தொழிநுட்பம் | கல்வி | 2019-10-09 18:16:34

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப் புதிய கைத்தறி நெசவு இயந்திரத்தை  கண்டுபிடித்து சாதனை

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் பன்னிரண்டாம் ஆண்டு கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப் என்ற மாணவன் மனித சக்தி இல்லாமல் இயங்கக்கூடிய கைத்தறி நெசவு இயந்திரத்தை புதிதாக கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமாக அமைந்துள்ள மருதமுனை எனும் கிராமம் நெசவு தொழிலுக்கு பெயர்போன கிராமமாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழும் மக்கள் தமது பிரதான ஜீவனோபாய தொழிலாக நெசவு உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை வரலாற்றுச் சான்றுகள் ஊடாக அறியமுடிகிறது. ஆரம்ப காலங்களில் கைத்தறி நெசவுத் தொழிலை செய்வதற்கு நிலத்தில் குழி தோண்டி அந்தக் குழியை கைத்தறியாக பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொண்டு வந்துள்ளனர்.
பின்னரான காலப்பகுதிகளில் அது பல்வேறு கால கட்டங்களில் வளர்ச்சி அடைந்தது. இன்று பலவகையான நூல்களை பயன்படுத்தி வகை வகையான கைத்தறி நெசவு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நெசவு உற்பத்திக்கு அன்று தொடக்கம் இன்று வரை மனித சக்தியே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. நூல் வகைகளை கலர் செய்வது, பின்னர் நூல் கட்டைகளாக சுற்றப்பட்டு நவீன டிசைன்களுக்கு ஏற்ப பா ஓடப்பட்டு பின்னர், கை தறி நெசவாக நெய்யப்பட்டு பல்வேறு வடிவங்களில் இந்த கைத்தறி நெசவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருதமுனையின் கைத்தறி நெசவு உற்பத்திக்கு இலங்கையில் மாத்திரமல்லாது வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மருதமுனை கிராமத்திலுள்ள சுமார் 85 வீதத்திற்கு மேற்பட்ட வீடுகளில் தற்போது நெசவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1965ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட நெசவு உற்பத்திகளின் வருகை இந்த பிரதேசத்தின் நெசவு உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பின்னர் 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சூறாவளியின் காரணமாக இப்பிரதேசத்தில் இருந்த நெசவு உற்பத்திக்கான இயந்திரங்களும் இதர பொருட்களும் காவு கொள்ளப்பட்டன. பின்னர் ஏற்பட்ட உள்ளூர் யுத்தம் காரணமாக நெசவு உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் இங்குவாழும் மக்கள் பாரிய இடர்பாடுகளை அனுபவித்தனர். இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மருதமுனை கிராமத்தின் நெசவுத் தொழிலும் அழியும் அபாய நிலைக்கு சென்றது. இருப்பினும் அது புது வடிவம் பெற்று மீண்டும் புதிய பரிணாமத் தோடு இப்போது நெசவுத்தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில்தான் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் மாணவன் ஏ.எம்.அஸ்மத் ஷராப் மனிதர்களது சக்தி இல்லாமல் சதரண மின்வலுவில் தானாக இயங்கக்கூடிய கைத்தறி நெசவு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்  2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் திகதி மருதமுனையில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை பொலன்னறுவை கனவல்பொல முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 4 வரை மேற்கொண்டார். பின்னர் இடைநிலைக் கல்வியை தரம் 5 தொடக்கம் சாதரணதரம் வரைக்கும் மருதமுனை அல்-ஹம்ரா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டார். உயர்தரக் கல்வியை கற்பதற்காக மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியை தெரிவு செய்து தற்போது தரம் 12ல் கணிதப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.

மிகவும் பின்தங்கிய குடும்ப பின்னணியை கொண்ட  அஸ்மத் ஷராப் தற்போது மருதமுனையின் மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய 65 மீட்டர் வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்து வருகின்றார்.இவர் ஆதம்பாவா உம்மு நளீபா, அப்துல் ஹமீத் அப்துல் மஜீத் ஆகியோரது மூத்த புதல்வனனாவார். 

சுமார் நூற்றாண்டு கடந்து மனிதர்களது சக்தியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த கைத்தறி நெசவு உற்பத்தியில் மாணவனது இந்த கண்டுபிடிப்பு மருதமுனையில் பொருளாதார வளர்ச்சியில் மாத்திரமல்ல கைத்தறி நெசவு உற்பத்தியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றத்தை  இவரது கண்டுபிடிப்பு  உண்டுபண்ணக் கூடியது.  என பாடசாலையின் அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல்.சக்காப் தெரிவித்தார்.

சாதனை மாணவனின் தந்தை அப்துல் ஹமீத் அப்துல் மஜீத் தனது மகன் சாதனை மாணவன் ஷராப் சிறுவயதிலிருந்தே வீட்டுச் சூழலும் ஏனைய இடங்களிலும் காணப்படும் கழிவு பொருட்களை பயன்படுத்தி பல சாதனைகளை செய்துள்ளார் என்றார்.

இளம் சாதனை மாணவன் ஷராப் கண்டுபிடித்துள்ள மனித வலு இல்லாமல் இயங்கக்கூடிய கைத்தறி நெசவு இயந்திரமானது மனித வலுவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் அளவிலும் பார்க்க பன்மடங்கு அதிகரித்து உற்பத்திகளை பெறக்கூடியதாக அமைந்துள்ளது. இதன் வளர்ச்சி நெசவு உற்பத்தி கிராமமான மருதமுனைக்கு மாத்திரமல்ல முழு இலங்கை நாட்டிற்கும் பெரும் வரப்பிரசாதமாகும். மாணவன் இன்னும் பல புதிய சாதனைகள் நிகழ்த்துவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நாமும் மாணவனை வாழ்த்துகிறோம்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

போலியான செய்திகளை கண்டறிவது எப்படி?

Popular Posts