✍️ஏ.எல்.எம்.ஷினாஸ்
மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இயங்கி வரும் அந்-நூர் கல்வி நிலையத்தில் அல்- குர்ஆனை பகுதி நேரமாக முழுவதுமாக மனனம் செய்த -முதலாவது ஹாபிழ் – முஹம்மத் ஹாரிஸ் ஹம்தான் அஹமத்- அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மஸ்ஜிதில் இஷா தொழுகையை தொடர்ந்து அந்நூர் கல்வி நிலையத்தின் உப தலைவர் டொக்டர் .எம்.ஐ.எம்.ஹபீல் (Bds) தலைமையில் நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்நூர் கல்வி நிறுவகமானது ஆன்மீக லௌகீக கல்வியறிவை போதித்து வந்ததுடன் அதன் ஒரு அங்கமாக 2018 ஆம் ஆண்டு தொடக்கம் பகுதி நேர அல்குர்ஆன் மனனப் பிரிவை ஆரம்பித்து இன்று வரை அல்லாஹ்வின் உதவியோடு சிறப்பாக நடாத்தி வருகிறது.
இந்நிலையில், அந்நூர் கல்வி நிலையத்தின் முதலாவது ஹாபிழ் என்ற மகுடம் சூடிய மாணவன் அல்ஹாபிழ் எம் எச் ஹம்தான் இங்கு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இதன் போது இம் மாணவனின் பெற்றோரும் பொன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, கல்முனை குல்லியதுல் ஹாதி அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அல்-ஹாபிழ் எம்.எச். இர்பாத் (ரஷாதி) அவர்கள் “இறைவனின் அருட்கொடையில் குர்ஆனை சுமக்கும் உள்ளங்கள்” என்ற தலைப்பில் சிறப்பாக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இந்நிகழ்வின் இறுதி அங்கமாக மஸ்ஜிதுல் கபீர் பெரிய ஜும்மா பள்ளிவாசலின் பேஷ்இமாம் அஷ்- ஷெய்க் ஏ.ஆர் பைஸல் கியாஸ் (பலாஹி) அவர்கள் துஆப் பிரார்த்தனையை நிகழ்த்தினார்.
குர்ஆனை முழுவதையும் மனனம் செய்து கொண்ட மாணவனுக்கு அந்நூர் கல்வி நிலையத்தின் உப தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஹபீல் (Bds) அவர்களின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டி பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பள்ளிவாசலின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ் எஸ் அபூல் கலாம், உப செயலாளர் ஏ.ஜே. லாஹிர் முன்னாள் தலைவர் ஏ.எல். சக்காப் அந்-நூர் கல்வி நிர்வாகத்தின் உஸ்தாத் மார்களான அல்-ஹாபிழ் எம்.எச்.எம்.றாயிஸ் (ஷர்க்கி) , அல்- ஆலிம் எம்.ஐ.எம். நுஸ்கி (ஸாபிதி), அல்-ஹாபிழ் எம். எல்.எம்.உஸ்மான் (நூரி), அல்-ஹாபிழ் எம்.எஸ் .பஹீம் அஹ்மத் (ஹாஷிமி), மற்றும் ஊரின் உலமாக்கள் கபீர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர், மரைக்கார் மார் பொதுமக்கள், நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.





