பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-08-11 14:00:03

உரிமைகளை விட்டுக்கொடுக்காது வாழ்வொழுங்குகளை சீர்படுத்திக் கொள்வோம்..!  -கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சமூக, கலாசார ரீதியில் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்ற முஸ்லிம்கள், தம்முடைய தனித்துவமான உரிமைகளை விட்டுக்கொடுக்காதவாறு தமது வாழ்வொழுங்கு முறைமையை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

மனிதனைப் புனிதப்படுத்துகின்ற ஹஜ் எனும் தியாகம் நிறைந்த வணக்கம் எமக்கு நிறைய படிப்பினைகளைக் கற்றுத் தருகின்றது. முஸ்லிம்களிடையே காணப்பட வேண்டிய ஒற்றுமை, சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு விடயம் ஹஜ்ஜை விட வேறு எதுவும் இருக்க முடியாது. ஹஜ் போதிக்கும் தத்துவங்களை ஒவ்வொருவரும் தமது வாழ்வில் கடைப்பிடிப்பாராயின் முஸ்லிம் சமூகத்தில் ஒருபோதும் பிளவுகளோ பிணக்குகளோ ஏற்பட வாய்ப்பிருக்காது.

தவிரவும் இறையச்சத்துடன் தீய நடத்தைகளைத் தவிர்த்து, நற்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் எந்தவொரு மனிதரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுபவர்களாகவும் நாம் மாறுவதற்கு ஹஜ் வழிகாட்டுகிறது.

இன்றைய எமது நாட்டுச் சூழலில் முஸ்லிம்கள், மாற்று இனங்களை சேர்ந்த சகோதரர்களுக்கு முன்மாதிரி மிக்க மனிதர்களாக வாழ்வதன் மூலமே, அவர்கள் எம்மீது கொண்டிருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக வாய்ப்பேற்படும்.

ஏனெனில் எம்மில் ஒரு சிலர், தீய சக்திகளின் சூழ்ச்சிகரமான திட்டத்தில் சிக்குண்டு, அவர்கள் ஒரேயொரு தடவை மேற்கொண்ட அந்தப் பயங்கரவாத நிகழ்வானது, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நிம்மதியையும் சீர்குலைத்திருப்பதுடன் இந்த நாட்டில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த சமய, கலாசார, சமூகம் சார்ந்த உரிமைகளை இழக்கின்ற ஆபத்தையும் எதிர்நோக்கியிருக்கின்றோம். இதனால் எமது முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

ஆகையினால் இந்த அபாயகரமான சூழ்நிலையில் இருந்து முஸ்லிம் சமூகம் உடனடியாக மீட்கப்பட வேண்டுமாயின் எமது வாழ்வொழுங்கு மீளமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்து செயற்பட இன்றைய ஈகைத்திருநாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதுடன் அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts