விளையாட்டு | விளையாட்டு | 2019-04-08 00:18:02

இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற விடயங்களை தவிர்த்து இன நல்லுறவைக் கட்டியெழுப்பவதற்கான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது- முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்

(பி. முஹாஜிரீன்)

'விளையாட்டின் மூலமாக இன, மத வேறுபாடுகளைக் களைந்து நாம் ஒவ்வொருவரும் உறவினர்களாகவும் நண்பர்களாகவும் செயற்படுகின்ற யதார்த்தத்தை நாம் காண்கின்றோம். இன்று நாட்டிற்குத் தேவையான விடயமும் அதுதான். எங்களுக்குள் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற விடயங்களை தவிர்த்து இன நல்லுறவைக் கட்டியெழுப்பவதற்கான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது' என தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி  அதிகாரசபையின் தலைவரும் கிழக்க மாகாண முன்னாள் முதலமைச்சரும் வடக்கு கிழக்கு மாகாண ஜனாதிபதி செயலணியின் ஆலோசகரமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தின் ஏற்பாட்டில், நேற்று சனிக்கிழமை மாலை (06) நடைபெற்ற 'நைட்டா விளையாட்டு விழா – 2019' நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் Nமுற்கண்டவாறு கூறினார்.

மாவட்ட பயிற்சி முகாமையாளர் ஏ. மசூர் தலைமையில் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர், நைட்டா தலைவர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'இந்த தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையைப் பொறுப்பெடுத்த நாளிலிருந்து இதன்மூலம் நாம் எப்படியான விடயங்களை சாதிக்க முடியும் என்று எமது கவனத்தை குவித்திருக்கிறோம். குறிப்பாக இந்நிறுவனத்திலே மூன்று முக்கிய பலங்களை அடையாளப்படுத்தியிருக்கிறோம்.

முதலாவது பலம் மனித வளம் நிறைவாக காணப்படுகின்றது. துறைசார்ந்தவர்கள், நீண்ட அனுபவத்தைக் கொண்டவர்கள், திறமைசாலிகள், சிறந்த விரிவுரையாளர்கள் என்று ஒவ்வொரு துறையிலும் ஆட்பலம் கொண்ட நிறுவனமாக நைட்டா நிறுவனம் காணப்படுகிறது.

இரண்டாவது பலம், உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவு காணப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அலுவலகங்கள் காணப்படுகின்றன. அதன் மூலம் நைட்டாவை அபிவிருத்தி செய்யக்கூடியதாகவிருக்கும். மூன்றாவதாக அரசாங்க அங்கீகாரம் கொடுக்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஒரு சபையாக இந்நிறுவனம் காணப்படுவது முக்கியமான பலமாகும். 

தற்போது மாணவர்கள் கல்வி கற்கின்றபோது, அவர்கள் ஒரு வைத்தியராக அல்லது பொறியியலாளராக வரவேண்டுமென்பதில் நமது சமூகம் அக்கறை காட்டுகின்ற விடயத்தை நமது வட கிழக்கு மாகாணங்களிலே அதிகமாகக் காண்கின்றோம். இவற்றுக்கப்பால், இவற்றை விடவும் திறமையான முக்கியமான தொழிற்றுறைகள் காணப்படுகின்றன என்பதை மாணவர்களுக்கு சுட்டிக்காட்டத் தவறுகின்ற நிலை காணப்படுவதை நாம் உணர்கின்றோம்.

மாணவர்கள் தொழிற்றுறையில் முன்னேறுவதற்கு எத்தனையோ வழிகள் காணப்படுகின்றன. அந்த வழிகளை திறந்து கொடுக்கின்ற முக்கிய நிறுவனமாக நைட்டா நிறுவனம் தொழிற்படுவதை நான் பார்க்கின்றேன். இதிலே பல்வேறு வகையான கற்கைகள் காணப்படுகின்றன. நைட்டா நிறுவனம் மூலம் தொழில் இல்லாதவர்களுக்கு மட்டுமல்ல தொழில் வல்லுநர்களாக மக்களை மாற்றுவதற்கு எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ, அவ்வாறான திட்டங்களை நாம் வகுத்துச் செயற்படுகின்றோம்.

இதன்மூலம் இன்னும் மூன்று விடயங்களை நாம் சாதிக்க முடியும் என நம்புகின்றோம். ஒருவர் சரியான முறையில் ஒரு தொழிற் துறையில் பயிற்றுவிக்கப்படுகின்றபோது அவர் சுயதொழில் செய்யக்கூடிய ஒருவராக மாறுகிறார். அல்லது தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக மாறுகிறார். அல்லது வெளிநாடுகளிலே தொழில்வாய்ப்பைப் பெறச் செல்கின்றபோது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒருவராக அங்கு பணியாற்றுவதற்கு தகுதியான ஒருவராக மாற்றப்படுகின்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அதற்கமைவாகவே பல நிகழ்வுகளை நாம் பொறுப்பெடுத்த நாளிலிருந்து தெளிவான முறையிலே செயற்படுத்துகின்றோம். ஒவ்வொரு இடத்திலுமுள்ள வளங்களை அறிந்து, மாவட்ட அலுவலகங்களை பலப்படுத்தகின்ற வகையில் எங்களது செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 

தேசிய ரீதியில் இதுவரை நடைபெற்றிராத வகையிலான தேசிய விளையாட்டுப் போட்டியொன்றை நைட்டா நிறுவனம் பொறுப்பெடுத்துச் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோhம். அது ஜூலைஃ ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும். ஆவ்விளையாட்டு விழா மூலமாக நைட்டா நிறுவனம் இந்த நாட்டிலே முக்கிய நிறுவனமாக அடையாளப்படுத்தப்படும்' என்று அவர் கூறினார்.

இவ்விழாவில், தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பணிப்பாளர் நிலந்த டி சில்வா, உதவிப் பணிப்பாளர் எம். சாஜஹான், மட்டக்களப்பு மாவட்ட பயிற்சி முகாமையாளர் சாதிக் மௌலானா உட்பட ஏறாவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்டக் காரியாலய உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்த கொண்டனர்.

இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், நைட்டாவின் தவிசாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட், பணிப்பாளர் அகியோர் நிகழ்வில் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts