுத்தினாலும் அரசியலிலும் சாதிக்கின்றதா? எனத் தெரியவில்லை. முஸ்லிம் தலைவர்களை ஒன்றுபடுத்தல், முஸ்லிம் கட்சிகள் பிளவுபடாதிருக்க உழைத்தல், சமூகம் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு அரசியல்ரீதியான பாதுகாப்பைப் பரிந்துரைத்தல் போன்ற விடயங்களில் சிவில் அமைப்புக்களே அரசியல் தலைமைகளை வழிநடத்த வேண்டியுள்ளது. இதற்கான தகுதி, தகைமைகள் இந்த அமைப்புக்களிடம் உள்ளனவா? என்பதே இன்றுள்ள கேள்வி. இல்லாதிருந்தால் எதற்காக என்பதையும், இருக்குமானால் எப்படி என்பதையும் ஆராய்ந்தே, சிவில் அமைப்புக்களின் சமூக வகிபாகங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பொதுவாக அரசியல்சார்பு சிந்தனைகளிலிருந்து விடுபட்டுச் செயற்படும் சிவில் அமைப்புக்களால் மாத்திரமே அரசியல் தலைமைகளை வழிநடத்த முடிகின்றது. இந்த அமைப்புக்கள் அரசியல் அழுத்தங்களுக்கு உட்படுகின்றனவா? அல்லது ஏதாவது ஆதாயங்களுக்காக, அரசியல் தலைமைகளை நாடுகின்றனவா? பொதுமக்கள் தௌிவடைய வேண்டிய விடயமும் இதுதான்.

சிவில் அமைப்புக்களின் சுதந்திரச் செயற்பாடுகள் ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தலைமைகள், தலைவர்களை கட்டுப்படுத்தி வந்திருந்ததையும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டியுள்ளது. பின்னர், சமூகத்தின் ஏக அங்கீகாரமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடையாளப்படுத்தப்பட்ட 1986 முதல் 2000 வரையான காலப்பகுதிகளில்தான் சிவில் அமைப்புக்களின் செயற்பாடுகளில் சலசலப்புக்கள் ஏற்படத்தொடங்கின. இச்சலசலப்புக்களின் எதிரொலிகள் இன்றுவரைக்கும் முஸ்லிம் தலைமைகளையும், முஸ்லிம் சிவில் அமைப்புக்களையும் "ஓடும் புளியம்பழமும் போலவே" வைத்துள்ளன. இதனால் அரசியல் தலைமைகள்தான் அபிப்பிராய பேதங்களால் பிளவுபட நேரிடுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் திராணிகள் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. பக்கம் சார்ந்ததும் பாரம்பரியங்களுக்கும் பழகிப்போன இவ்வமைப்புக்களின் செயற்பாடுகளால் வந்த விளைவுகள்தான் இவை.

ஒரு சில சம்பவங்களுக்காக குறித்த ஒரு தலைமையை மட்டும் முஸ்லிம் சமூகத்தின் நிரந்தர எதிரிகளாகக் கற்பனை செய்யும், காட்ட முனையும் முஸ்லிம் கட்சிகளை, இந்த சிவில் அமைப்புக்கள் வழி நடத்துவதுபோக, இவர்களும் சேர்ந்து ஒருபக்க நிலைப்பாடுகளை எடுப்பதுதான் நிலைமைகளைக் குழப்பியுள்ளன. இதற்க்கு மேலாக சிலவேளைகளில் சமூகத்தால் வழிநடத்தப்பட்ட தலைமைகள் வெற்றிபெற்றால் பாராட்டப்படுவதும் தோல்வியுற்றால் தூற்றப்படுவதும் நமது சமூகத்தின் சாபக்கேடே!

இன்னும் பாரம்பரிய கட்சிகள், தலைமைகளை மீறி முகங்களையும், முகவரிகளையும் பிரபல்யப்படுத்த சிலர் முனைவது, ராஜபக்‌ஷக்களின் முஸ்லிம் விசுவாசத் தலைமைகளை அதிருப்தியடையச் செய்திருக்கும். இந்த அதிருப்தியை விடவும் பாரிய அதிர்ச்சிகள் இதற்குப் பின்னர் காத்திருப்பதுதான் இன்றுள்ள பெருங்கவலை.

எனவே, இரு தேசிய அணிகளிலுமுள்ள முஸ்லிம் தனித்துவ தலைமைகள், இந்த தனியார் அபிலாஷைகள் குறித்து விழிப்படைய வேண்டியுள்ளது. இதிலும் விஷேடமாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் தலைமையான தேசிய காங்கிரஸ் இவ்விடயத்தில் கச்சிதமாகச் செயற்பட வேண்டும். இதுவே ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது ஆதாயங்களைப் பெற்றுத்தரும். இல்லாவிட்டால் தனிநபர்களின் தலையெடுப்புக்களில் சமூக அபிலாஷைகள் புறந்தள்ளப்படுவதை தடுக்க முடியாமலே போகும்.

சமூகமொன்றின் பிரச்சினைகளை தனிநபர் முன்வைப்பதை விட, தனித்துவ தலைமைகள் அழுத்தம் கொடுப்பதே எதையாவது சாதிக்காவிட்டாலும் பெற்றுக்கொள்ளவாவது முடிகின்றது.

புலிகளின் வீழ்ச்சி, பெரும்பான்மையினரின் விழிப்பு மற்றும் தனித்துவ கட்சிகளின் பிளவுகளால் சாதனை அரசியல் விடைபெற்றுவிட்டது என்பதே எனது நிலைப்பாடு. எனவே எஞ்சியுள்ள, எதிர்வரவுள்ள தேவைகள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தீர்வுகளைப் பெறுவதற்கும் தனிநபர்களன்றி தனித்துவ தலைமைகளே அவசியமாகவுள்ளது. இவ்விடயங்களில் தலையிட்டு, தௌிவுபடுத்துமளவிற்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இல்லாதுள்ளமையே இன்றுள்ள கவலை.

எனவே, பக்கஞ்சாராத பாரபட்சங்களில்லாத சிவில் அமைப்புக்கள், முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமன்றி தமிழ் சமூகத்துக்கும் தேவையாக உள்ளது. ஒருவகையில், சகோதர தமிழ் சமூகத்தில் இவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் உள்ளமை மகிழ்ச்சி தருகின்றது. யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இதிலெடுத்துள்ள அர்ப்பணிப்புகள் காலச்சுழற்சியின் பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. புலிகள், புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகள் மௌனித்த கையோடு, பல்கலைக்கழக மாணவர்களின் சிந்தனைகளில் இந்தப் பொறுப்புக்கள் புகுந்துகொண்டதை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

இன்று பிளவடையச் சாத்தியமாகவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைத்து வைப்பதற்கான பல்கலைக்கழக சகோதர தமிழ் மாணவர்களின் அர்ப்பணிப்பு, துடிதுடிப்புக்களைப் போன்று, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் செயற்படுவதுதான், அதன் ஸ்தாபகரான மர்ஹூம் அஷ்ரஃபுக்கு செய்யும் கைங்கர்யமாக இருக்கும். ஏற்கனவே இருந்த முஸ்லிம் சிவில் அமைப்புக்களுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டுள்ள நிலையில், தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் தனவந்தர்கள், கல்விமான்கள் இன்றைய களங்களை கையிலெடுப்பதே வரலாற்றுப் பொறுப்புக்களாகவும் இருக்கும்.

மத்திய கிழக்கிலுள்ள அமைப்புக்கள், மு.கா ,ம.கா, தே.கா தலைமைகளுடன் வைத்துள்ள தனித்தனித் தொடர்புகள், பொதுக்கூட்டாக விரிந்து, வீரியமடைந்து இத்தலைமைகளை ஒன்றுசேர்க்க புறப்படவேண்டியுள்ளது. இந்தப் புறப்பாடுகள், எதிர்வரவுள்ள பொதுத்தேர்தலில் பெரும்பயனைத் தருமென நம்பக் கடினமாக இருந்தாலும், இருதரப்புக்களிலும் களமிறக்கப்படும் “தனியார் அபிலாஷைகளையாவது” மட்டுப்படுத்த உதவும் என்றாவது எதிர்பார்க்க முடியுமே!

சமூகத்தின் இந்த நம்பிக்கைகளை வென்றெடுக்க முதலில் களமிறங்குவது யார்? கல்விச் சமூகமா? புலம்பெயர் சமூகமா? அல்லது புதிதாகத் தோன்றவுள்ள சிவில் சமூகமா? இவ்வாறு முதலில் இறங்குவோருக்கு "காலத்தை வென்றவன் நீ,, காவியமானவன் நீ" என்ற பாடல் பொருத்தமாக இருக்கும்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts