பிராந்தியம் | அரசியல் | 2019-11-12 09:32:33

தமிழர்களை அழித்ததுபோல் முஸ்லிம்களையும் அழிப்பதற்கு சதி! கோட்டாவுடன் இருக்கும் பேரினவாதிகள் திட்டம்

ஊடகப்பிரிவு

தமிழர்களை கொன்றொழித்ததுபோல் முஸ்லிம்களையும் கொன்றொழிப்பதற்கு கோட்டாவுடன் இணைந்திருக்கும் பேரினவாதிகள் முயற்சி செய்கிறார்கள்.இவர்களிடம் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கு கோட்டாவை தோற்கடித்து சஜித்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.''

இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.சம்மாந்துறையில் நேற்று [11.11.2019] இடம்பெற்ற பெண்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து கூறுகையில்;

கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் நாம் பட்ட துன்பங்களை  நாம் அறிவோம்.எமக்கு எதிராகப் பல அநியாயங்களை செய்தனர்.

மஹிந்தவின் ஆட்சியில் அளுத்கமவை அழித்தார்கள்.இந்த ஆட்சியில் அம்பாறை பள்ளிவாசலை உடைத்தார்கள்.திகன,குருநாகல்,மினுவாங்கொட போன்ற இடங்களில் வீடுகளையும் கடைகளையும் எரித்தார்கள்.

அவ்வாறு செய்தவர்கள் வேறு யாருமல்ல.கோட்டாவுடன் இருக்கும் தீவிர பௌத்த இயக்கங்கள்தான்.

இவர்கள்தான் இப்போது எம்மிடம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்.வாக்குகளைப் பெற்றுவிட்டு தேர்தல் முடிந்து மீண்டும் அவர்களது வேலையைத் தொடங்கிவிடுவார்கள்.

எவ்வாறு தமிழர்களை கொன்றொழித்தார்களோ அதேபோல் முஸ்லிம்களையும் அழிப்பதற்கு இந்த பேரினவாத இயக்கங்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.எங்களது தனித்துவமான சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

இதற்கு இடம் கொடுக்க முடியாது.எமக்கு ஒரு தனித்துவமான கலாசாரம் உண்டு.அதை மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது.

இந்த ஆபத்துக்களில் இருந்து எம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால் இந்தப் பேரினவாதிகளுடன் இணைந்திருக்கும் கோட்டாவை நாம் தோற்கடித்து சஜித் பிரேமதாசாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் எங்களை முந்திக்கொண்டு நீங்கள் தீர்மானமெடுத்தீர்கள்.மைத்திரியையே ஆதரிக்க வேண்டும் என்று.உங்களின் பின்னால்தான் நாங்கள் வந்தோம்.

இம்முறையும் நீங்கள் அதே அக்கறையை-தீவிரத்தைக் காட்ட வேண்டும்.சஜித்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.எம்மை அழிப்பதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நிற்கும் பேரினவாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

எல்லோரும் தவறாமல் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்.வாக்களிப்பது மாத்திரம் முக்கியமல்ல.வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டும்.90 வீதமான வாக்களிப்பு இடம்பெற வேண்டும்.-என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts