உள்நாடு | அரசியல் | 2019-10-09 11:59:09

வேட்பாளராக நிற்பதில்லை என்கிற தீர்மானத்துடனேயே ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தை செலுத்தினேன் - முன்னாள் அமைச்சர் பஷீர் விளக்கம்

கட்டுப்பணத்தை செலுத்துகின்ற பொழுதே வேட்பு மனுவை தாக்கல் செய்வதில்லை என்கிற முன்முடிவுடனேயே கட்டுப்பணத்தை செலுத்தினார் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்து உள்ளார்.

கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்யாதது குறித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

இவரின் அறிக்கை வருமாறு:-

நான் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது பற்றிய செய்தி ஊடகங்களில் வெளி வந்திருந்தது. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பது பற்றியும் செய்திகள் வெளியாகின. எனவே ஏன் கட்டுப்பணம் செலுத்தினேன்? ஏன் நியமன பத்திரம் தாக்கல் செய்யவில்லை? என்பன பற்றி தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

நான் கட்டுப்பணம் செலுத்திய வேளை வேறெந்த சிறுபான்மை அரசியல்வாதிகளும் பணம் செலுத்தியிருக்கவில்ல.பின்னர் பலர் தேர்தலில் வேட்பாளராக போட்டியில் இறங்குவதற்கு முனைந்தனர்.
நான் பணம் கட்டுவதற்கு முன்னரே தமிழ்பேசும் பொது வேட்பாளர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற கருத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தேன். ஆயினும் இந்த கருத்து மக்களையும் குறித்த சிறுபான்மைத் தலைவர்களையும் சென்றடைவதற்கான கால அவகாசம் இருக்கவில்லை.

 தமிழ் முஸ்லிம் கட்சிகளும் குடிமைச் சமூக முக்கியத்தர்களும் கூடிப் பேசி பொது முடிவொன்றுக்கு வராமல் தமிழ் பேசும் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதை நான் முன்னரே உணர்ந்திருந்தாலும் இப்படியான ஒரு பொது வேட்பாளர் பற்றிய கருது கோள் இத்தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்டு தமிழ் பேசும் அரசியல் அரங்கில் அறியப்படுவது எதிர்காலத்தில் இத்தகைய வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதற்கான சாதகத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.இக்கருத்து சிறிதளவாவது மக்களைச் சென்றடைய கட்டுப்பணம் செலுத்தும் செயல் செய்யக்கூடும் என்பதனால்தான் அதனைச் செய்தேன். கட்டுப்பணம் செலுத்தும் போதே வேட்புமனு தாக்கல் செய்வதில்லை என்ற முன் முடிவோடுதான் இருந்தேன்.

2005 ஆம் ஆண்டு வடக்குத் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் விட்டமைதான் அவ்வாண்டு மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கியது. 2010 ஆம் ஆண்டும் தமிழ் மக்கள் அளித்த வாக்கு வீதம் மிகக் குறைவாக இருந்தமையும், முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு 2005 ஆம் வருடத் தேர்தலில் வழங்கிய வாக்குகளை விட  2010 இல் அளித்த வாக்குகளில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டமையும் அவரை இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக்கியது. 2015 இல் நடைபெற்ற தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஏகோபித்து வழங்கிய மில்லியன் கணக்கான வாக்குகள் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கதிரையில் அமர்த்தின.

ஆனால் 2005 இல் தமிழர் எடுத்த முடிவு தமிழரின் ஆயுதப் போராட்ட அரசியலை முடித்து வைத்தது.முஸ்லிம்களும் அடைந்தது என்று குறித்துரைக்க எதுவுமில்லை. 2010 தேர்தலின் பின்னரான ஐந்து வருட காலத்துள் தமிழ்பேசும் மக்கள் எதனையும் அடையவில்லை. 2015 தேர்தலின் பின்னர் கடந்த சுமார் ஐந்து வருடங்களும் வீணாகிப் போனதை யாவரும் அறிவோம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005 மற்றும் 2010 ஜனாதிபதித் தேர்தல்களை நானே தலைமை தாங்கி நடாத்தினேன். இவ்விரண்டு தேர்தல்களிலும் ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் மாவட்ட அடிப்படையில் வீதாசார ரீதியாக நோக்குகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலேதான்  அதிகமான வாக்குகளைப் பெற்றனர்.2015 ஆம் ஆண்டைய தேர்தலில் நான் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எந்தக் கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவாக கள வேலைகளில் ஈடுபடவோ எனது வாக்கைத்தானும் வழங்கவோ இல்லை.சிறுபான்மை மக்கள் ஒருசேர ஒரே வேட்பாளருக்கு ஆதரவாக அணி திரண்டிருந்த போதும்; கிடைத்திருந்த அநுபவம் காரணமாக எனக்குள் அந்த தேர்தல் பற்றி அவநம்பிக்கை துளிர்த்திருந்தமையே மேற்சொன்ன எனது முடிவுக்கு காரணமாயிருந்தது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் தாம் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் சிறுபான்மையினர் எவ்வித நன்மைகளையும் அடையப் போவதில்லை; தோற்றுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்ற எனது நம்பிக்கைதான் தமிழ்பேசும் பொது வேட்பாளர் என்ற கருத்தை வெளியிடக் காரணமாக அமைந்தது.
ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பதில் இருந்தும்,தாம் ஏமாறுவதற்கு புதிய வேட்பாளர்களைத் தேடுகிற போக்கில் இருந்தும் எமது சமூகங்கள் விடுபட்டு அறிவுபூர்வமாக முடிவுகளை எடுக்கவும், சிந்தனாபூர்வமான தலைமைத்துவங்களை  வருங்காலத்தில் உருவாக்கவும் முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பொதுவான பல பிரச்சினைகளும் வெவ்வேறான சில பிரச்சினைகளும், அபிலாசைகளும் உள்ளன. தமிழ்த் தேசிய அரசியலுக்கும் முஸ்லிம் தேசிய அரசியலுக்கும் சிங்கள பெருந்தேசிய அரசாங்கங்களுடன் உடன்படவும் முரண்படவும் நிறைய விடயங்கள் உள்ளன. இவ்விடயங்களில் சிறுபான்மையினராக இணைந்து உறுதி பெற்று பெரும்பான்மையோடும் வெளிநாட்டு சக்திகளோடும் பேசுவதற்கும், தமிழ் முஸ்லிம் சிறுபான்மைத் தேசியர்களுக்கிடையில் உள்ள பிரச்சினைகளைத் தமக்குள் பேசி முடிவு காண்பதற்கும் தமிழ்பேசும் வேட்பாளர் என்ற எண்ணக் கரு ஒரு புதிய பாதையைத் திறக்கும் என்ற நம்பிக்கையை நான் கொண்டிருக்கிறேன்.தமிழ் முஸ்லிம் அரசியல் உடன்பாடு எட்டப்படாமல் சிறுபான்மையினருக்கு விடிவு இல்லை என்ற எண்ணத்தினால் எனது அரசியல் வாழ்வு நெடுகிலும் இவ்வுறவுக்காக பேசியும் எழுதியும் வந்துள்ளேன் என்பதை மக்கள் அறிவார்கள்.


Related Posts

Our Facebook

Popular Posts