சினிமா | சமூக வாழ்வு | 2019-01-14 10:27:39

‘TO LET’ திரைப்படம் : சர்வதேச அரசியல் பிரச்சனையை பேசும் ‘குழந்தையின் சித்திரம்’

அனைவருக்கும் ஒரு பொது கனவு இருக்கிறது. அது வீடு குறித்தான கனவு. அமெரிக்க கவிஞர் மார்க்கரெட் கவிதையிலிருந்து சொல் எடுத்து எழுத வேண்டுமானால் "ஒரு வேனிற்கால மாலை நேரம் மேற்கிலே தேய்ந்து மறையும்போது சின்னப் பயல்க்குட்டிகள் சொட்டச் சொட்டச் ஆடிக்களைத்து திரும்பும் ஒரு வீடு" - அந்த வீடு குறித்த கனவு அனைவருக்கும் இருக்கிறது.

ஒரு மஞ்சள் மாலைப் பொழுதில் வீட்டு வாசலில் ஒரு ஒரு மரத்தில் நிழல் வீடு முழுக்க படருமே அந்த நிழலில் இளைப்பாறும் கனவு அனைவருக்கும் இருக்கிறது. இதுவெல்லாம் இல்லாமல் போனாலும், குறைந்தபட்சம் ஒரு 400 சதுரடி வீட்டை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு கனவு எல்லோருக்கும் இருக்கிறது. தேச எல்லைகள் கடந்த பொது கனவாக அதுதான் இருக்குமென்று நினைக்கிறேன்.

அப்படியான கனவை சுமந்து வாழும் சொந்த வீடற்ற ஒரு குடும்பத்தின் கதைதான் 'டு - லெட்'.

இடம்பெயர்தல்

உலகமயமாக்கலுக்குப் பின் ஐ.டி நிறுவனங்கள் உச்சத்தில் இருந்த சமயத்தில், உலகெங்கும் மிகப்பெரிய அளவில் இடம்பெயர்தல் நடந்தது. படித்த இளைஞர்கள் நகரங்களை நோக்கி படைஎடுத்தார்கள். கனவிலும் நினைத்து பார்க்காத சம்பளம் திடீரென அவர்கள் வங்கிக் கணக்கில் வந்து அமர்ந்தது. அந்த சம்பளத்தை குறி வைத்து புதிது புதிதாக மால்கள் முளைத்தன. நகரம் விதவிதமான செங்கல் வடிவமைப்புகளால் அழகு பெற்றது. நகரம் அவர்களுக்கு ஏற்றவாரு தன்னை மெல்ல உருமாற்றிக் கொண்டது. இது அனைவருக்கும் தெரிந்த கதை

ஆனால், அப்போது இன்னொரு நகரம் மெல்ல உயிர் பெற தொடங்கியது. அது மாநகரங்களால் துரத்தி அடிக்கப்பட்ட அல்லது தூக்கி வீசப்பட்ட மக்கள் குழுமிய புறநகர்.

மாநகரங்கள் முழுக்க முழுக்க பணம் படைத்தவர்களுக்காக மாறிய பின், அங்கு இத்தனை காலம் வாழ்ந்தவர்கள். அந்த மாநகரங்களுக்கு தங்கள் உழைப்பால் ஒரு வடிவம் தந்தவர்கள், பெட்டி படுக்கையுடன் அந்த நகரம் குறித்தான நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நகரங்களுக்கு வெளியே இடம்பெயர்ந்தார்கள்.

அந்த மக்கள் குறித்த படம்தான் 'டு- லெட்'

இசையற்ற வாழ்வு

இந்த படத்தில் ஒரு மாநகரம் இருக்கிறது. அந்த மாநகரில் கணவன், மனைவி மற்றும் குழந்தையென ஒரு குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பம் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறது. ஒரு மாதத்தில் அந்த வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் உத்தரவிடுகிறார். ஆம் 'உத்தரவுதான் இடுகிறார்'. வீடு தேட தொடங்குகிறது அந்த குடும்பம். அந்த தேடலின் முடிவில் இந்த நகரம் நமக்கானது அல்ல என்று முடிவுக்கு வந்து நகரத்தை விட்டு வெளியேற முடிவு செய்கிறார்கள். அந்த இன்னொரு வீட்டுக்கான ஒரு மாத தேடல், அவர்கள் சந்தித்த மனிதர்கள், அவர்களை அசைத்த பார்த்த மனிதர்கள் குறித்தான படம்தான் 'டு - லெட்'.

இது ஏதோ மிகைப்படுத்தப்பட்ட புனைவுகளுக்கு காட்சி வடிவம் கொடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல. நீங்கள் மாநகரில் வசிப்பவராக இருந்தால், உங்களுக்கென ஒரு சொந்த வீடு இல்லாமல், வசிப்பதற்கு அந்த மாநகரம் கேட்கும் வாடகையை கொடுக்க முடியாமல் சிரமப்படுப்பவராக இருந்தால் உங்கள் வாழ்க்கையிலிருந்து உருவப்பட்ட ஒரு அத்தியாயம்தான் 'டு-லெட்'.

இசையற்றுதான் இருக்கிறது நகரங்களில் சிரமப்படுபவர்களின் வாழ்வு. அதனால் இந்த திரைப்படமும் இசையற்றதாகதான் இருக்கிறது.

'குழந்தையின் சித்திரத்தில் ஒரு வீடு'

வீடு தேடுவதைவிட ஒரு பெரும் கொடுமை இருக்கிறதென்றால், வீட்டை காலி செய்ய இருக்கும் அந்த ஒரு மாத இடைவெளியில் நாம் வசிக்கும் வீடு காட்சி பொருளாக மாறும் அந்த நிமிடங்கள்தான். யார் யாரோ வந்து நாம் வசிக்கும் வீட்டை பார்க்க... வீடற்றவர்களுக்கு ஏன் தனிமை என்று இந்த சமூகம் கேள்வி கேட்பதாக இருக்கும். போகிற போக்கில் அந்த காட்சிகள் குறித்த விவரிப்பு இரானிய படங்களுக்கு ஒத்தது.

மற்றொரு குடும்பம் இவர்கள் வசிக்கும் வீட்டை வந்து பார்க்க, அப்போது யதார்தமாக அலமாரியை திறக்கும் போது வந்த விழுகிறது நாப்கின் பேட்கள். திரைப்படத்தின் மொத்த உணர்வையும் கடத்தும் ஒரு சிறு காட்சி இது.

அதுப்போல, ஓவியத்தின் மீது விருப்பம் கொண்ட சிறுவன், தான் வரையும் வீடு சித்திரத்திலும் 'டு - லெட்' போர்டை மாட்டி வரைகிறான். இது ஒரு சிறு காட்சி பார்வையாளர்களை அசைத்து பார்த்துவிடுகிறது.

குழந்தையின் அந்த ஒரு சித்திரத்தின் மூலமாக சர்வதேச அரசியல் பிரச்னையை பேசி இருக்கிறது செழியனின் 'டு - லெட்'

(இந்த திரைப்படதில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் தருண்பாலா, அருள் எழிலன் என பலர் நடித்து இருக்கிறார்கள். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ) நன்றி BBC


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts