கட்டுரைகள் | அரசியல் | 2019-11-29 09:12:57

இன ஓர்மங்களை உரசும் இரண்டாம் சமர்

(சுஐப் எம்.காசிம்)

ஜனாதிபதித் தேர்தலுடன் களைகட்டிய அரசியல்வாடை நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்வரை வீசிக் கொண்டே இருக்கப்போகிறது. ராஜபக்‌ஷக்களை வீழ்த்துவதற்கான சமரில் தோற்றுப்போன எதிரணியினர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலாவது அதிகாரத்தை எட்டிப் பிடிப்பதற்கான எத்தனங்களில் இறங்கியுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எதிர்க் கட்சித் தலைமைப் போட்டிகள் கட்சியைப் பிளவுபடுத்தாதுவிட்டால் மாத்திரமே  இவர்களின் எத்தனங்கள்  முன்னேற வாய்ப்புண்டு. இல்லா விட்டால் பாராளுமன்றத்தில் பெரமுன சாதாரண பெரும்பான்மையை இலகுவில் பெற நேரிடும் 

சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரை குறிப்பாக புதிய ஜனநாயக முன்னணியிலுள்ள தமிழ், முஸ்லிம்

தனித்துவ தலைமைகளுக்கு இம்முறை நடைபெறவுள்ள தேர்தல், வௌியேறப்போகும் இறுதி மூச்சை தடுத்து நிறுத்துவதற்கான வாழ்க்கைப் போராட்டமாகவே இருக்கப்போகிறது. புதிய ஜனாதிபதியின் உரையும் அவர் பதவியேற்ற ருவன்வெலிசாய இடமும் இரு தேசிய இனங்களுக்கான கௌரவப் பார்வைகளாவே பார்க்கப் படுகின்றன. தமிழ் மன்னனான எல்லாளனை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டிய துட்டகைமுனுவின் பெருமைகள் பொதிந்த இடத்தில் பதவியேற்பு நிகழ்ந்தமை திராவிட, ஆரிய இனங்களுக்கான அதிகாரச் சமர்களின் சிந்தனைத் தொடர்ச்சியாகக் கருதப்பட இடமளிக்கப்படக் கூடாது. அவ்வாறு இடமளிப்பது வடக்குச் சித்தாந்தத்தையும் தென்னிலங்கைச் சித்தாந்தத்தையும் மேலும் துருவப்படுத்தவே செய்யும். இந்நிலைமைகளிலிருந்து மீள்வதற்கான வழிகளை இரு தலைமைகளும் கண்டறிவதனூடாகத்தான் ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டுக்கு உயிரூட்ட முடியும். இல்லாவிட்டால் பேச்சளவில் இக்கோட்பாடு கிடப்பில் கிடக்க,வடக்குத் தெற்கு வேற்றுமைவாதம் ஒவ்வொரு தேர்தல்களிலும் உணர்வு ரீதியாக வௌிப்படுவதைத் தவிர்க்க முடியாது. எனினும் இவ்வேற்றுமைவாதங்களை,இருதரப்பும் அரசியல் பிழைப்புக்கான மூலதனமாகப் பாவிக்க விரும்புவதே எமது நாட்டுக்குப் பிடித்த தீராத நோயாகியுள்ளது. 

உண்மையில் தமிழர் தரப்பு நியாயங்களைப் புரிய மறுக்கின்ற தென்னிலங்கைச் சித்தாந்தவாதிகள் ஒன்றைப் புரிந்து கொண்டால் போதுமானது.வடக்கின் நியாயங்கள் புரிந்து கொள்ளப்படாததால் யுத்தமொன்றுக்கே செல்ல நேரிட்டது. இந்த யுத்தத்தில் பாரியஇழப்புக்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்த சமூகத்திற்கு தனிஈழம் இல்லாவிடினும் தனி சம அதிகாரம் வழங்குவதிலுள்ள சமரசங்களைப் புரிவதே போதுமானது. புரியும்படியும், நம்பும்படியும் தமிழ் தலைமைகள் நடந்து கொள்ளவில் லையே,என்ற கேள்வியை எழுப்பிவிடாதீர். ஏனெனில் இந்த நம்பிக்கைகளில்தான் தமிழர் அரசியல் வாழ்வின் ஐம்பதாண்டு காலம் கடந்துவிட்டது. இனிவரும் காலங்களை வாய்த்தர்க்கம்,  வாக்குவாதங்களில், ஏட்டிக்கு போட்டியாக  கடத்தாது பொருத்தப்பாடு, இணக்கப்பாடு, பொதுமைப்பாட்டு  அரசியலுக்கு அழைத்துச் செல்வதே பொருத்தமாக இருக்கும்.

 'போர்க்குற்றச்சாட் டுள்ளவர் ஜனாதிபதியானாலும் சர்வதேசத்தில் விடமாட்டோம்'  எனக் கர்ஜிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச பலத்தை எவரும் அறியாமலில்லை. இவ்வாறான கர்ஜிப்புக்கள் பொதுத் தேர்தலுக்கான உசுப்பேற்றல்களே என்பது ராஜபக்‌ஷக்களுக்குத் தெரியாமலுமில்லை.இந்த உசுப்பேற்றலில் அதிக ஆசனத்தைப் பெற்று பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷ அரசைப் பேரம்பேசம்பேசலுக்கு அழைப்பதுதான் இவர்களின்  திட்டம்.

ஆனால் இதுவல்ல பிரச்சினை.இவ்வாறான கர்ஜிப்புக்கள் தென்னிலங்கையை,விழிப்பூட்டி திராவிடத் தமிழர்களை விரோதிகளாக நோக்கும் நிலைமைகளை ஏற்படுத்தும். இந்நிலைமைகள் தமிழர்களுக்கு சம அதிகாரப்பங்கீடு வழங்குவதை ராஜபக்‌ஷக்கள் விரும்பினாலும் தென்னிலங்கையே எதிர்க்கும் அபாயச்சூழலையே  ஏற்படுத்தும். தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் இது பற்றிச்சிந்திப்பதே சிறந்தது.

மறுபுறம் முஸ்லிம் தரப்புக்கள் என்ன செய்யப் போகின்றன?. சஜித்பிரேமதாசவை வேட்பாளராக்கும் முதற்போடுகாயைத் தானே எறிந்ததாக தோள்  நிமிர்த்திய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் கலகெதர கோட்டையே கைநழுவிப் போயுள்ள விபரீதம் தலைமையை சற்று அளவுக்கதிகமாக உஷாரக்கியுள்ளது. 

தோல்வியில் சளைக்காத மு. கா தலைமை இம்முறை அதிரடி வேகத்தில் இறங்கியிருப்பது ராஜபக்ஷக்களின் இன ஓர்மை அரசியலுக்கான பதிலீட்டுக்காய்களை நகர்த்துவதற்கான வியூகமாகவே பார்க்கப்படுகின்றது 

வெற்றி பெருமிதத்தில் தேசிய காங்கிரஸ் திளைத்திருக்க, இந்த அலைகளுக்குள் அலையும் வாக்காளர்கள் திசை திரும்பினால் தனித்துவ    காங்கிரஸ்களின்  இருப்புக்கள் சவாலா குமா?இத்தனைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அம்பாரையில் தனித்துக் களமிறங்கும் களப் பரீட்சையில் இறங்கவுள்ளதாம்.சமூக சவால்களை எதிர்கொள்ள ஓரணியில் திரண்டு புனித உம்ராவுக்கும் சென்று வந்த தலைமைகள்  பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில்  பிரிந்து போட்டியிடுமானால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒற்றுமையை தேசிய காங்கிரஸ் கேள்விக்குறியாக்கலாம்.  இக் கேள்விகளை  கிளறிவிட்டுக் காய்பறிக்க காத்திருக்கும் தேசிய காங்கிரஸுக்கு கனிகள் கொடுப்பது போன்றே இச்செயற்பாடுகள் அமைந்து விடலாம். எதைச் சொல்லி இத் தலைமைகள் எதிர்கால  வியூகங்களை  நிலைப்படுத்துவர்.

ஆதரவளித்த வேட்பாளரும் தோற்றாயிற்று.எதிர்க்கட்சியில் இருப்பதாகவும் தீர்மானித்தாயிற்று.வாக்காளர்களை உணர்ச்சியூட்ட  உள்ள வழியென்ன?தனித்துவமா?தனி அலகா?நிர்வாக மாவட்டமா? இவற்றில் எதை எதை எடுத்தாலும் தென்னிலங்கையில் ராஜபக்‌ஷக்களின் கோட்டைகள் தலை நிமிரவுள்ள யதார்த்தத்தில் எதைக்கோருவது?.

அண்மைய தேர்தலில் சமூக உரிமை பற்றி அடக்கி வாசித்த இத் தலைமைகள், ராஜபக்ஷக்களை வீழ்த்துவதற்கான அர்சியல் சமரில் சறுக்கினாலும் அடுத்த வாய்ப்புக்கு வழி திறக்கும் வகையில் பிரச்சாரங்களை முடுக்கி  விடும். 

இத்தனைக்கும்   பாராளுமன்றத்தில் பலத்தை நிரூபித்து பேரம்பேசலில் ஜனாதிபதியைப் பணிய வைப்போம் என்று சொல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிபிளவு படாமல் ஒற்றுமையாய் பயணிப்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts