பிராந்தியம் | அரசியல் | 2020-02-05 13:02:08

இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானதே !! ஒரே தேசிய கீதம் இரு மொழியில் அமைதல் வேண்டும் - தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ்

(ஹுதா உமர்)

இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான சுதந்திர தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை (04) காலை அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிராந்திய முகாமையாளர் காரியாலய அருகாமையில் அமைந்துள்ள ஐக்கிய சதுக்க நீர்தடாக முன்றலில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி தலைமையில் நடைபெற்றது. இச்சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கலந்து கொண்டு நிகழ்த்திய சுதந்திர தின உரையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அங்கு உரையாற்றிய அவர்,

“அப்போதைய காலங்களில் சுதந்திர தினம் என்பது நமது பிராந்தியத்தில் மட்டுமன்றி நாடு பூராகவும் நடைபெற்றது, ஆனால் சுமார் முப்பது வருடகால யுத்தம் காரணமாக கடந்த காலங்களில் அது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நமது நாடு அழகியதொரு நாடு, வளம்பொருந்திய நாடு, உலகின் எந்த நாடுகளிலும் இல்லாத அளவு இயற்கை செல்வங்கள் நிறைந்த நாடு. இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் உலகின் முதல்மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலடி பதிந்த நாடு என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

அப்படியொரு வளம்பொருந்திய நாடாக நமது நாடு ஜொலித்த காரணத்தினால்தான் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், பிரித்தானியர் போன்றோர் இந்த நாட்டின் வளங்களை சூரையாடுவதற்கு, நமது நாட்டின் அரச தலைவர்களை அடக்கி, அவர்களின் அதிகாரத்தை இங்கு நிறுவி, நம்மை அடிமைகளாக ஆக்கி ஆண்டுகொண்டிருந்தார்கள். அப்போது நமது சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக போராடி அவர்களிடமிருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார்கள். அதனால்தான் நாமே நம்மை ஆட்சிசெய்யும் உரிமை நமக்கு கிடைக்கப்பெற்றது.

இருந்தபோதிலும் பின்னரான காலங்களிலும் எமது நாட்டின் வளங்கள் மீது அவர்களின் பார்வை குறைந்துவிடவில்லை. சுதந்திரத்தின் பின்னர் தொடக்கம் இன்றுவரைக்கும் வெளிநாட்டு சக்திகளின் ஆளுகைகள் நமது நாட்டின் மீது வித்தியாசமான முறைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்காக நமது மக்களை இன மத ரீதியாக பிளவுபடுத்தி, பல்வேறுபட்ட பிரச்சினைகளை உண்டாக்கியிருந்தார்கள். இருந்தாலும் பல்லின மக்களும் இணைந்து அமைதியான வாழ்க்கை வாழும் அழகிய நாடு இது. ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் சுமார் 30 ஆண்டுகள் தமிழ் சிங்கள முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடிய வரலாறுகள் மறக்கமுடியாதவை.

நாங்கள் நிதானமாக சிந்திப்போமாக இருந்தால் இந்த நாட்டின் அனைத்து இனமக்களும் நிம்மதியாக வாழக்கூடிய பல வழிமுறைகள் இருக்கின்றன. இந்த நாட்டின் அரசியல் தலைவர்களால், இந்த நாட்டின் பாராளுமன்றத்தால், ஜனாதிபதியால் அது முடியும். ஆனாலும் அதைவிடுத்து நமது நாட்டின் அரசியல்தலைமைகள் வெளிநாடுகளின் கைபொம்மையாக இருந்தமையினால்தான் நாம் பாரிய பிரச்சினைகளையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் பலநூறு மொழிகள் இருந்தபோதிலும் அந்நாட்டின் தேசியகீதம் ஒரு மொழியில்தான் பாடப்படுகிறது. ஒரு நாட்டிற்கு ஒரு தேசியகீதம் என்பதுதான் உலக வரலாறு.

அதற்கு மாற்றமாக இலங்கையில் இரண்டுமொழிகளிலும் தேசியகீதம் பாடுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் தமிழிலோ சிங்களத்திலோ விரும்பிய மொழியில் பாடமுடியும். அதில் நாங்கள் பிரிவினைப்பட எந்தவித தேவையும் இல்லை. இதோ இந்த சுதந்திர நிகழ்விலும் பெரும்பாண்மை இனத்தின் சிங்கள மொழியில்தான் தேசியகீதம் பாடப்பட்டது. இந்த நாட்டின் சிங்கள தமிழ் மக்கள் எல்லோரும் இணைந்து ஒரு தேசிய கீதத்தினை உருவாக்க முடியும். நமோ நமோ மாதா என்ற இடத்தில் நமோ தாயே என்று சேர்த்து ஒரு தேசியகீதமாக பாடி பிரிவினைகளை களைந்து அனைத்து இனங்களும் ஒன்றாய் பயணிப்பது பற்றி நாங்கள் யோசிக்க முடியும்.

74 வீத பெரும்பாண்மையின மக்கள் 26வீதமான சிறுபாண்மையினரை கருத்தில்கொண்டு தேசிய கீதத்தில், தேசிய கொடியில் அவர்களுக்கான உரிமைகளை வழங்குவார்களேயானால், அதே வழியில் ஏனைய உரிமைகள் தொடர்பில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இலகுவாக தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பில் நாங்கள் நாட்டின் தலைவர்களோடு கலந்துரையாடி இருக்கிறோம்.

சிறுபாண்மையாய் வாழும் எந்த மக்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இல்லை, அனைவரும் இந்தநாட்டவரே. பிரித்தானியரின் காலத்தில் கொண்டுவரப்பட்டவர்களாக இருந்தாலும் மலையகத்தவர்களும் இலங்கைப் பிரஜைகளே. இந்த நாடு அனைத்து இனங்களுக்குமான நாடு. இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் இந்த நாடு சொந்தமானதே.

இந்த நாட்டின் மக்களின் தேவைகளுக்காக இந்த நாடு ஒன்பது மாகாணங்களாக பிரிக்கப்படவில்லை, வெளிநாட்டு கைக்க்கூலிகளின் இலாபத்திற்காகவே அப்படி பிரிக்கப்பட்டு வெளிநாட்டு ப்ரோக்கர்களின் கையில் அகப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுசேர்ந்து நமது உரிமைகள் பற்றி பேசவேண்டிய காலமிது, குறைந்தபட்சம் தேசிய கீதத்திலே நமது தமிழ் சொற்களை சேர்க்கமுடியுமாக இருந்தால், அதனை ஒரு முன்மாதிரியாக கொண்டு ஏனைய உரிமைகளையும் இந்த நாட்டில் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

உண்மையில் வீணான முறையில் இந்தச் சிறிய நாட்டை ஒன்பது துண்டுகளாக பிரித்து ஒன்பது பொலிஸ், ஒன்பது அதிகாரம், ஒன்பது நிருவாகம் என்று மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவுசெய்து மக்களுக்கான சேவையை செய்வதில் பின்னிற்கிறோம். அந்த செலவுகளை நாம் ஒன்றிணைந்தால் இல்லாமல் செய்ய முடியும். பிரிவினைவாதமே இதற்கு காரணம். சுதந்திரத்திற்காக இந்த நாட்டு மக்கள் ஒன்றித்து எப்படி முயற்சித்தோமோ அப்படி ஒன்றாய் இணைந்து இனத்தீர்வுகள் பற்றி முயற்சிக்க முடியும். வெளிநாட்டு தேவைகளுக்காக ஒப்பந்தங்கள் செய்வதை நாங்கள் நிறுத்தவேண்டும். அந்நியரின் ஆட்சி இந்த நாட்டுக்கு தேவையில்லை. அந்நியரின் அரசியல் இலாபங்களுக்காக நமது மக்கள் அடிமைப்படுத்தப்படுவது தேவையில்லை.

உங்களுக்கு அதிகாரம் கிடைக்கப்போகிறது என்ற எண்ணப்பாட்டில் எமது இளைஞர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து அழித்துக்கொன்றார்கள். ஆகவேதான் அந்நியரின் எந்தவித முன்மொழிவுகளோ திட்டங்களோ எங்களுக்குத் தேவையில்லை. நாடு பாதுகாப்பான நாடாக இருக்கவேண்டும், நாட்டில் வாழும் அனைவரும் சுபீட்சமாக வாழும் நாடாக இருக்கவேண்டும். அதற்காகத்தான் நாட்டை நேசித்து நாட்டு மக்களை பாதுகாக்கின்ற தலைமைகள் பற்றி நாங்கள் சிந்தித்தோம். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறைவன் இன்று ஓர் ஜனாதிபதியை தந்திருக்கிறான், ஓர் பிரதமரை தந்திருக்கிறான்.

ஆனால் சில அரசியல் தலைமைகள் நாட்டின் நலனை கருத்தில்கொள்ளாது வெளிநாட்டவரின் தேவைகளுக்காக அரசியல்செய்து இன்று இந்த நாடு இனத்துவேசத்தில் அமிழ்ந்துபோயிருக்கிறது. பலரின் தேர்தல் அரசியல் இலாபங்களுக்காய் இந்த மக்களை பிரிந்து வைத்திருக்கிறார்கள். எங்களின் தேசிய காங்கிரசைப் பொறுத்தவரையில் பாலமுனைப் பிரகடனம் ஒன்றை செய்திருந்தோம். அதில் நாங்கள் குறிப்பிட்டது இந்த நாட்டின் வீதாசாரத்திற்கு ஏற்ப அனைத்து நலன்களும் பங்கிடப்படுமேயானால் இந்த நாட்டின் அனைத்து இனமக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் ஒன்றாய் வாழமுடியும் என்பதே.

ஒவ்வொரு இனத்தவருக்கும் தனித்தனியே பெருநாட்கள் இருப்பதைபோன்று, இது அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஒரு நாள், ஒரு பொன்னான வேளை. அக்கரைப்பற்றில் இன்று அனைத்து இனமக்களும் இங்கு ஒன்றுசேர்ந்து இந்த சுதந்திர நிகழ்வை கொண்டாட முடியுமென்றால், இதுபோல அனைத்து விடயங்களிலும் நாம் ஒற்றுமைப்பட முடியும், அப்படி ஒற்றுமைப்படுவதால் எமக்குள் ஒரு குறையும் ஏற்படப்போவதில்லை. இது எல்லோருக்குமான நாடு, தமிழர் சிங்களவர் முஸ்லீம் என்று அனைவருக்குமான நாடு இது. இந்த உணர்வை ஏற்படுத்துவதற்காக உதவிய இளைஞர்கள் மற்றும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மாநகர முதல்வர் உட்பட அனைத்துமத தலைவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்”- என்றார்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts