பிராந்தியம் | அரசியல் | 2020-02-01 22:09:02

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக்கு சகலரும் பங்களிக்க வேண்டும் : ஓய்வுபெற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம்.

ஹுதா உமர்

வீரர்களின் திறமையை பட்டைத்தீட்ட மைதான அபிவிருத்திகள் நடைபெறாமை தடையாக இருக்கிறது. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பிரதேச அபிவிருத்திக்கு சகலரும் பங்களிக்க வேண்டும். நான் எவ்வித அரசியல் வேறுபாடுகளும் இல்லாமல் வேலைகளை செய்துள்ளேன் என சாய்ந்தமருது பிரதேச செயலாளராகவும் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றி நேற்று ஓய்வை அறிவித்த ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்

சாய்ந்தமருது ஒஸ்மானியா விளையாட்டு கழக சீருடை அறிமுக நிகழ்வு இன்று (01) மாலை சாய்ந்தமருது இளைஞர் மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் அக்கழக தலைவரின் தலைமையில் நடைபெற்றபோது அங்கு கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், சிறந்த கட்டமைப்புக்களை கொண்ட மைதானத்தின் தேவை சாய்ந்தமருது பிரதேசத்தின் தேவையாக பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. சுனாமியின் பின்னர் பொலிவேரியன் கிராமத்தில் 10 ஏக்கரில் ஒன்றும் கடற்கரை வீதியில் ஒன்றுமாக இரு மைதானங்களை நாங்கள் அமைத்திருக்கிறோம். பொலிவேரியன் கிராமத்தில் 10 ஏக்கரில் அமைக்கப்பட்ட அந்த மைதானம் கிரிக்கட்,கால்பந்து விளையாட்டுக்களுடன் 400 மீட்டர் ஓடுபாதை கொண்டதாக அமைக்கப்பட்டு 2020 இல் சிறந்த தேசிய மைதானமாக அமைக்க திட்டமிட்டிருந்தோம். இருந்தாலும் இப்போதும் அந்த மைதானம் ஆரம்பித்த இடத்திலையே இருக்கிறது. இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அந்த மைதானத்தின் கனவு நனவாக்கப்பட்ட வேண்டும்.

நாங்கள் விரும்பும் ஆட்சி வந்தால் அதை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம். அதே போன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சி வந்தால் இப்பிரதேச அமைப்பாளர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். கல்முனை சந்தேங்கனியை கூட நாம் சரியாக அபிவிருத்தி செய்யவில்லை. எமது வீரர்களின் திறமையை பட்டைத்தீட்ட இம்மைதான அபிவிருத்திகள் நடைபெறாமை தடையாக இருக்கிறது. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பிரதேச அபிவிருத்திக்கு சகலரும் பங்களிக்க வேண்டும். நான் சாய்ந்தமருது பிரதேச செயலாளராக இருந்த காலகட்டத்திலும் எவ்வித அரசியல் வேறுபாடுகளும் இல்லாமல் வேலைகளை செய்துள்ளேன் என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts