📝நூருல் ஹுதா உமர்


மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் ஜூலை 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தைக்வாண்டோ சுற்றுப்போட்டியில், கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன் (Overall Boys’ Champion) பட்டத்தை வென்று புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக தனது செயல்திறனை மேம்படுத்தி வந்த சாஹிரா கல்லூரி அணி, 2022 ஆம் ஆண்டில் 41 புள்ளிகளையும், 2023 ஆம் ஆண்டில் 42 புள்ளிகளையும், 2024 ஆம் ஆண்டில் 48 புள்ளிகளையும், 2025 ஆம் ஆண்டில் 49 புள்ளிகளையும் பெற்றிருந்த நிலையில், இவ்வாண்டு 52 புள்ளிகளை பெற்று இதுவரையான அனைத்து சாதனைகளையும் முறியடித்து மாகாண மட்டத்தில் ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது.
இப்போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி வீரர்கள் 6 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 20 பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும், போட்டியில் பங்கேற்ற 20 மாணவர்களும் தேசிய மட்ட தைக்வாண்டோ போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது இவ்வெற்றிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இந்த வெற்றிக்காக மாணவர்களுக்கு தேவையான வசதிகள், வழிகாட்டல் மற்றும் ஊக்கங்களை தொடர்ந்து வழங்கிய கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜபீர், இணைப்பாடவிதானப் பொறுப்பாளர் பிரதி அதிபர் எஸ்.முபாரக், ஏனைய பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, மாணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் பயிற்சியளித்த பாடசாலையின் ஆசிரியரும் பிரதம பயிற்றுவிப்பாளருமான யூ.எல்.எம்.இப்ராஹிம், உதவி பயிற்றுவிப்பாளர்களான எம்.எச்.எம்.அஸ்ரிக், ஜே.ஏ. சுமைத், ஏ.ஏ.ஹமீம்,ஏ.ஏ.ஹம்தான் ஆகியோரின் பங்களிப்பும் இவ்வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், போட்டிக்காக மாணவர்களை வழிநடத்திச் சென்று தேவையான ஒத்துழைப்புகளை வழங்கிய எம்.எம்.ரஜீப் அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.