உள்நாடு | அரசியல் | 2019-06-05 01:44:49

சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்: றிஷாட்

ஐக்கியம், சமாதானத்தில் முஸ்லிம்களுக்குள்ள விருப்பத்தை, ஏனைய சமூகத்தினர் புரிந்து கொள்ளும் சுமுக நிலை உருவாகப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எவரும் எதிர்பாராது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடிகளுக்குள்ளாகி உள்ளது.ஒரு சிலரின் கொடிய கோட்பாடுகளை.இஸ்லாத்துடன் இணைக்கும் சில மத நிந்தனையாளர்களின் போக்குகளும் முஸ்லிம்களை வேதனைப்படுத்துகின்றன. 

தாய் நாட்டுடன் ஒன்றித்துப் பயணிக்கும் முஸ்லிம்களின் அபிலாஷைகளைத் திசை மாற்றிவிடவே இத்தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இவர்களின் இக்கெடுதல் நோக்கங்களுக்கு பெரும்பான்மை ஊடகங்கள் சில கைகொடுத்துள்ளமை சமூக, சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளையும் பாதித்துள்ளது. இது குறித்து அரசாங்கம் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. என்ன கெடுதல்கள் ஏற்படினும் ரமழானின் பயிற்சியில் பெற்றுக் கொண்ட பொறுமையை முஸ்லிம்கள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதே எமக்கு எதிரான விரோதிகளைத் தோற்கடிக்க உதவும்.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கத் திட்டமிட்டுள்ள கடும்போக்கர்களின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளுக்குப் பலியாகி எம்மை,நாமே அழித்துக் கொள்ளும் சூழலை ஏற்படுத்திவிடக் கூடாது. புனித ரமழானில் முஸ்லிம்கள் கையேந்திக் கேட்ட அனைத்துப் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. சிறு காரணங்களுக்காகவும் அநியாயமாகவும் கைதாகியுள்ள எமது சகோதரர்களை விடுவிப்பதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறுவதில் எமது சமூகம் கூட்டாகச் செயற்பட வேண்டியுள்ளது. இந்தக் கூட்டுச் செயற்பாடுகள் எம்மில் எஞ்சியுள்ள பயங்கரவாதிகளையும் பூண்டோடு ஒழிப்பதற்கும் பங்காற்ற வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.

எனவே நாட்டின் தற்போதைய நிலைமை சீரடையவும் கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் விசேட துஆப்பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் எமது சமூகத்திற்கு அவசியமாகிறது.

அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts