பிராந்தியம் | அரசியல் | 2019-03-03 14:29:47

நாய் இறைச்சி விற்பனை தொடர்பான பிரச்சினையை தெளிவுபடுத்திய காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளர்

(பாறுக் ஷிஹான் , ஏ.எல்.எம்.ஷினாஸ், என்.எம்.எம்.அப்றாஸ்)

நாய் இறைச்சி விற்பனை செய்வது தொடர்பில் எந்த ஊரையும் குறிப்பிட்டு பேசவில்லை எனவும் தனது உரையினை திரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் காரைதீவு பிரதேச சபையின்  பிரதி தவிசாளர் அப்துல் மஜீட் ஜாஹீர் மறுத்துள்ளார்.

காரைதீவு   காரைதீவு பிரதேச சபையின்  பிரதி தவிசாளர் அப்துல் மஜீட் ஜாஹீர் தலைமையில் சாய்ந்தமருது விருந்தினர் விடுதியில்  சனிக்கிழமை (2) இரவு  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது கருத்தில் 

சபையில் என்னால் முன்னெடுக்கப்பட்ட பிரேரணையில் நாய் இறைச்சி தொடர்பான தகவல் ஒன்றை தெரிவித்திருந்தேன்.அதில் குறித்த இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக எந்த ஊரையும் அங்கு சுட்டிக்காட்டவில்லை.

ஆனால் உரையினை திரிவு படுத்தி கல்முனை சாய்ந்தமருது ஊர்களில் நாய் இறைச்சி விற்பனை செய்வதாக கூறியதாக முகநூலில் சிலர் அவதூறு செய்கின்றனர்.இவ்வாறு நான் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.எனது உரையினை முழுமையாக தெளிவாக கேட்டால் புரியும்.ஆனால் அண்மையில்  இந்தியாவில் ரயில் பெட்டி ஒன்றில் பெட்டி பெட்டியாக  மீட்கப்பட்ட நாய் இறைச்சி தொடர்பில் முகநூலில் பார்வையிட்டதாகவும் அது ஆட்டு இறைச்சி என அங்கு  தெரிவிக்கப்பட்டது என்பதையும் பிரேரணை உரையில் சுட்டிக்காட்டி இருந்தேன்.இதில் இந்தியாவில் இடம்பெற்ற சம்பவத்தையே கூறியிருந்தேன் அன்றி இலங்கையையோ அல்லது எந்த ஊரிலோ நாய் இறைச்சி விற்பனை தொடர்பில் பேசவில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகின்றேன்.

ஆனால் என் வளர்ச்சியில் காழ்வுணர்வு கொண்ட சிலர் இன்று நான் ஆற்றிய உரையை திரிவு படுத்தி இலங்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக காட்டி சமூகத்தில் இருந்து என்னை களங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதே வேளை வரவு – செலவு திட்டத்தை எதிர்த்த பின்னணியில் கட்சி அரசியல் இல்லை என்ற  பிரதி தவிசாளர் 2019 ஆம் ஆண்டுக்கான   இந்த வரவு – செலவு திட்டம் குறைபாடுகள் ஒழுங்கீனங்கள் முறைகேடுகள் ஆகியவற்றின் மொத்த வடிவமாக காணப்படுவதன் காரணத்தினால் எதிர்ப்பதாக கூறினார்.

  காரைதீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் மொத்தத்தில் குப்பையாகவே காணப்படுகின்றது. ஆகவேதான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதை எதிர்க்கவும், நிராகரிக்கவும் நேர்ந்தது. மற்றப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரவு – செலவு திட்டம் என்பதற்காக எதிர்ப்பை காட்டி இருக்கவில்லை.

கடந்த 10 ஆம் திகதி மாதாந்த கூட்டத்துக்கு சபை உறுப்பினர்கள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலால் அழைக்கப்பட்டு இருந்தோம். அழைப்பிதழில் மாதாந்த நிகழ்ச்சி நிரல்தான் தரப்பட்டு இருந்தது. வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவது குறித்து நிகழ்ச்சி நிரலில் இருக்கவே இல்லை.

இதற்கு முன்னதாக உத்தேச வரவு – செலவு திட்டத்தை மதிப்பிட்டு பரிசீலிப்பதற்காக கடந்த 06 திகதி உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தோம். அங்கு நாம் மேலோட்டமாக பார்வையிட்டபோது எரிபொருள் செலவுக்கு 450,000 ரூபாய் குறிப்பிடப்பட்டு இருப்பதை கண்ணுற்றோம். இதை 300,000 ரூபாயாக குறைப்பது என்று ஒத்து கொண்டு இணங்கினோம். மாதாந்த கூட்டத்துக்கு பிரதேச சபையின் கூட்ட மண்டபத்துக்கு ஏணி படியால் நாம் சென்று கொண்டிருந்தபோதுதான் வரவு செலவு திட்டத்தின் இறுதி வடிவம் எம்மிடம் சிற்றூழியர் மூலமாக கையளிக்கப்பட்டது.

இதில் 2018 ஆம் ஆண்டு எரிபொருளுக்காக சுமார் 184,000 ரூபாய் செலவானதாக காட்டப்பட்டு இருந்தது. ஆனால் 150,000 ரூபாய்தான் எரிபொருளுக்கு செலவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இதன்படி பார்த்தால் சபையின் அனுமதி பெறமால் தவிசாளர் கூடுதல் செலவை மேற்கொண்டு உள்ளார்.

இதே நேரத்தில் உறுப்பினர்களுக்கு தரப்பட்டு வந்திருக்கின்ற மாதாந்த அறிக்கைகளின்படி வரவு – செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த எரிபொருள் செலவை காட்டிலும் பல மடங்கு கூடுதல் செலவு இடம்பெற்று உள்ளது. இதன்படி பார்க்க போனால் மாதாந்த அறிக்கைகள் சரி என்றால் வரவு – செலவு திட்டம் பிழையானது ஆகும். வரவு – செலவு திட்டம் சரியானது என்றால் மாதாந்த அறிக்கைகள் பிழையானவை ஆகும்.

மைதான திருத்த செலவு, ஓய்வூதிய கொடுப்பனவு செலவு ஆகியன உத்தேச வரவு – செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தபோதிலும் வரவு – செலவு திட்டத்தின் இறுதி வடிவத்தில் மறைத்து ஒளிக்கப்பட்டு விட்டன.

2018 ஆம் ஆண்டில் முத்திரை தீர்வை மூலம் 310,000 ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. வரவு – செலவு திட்டத்தில் வருமான மிகுதியாக 2,000 ரூபாய் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் புதிய ஆண்டில் முத்திரை தீர்வை மூலம் 470,000 ரூபாய் வருமானத்தை எதிர்பார்ப்பதாக வரவு – செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இதில் 100,000 ரூபாய் வருமானம் குறைந்தால்கூட சபை நஷ்டத்தில் இயங்கும். இந்த நஷ்டத்துக்கு யார் பொறுப்பேற்பது? எங்கிருந்து இந்த நஷ்டத்தை ஈடு செய்வது?

இந்த வரவு – செலவு திட்டத்தில் நலன்புரி சேவைகளுக்கான ஒதுக்கீடு மிக சொற்பமானதாக காணப்படுகின்றது. தவிசாளரின் தேவைகளுக்கான எதிர்பார்ப்பு தொகைகள் அதிகரிக்கப்பட்டு நலன்புரி விடயங்களுக்கான தொகை பெரிதும் குறைக்கப்பட்டு உள்ளது கல்வி, நூலக சேவைக்கு 100,000 ரூபாயும், நூலக நன்கொடைக்கு 50,000 ரூபாயும், டெங்கு ஒழிப்புக்கு 150,000 ரூபாயும், விளையாட்டு ஊக்குவிப்புக்கு 50,000 ரூபாயும் மாத்திரமே மொத்தமாக ஒதுக்கப்பட்டு உள்ளன. மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் மக்களின் முகத்தில் எப்படி முழிக்க முடியும் முடியும் என கேள்வி எழுப்பினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts