உள்நாடு | அரசியல் | 2019-10-06 11:06:44

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் விவகாரம் தொடர்பில்!

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- 


நல்ல செயலாளர்தான் போங்கோ...! என்ற தலைப்பில் எனது முகநூலில் நேற்று (04) ஒரு பதிவை வெளியிட்டு அதில் 'அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு செயலாளர் என்று ஒருவர் உள்ளாரா? அவர் செயல் ஆற்றல் உள்ளவராக இருக்கிறாரா என்பதில் எனக்கு இப்போது பலத்த சந்தேகம்!' என்று ஆரம்பித்து பல விடங்களைத் தெரிவித்திருந்தேன்.

தனிப்பட்ட முறையில் மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைதீன் ஹாஜியார் அவர்கள் சிறந்த மனிதர் என்பதில் என்னிடமும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் வகிக்கும் செயலாளர் என்ற பதவியில் அவர் சிறப்பாகச் செயற்விடவில்லையே என்பதே எனது மன ஆதங்கமாக இருந்தது.

ஆனால், இப்போதுதான் அவரது மௌனத்தின் காரணங்கள் தெளிவாகின.

18-09-2019 ஆம் திகதி இடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த நால்வருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

'2019 சனாதிபதித் தேர்தலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகக் கருதப்படமாட்டாதென்பதை அறிவித்தல்' என்ற தலைப்பில் EC/CHCO/02/03 இலக்கமிடப்பட்டு அந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (எனக்கு கிடைத்த குறித்த கடிதத்தின் பிரதியை இங்கு வெளியிட்டுள்ளேன்)

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் நோக்கும்போது எஸ்.சுபைதீன் ஹாஜியார் அவர்கள் வகிக்கும் செயலாளர் பதவி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாகவே அவரால் செயற்பட முடியாது, மௌனமாக இருக்கிறார் என்ற தீர்மானத்துக்கு வரக் கூடிய சாத்தியமே அதிகம்.

எனவே இந்தக் கடிதத்தின் அடிப்படையில் அவர் கட்சிச் செயலாளராகச் செயற்படாது இருப்பாரானால் அவர் மீது குற்றஞ் சுமத்த முடியாது என்ற தீர்மானத்துக்கு வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்.

ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் விவகாரம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு விரைவாக எட்டப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் மட்டுமல்ல. மேலும் பல தேர்தல்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
நீதிமன்றத்தில் இந்த விவகாரம் உள்ளது என்பது ஒரு புறமாக இருக்க, இது தொடர்பில் வெளியே இருந்து ஓர் இணக்கமான, பரஸ்பர புரிந்துணர்வான முடிவை சம்பந்தப்பட்ட தரப்பினர் கண்டு அதனை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வருவதன்மூலம் வழக்கை முடிவுறுத்த முடியும் அல்லவா? அது கட்சிக்கும் ஆரோக்கியமாக அமையும்தானே?


Related Posts

Our Facebook

Popular Posts