உள்நாடு | சமூக வாழ்வு | 2019-06-05 01:41:01

இந்நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டிய இறுதி வார்த்தை- அஷ்செய்க் ரிஸ்வி முப்தி

நாம் இந்த நாட்டில் எதிர்காலத்தில் சிறப்பாகவும், கண்ணியமாகவும் வாழவேண்டும் என்றிருந்தால், நாம் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்செய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இன்று மஃரிப் தொழுகையுடன் கூடிய பிறைக் குழுக் கூட்டத்தின் தீர்மானத்தை அறிவித்துவிட்டுக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
நாம் ஒற்றுமையுள்ள சமூகமாக மாறவேண்டும். இந்த நாட்டுப் பெரும்பான்மை சமூகத்துக்கு இஸ்லாத்தைப் பற்றி அறிமுகப்படுத்தாததும், அதிலுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யாததும்தான் இந்நாட்டில் ஆகப்பெரிய சோதனைக்கு நாம் ஆளாவதற்குக் காரணம்.
நாம் இந்த நாட்டில் எதிர்காலத்தில் சிறப்பாகவும், கண்ணியமாகவும் வாழவேண்டும் என்றிருந்தால், நாம் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இந்நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டிய இறுதி வார்த்தையொன்று இருக்குமாக இருந்தால், அது இதுவாகத்தான் இருக்கும்.
ஒவ்வொரு மஸ்ஜிதும், ஒவ்வொரு மத்ரஸாக்களும் முன்மாதிரி மிக்க சமூகமாக மாறவேண்டும். நமக்கு மத்தியில் தீவிரவாதத்தைப் போக்குவதற்கு முயற்சி செய்வது எப்படிக் கடமையோ, அதேநேரத்தில் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதும் கடமையாகும். ஒருவர் ஒருவரை காட்டிகொடுப்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் முன்மாதிரியாக நடந்துகொள்வது இன்றியமையாதது.
நாளை பெருநாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்ற வழிகாட்டலை ஜம்இய்யா வழங்கியுள்ளது. அதனைப் பின்பற்றி நடந்துகொள்ள முன்வரவேண்டும். சிறுபிள்ளைக்கு எப்படி மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பது கடமையோ, முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரர்களுக்கு இந்த மார்க்கத்தை அறிமுகம் செய்வது அத்தியாவசிய தேவையாகும்.
விட்டுக் கொடுப்பு, ஒருவருக்கு ஒருவர் துஆச் செய்தல் என்பவற்றில் நாம் ஈடுபட வேண்டும். எம்மிடையே ஏற்பட்ட சந்தேகத்தின் காரணத்தினால், மாற்று மத சகோதரர்களுக்கு எங்களைப் பற்றிய ஒரு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. நம்மத்தியில் ஒற்றுமையின்மை காரணத்தினால், நம்மை அடையாளம் காண்பது அவர்களுக்கு சிரமமாக மாறியுள்ளது.
இதனால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு, எம்மிடையேயுள்ள வேற்றுமைகளைக் கலைந்து ஒருவர் ஒருவரை மதித்தவர்களாக நடந்து கொள்ள வேண்டும். எம்முடைய பெருநாள் சந்தோசமான பெருநாளாக அமைய பிரார்த்திப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts