வெளிநாடு | அரசியல் | 2019-01-14 16:42:28

உலக வங்கித் தலைவராக இவாங்கா? : 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளிப் பெண் போட்டி!

அண்மையில் உலக வங்கித் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்ததை அடுத்து அப்பதவிக்கு தனது சொந்த விருப்பத்தின் பேரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிதாக ஒருவரை நியமிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த உலக வங்கித் தலைவர் பதவிக்கு அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே டிரம்ப் நிர்வாகத்துக்கும் உலக வங்கிக்கும் இடையே கடுமையான மனக் கசப்பும் எதிர்ப்பும் நிலவி வந்த வேளையில் தான் முன்னால் தலைவர் ஜிம் கி யோங் திடீரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதை அடுத்து உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா தற்காலிகமாக தலைவர் பதவிக்கு அமர்த்தப் பட்டுள்ளார். இந்நிலையில் தான் உலக வங்கித் தலைவராக அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் ஐ.நா அமெரிக்க முன்னால் தூதர் நிக்கி ஹலே ஆகியோர் பரிந்துரைக்கப் படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அமெரிக்காவே உலக வங்கியின் மிகப் பெரும் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் 2020 ஆமாண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் 2 ஆவது முறையாகப் போட்டியிடவுள்ள அதிபர் டிரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துல்சி கபார்ட் என்பவர் போட்டியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 2016 ஆமாண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 5 இடங்களில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் துல்சி கபார்ட் போட்டியிடுவாரா என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

4 ஆவது முறையாகவும் ஹவாய் மாநிலத்தில் இருந்து செனட் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட துல்சி கபார்ட் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர், மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த அதிபர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts