கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-10-29 17:08:54

எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே மாவட்ட எழுத்தாளர் பேரவை - மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ் )

எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே அம்பாரை மாவட்ட எழுத்தாளர் பேரவை அமைக்கப்பட்டுள்ளது என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்மொழி மூலமான 13 பிரதேச செயலகங்களிலும் உள்ள புத்தக எழுத்தாளர்களை ஒன்று திரட்டி கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் அம்பாறை மாவட்ட எழுத்தாளர் பேரவை ஒன்றை அமைப்பதற்கான சந்திப்பும் கலந்துரையாடல் நிகழ்வும்(26) சாய்ந்தமருது மாளிகைக்காடு கமு/சபீனா வித்தியாலயத்தில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்ஸான் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேலதிக அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,
இன்று அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான பிரதேச செயலகங்களின் கலாசார செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் திருப்தியான முறையில் முன்னெடுக்கப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
எமது மாவட்டத்தில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், படப்பிடிப்பாளர்கள் என்று பல இலக்கிய செயற்பாடுகள் வெற்றிகரமாக நடைபெற்றுவருகின்றன பல்வேறுபட்ட அமைப்புகள், சங்கங்கள் இருந்தபோதிலும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் புத்தக வெளியீட்டாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அம்பாறை மாவட்டத்திற்கான ஒரு எழுத்தாளர் பேரவையை அமைக்க எடுத்திருக்கும் இந்த முயற்சி சிறப்பானதாகும். இது வெற்றிபெறும் என நம்புகின்றேன்.

உண்மையாகவே எழுத்தாளர்கள் ஒரு திருப்திக்காகவே எழுதுகிறார்கள். எழுத்தாளர்கள் வெளியீடுகளை செய்வதிலும் அறிவு ரீதியான சிந்தனையிலும் வறுமையில் இருக்கிறார்கள். இவற்றை நாம் கட்டி எழுப்ப வேண்டும். முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். எழுத்தாளர்களுக்கு இடையில் ஐக்கியம், நல்லுறவை வளர்க்க வேண்டும். எல்லோரும் எழுத்தாளர்கள் என்ற ரீதியில் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். விமர்சனங்களை முன்வைப்பார்கள் அடுத்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றன. இன்நிலை மாறவேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற மனப்பக்குவம் இருக்க வேண்டும். நவீன சிந்தனைகளை கடந்து செல்வதற்கு இது மிக முக்கியமான ஒன்றாகும் காணப்படுகின்றது. விமர்சனங்களை திருத்தி அமைத்துக்கொண்டு முன்னோக்கிச்செல்ல வேண்டும்.

எழுத்தாளர்கள் மத்தியில் அவர்களுடைய புத்தகங்களை வெளியிடுவதற்கு வாய்ப்பு, வசதிகள் இல்லாமல் எத்தனையோ புத்தகங்களை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். அவற்றை இந்தப் பேரவையின் ஊடாக எதிர்காலத்தில் வெளியிடுவதற்கும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். உண்மையில் இந்த செயற்பாட்டை வரவேற்கின்றேன். இதற்கு உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும் கட்டாயமானதாகும். இந்த செயற்பாட்டை முன்கொண்டு செல்வதற்கு முன் வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன் என்றார்.
நிகழ்வின்போது  அம்பாரை மாவட்டத்தில் முதல்முறையாக
எழுத்தாளர் பேரவையும்  அமைக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts