– குற்றமிழைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவுள்ளதாக அறிவிப்பு
– அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட “பாரிய அளவிலான” தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவினால் ‘பிடிக்கப்பட்டு’ (Captured), நாட்டிலிருந்து வான்வழியாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி மதுரோவின் அரசாங்கம் தேசிய அவசரகால நிலையை (National Emergency) பிரகடனப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமையன்று (03) , வெனிசூலாவின் கராகஸில் உள்ள லா கார்லோட்டா விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், அங்கிருந்து புகை கிளம்புவதைக் காண முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவிக்கப்படுன்றன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஒரு “இராணுவ ஆக்கிரமிப்பு” என வர்ணித்துள்ள வெனிசுலா அரசாங்கம், தமது நாட்டின் சிவிலியன்கள் மற்றும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கப் படைகள் நடத்திய இந்தத் தாக்குதல்களின் பின்னரே அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிபட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
தமது நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிருடன் இருப்பதை அல்து அவர்கள் இருக்கின்ற இடத்தை உறுதிப்படுத்துமாறு, அந்நாட்டு உப ஜனாதிபதி அமெரிக்காவிடம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சிறைப்பிடிக்கப்பட்டுள்ள வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவிற்கு எதிராக, குற்றமிழைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ருபியோ தெரிவித்துள்ளதாக, ஆளும் குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் மைக் லீ தெரிவித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது வெனிசூலாவில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாகப் பெரும் பதற்றம் நிலவி வருவதோடு. இந்தத் திடீர் அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்கள் காரணமாக அந்த நாடு பெரும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.