📝நூருல் ஹுதா உமர்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளரும் தேசிய காங்கிரஸின் உறுப்பினருமான பாறுக் நாஜி, தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தேசிய காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு தவிசாளர் பதவியும் தேசிய காங்கிரஸுக்கு பிரதித் தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பாறுக் நாஜி பிரதித் தவிசாளராக கடமையாற்றி வந்தார்.
தேசிய காங்கிரஸின் “கிராமங்களுக்கு அதிகாரம்” என்ற கொள்கைக்கு அமைவாக, பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலம் பதவி வகித்த பின்னர் தன்னார்வமாக விலகி, அடுத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்தக் கொள்கைக்கு இணங்கவே பாறுக் நாஜி தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் கொள்கை மற்றும் தலைமைத்துவத்தின் தீர்மானங்களுக்கு அமைவாக உறுப்பினர்கள் தன்னார்வத்துடன் பதவி விலகி, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நடைமுறை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருவதாகவும் கட்சி சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பிரதித் தவிசாளராக இறுதியாக பங்கேற்ற பாறுக் நாஜி, தமக்கு வாக்களித்து சபைக்கு அனுப்பிய மக்களுக்கும், தம்முடன் இணைந்து பணியாற்றிய தவிசாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு சபையிலிருந்து விடைபெற்றார்.
பாறுக் நாஜியின் இராஜினாமாவைத் தொடர்ந்து, தேசிய காங்கிரஸின் பிரதிநிதித்துவத்தில் அடுத்த உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
