வெளிநாடு | அரசியல் | 2019-01-13 16:40:15

நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டி குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கி உள்ளன.

இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் பல்வேறு கட்சிகள் இறங்கி உள்ளன.

அதே நேரம் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடுடன் இருந்து வந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் திடீரென உத்தரபிரதேசத்தில் தனியாக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

ஒரு காலத்தில் பரம எதிரிகளாக இருந்து வந்த இந்த இரு கட்சிகளும் சமீபகாலமாக இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், அதை நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர முடிவு செய்திருந்தன.

இந்த கூட்டணியில் காங்கிரசும் இணைந்து போட்டியிட விரும்பியது. ஆனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாக கருதி, அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்க சமாஜ்வாடி தலைவர் முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியும் தயக்கம் காட்டி வந்தனர்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் இடையேயான கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த குலாம்நபி ஆசாத்,

உத்தர பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப்போட்டியிடும்.  காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு பாஜகவை வீழ்த்தும். நாங்கள்  சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்தோ, அதில் காங்கிரஸ் சேர்க்கப்படாதது குறித்தோ உடனடியாக கருத்து கூற இயலாது. மத்திய மற்றும் கிழக்கு உத்தரபிரதேச பகுதியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளோம். 

கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் அதனை ஏற்க தயார். 2009 தேர்தலை போல், இங்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றுவோம். ( 2009 ல் 21 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது ) சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படாததால், தொண்டர்கள் கவலைப்படவில்லை.  இவ்வாறு அவர் பேசினார்.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts