விளையாட்டு | விளையாட்டு | 2023-08-04 07:26:56

பெஸ்ட் இலவன் வெற்றிக் கிண்ணம் : சம்பியனானது சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம்!

நூருல் ஹுதா உமர்

கல்முனை பெஸ்ட் இலவன் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த "பெஸ்ட் இலவன் ரீ-10 வெற்றிக் கிண்ணம்" க்கான போட்டியில் இந்த வருடத்தில் தொடர்ந்து 10 கிண்ணங்களை சுவீகரித்து அசைக்க முடியாத சக்தியாக மிளிர்ந்த சம்மாந்துறை விளையாட்டுக்கழகத்தை சாதாரணமாக வீழ்த்தி சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று பெஸ்ட் இலவன் ரீ-10 வெற்றிக் கிண்ண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பெற்ற சம்மாந்துறை விளையாட்டு கழகம் மற்றும் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியிக்கு தகுதி பெற்றது.

கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டு கழகம் நிர்ணயித்த 10 ஓவர்கள் முடிவில் 07 விக்கட்டுக்களை மட்டும் இழந்து 65 ஓட்டங்களை பெற்றனர். 66 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் 10 ஓவர்களையும் சந்தித்து 01 விக்கட்டுக்களை மட்டும் இழந்து வெற்றியிலக்கை அடைந்தனர். இதனடிப்படையில் 09 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் எம்.என்.எம். ஜலூத் தலைமையிலான சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு 50,000 ரூபாய் பணபரிசும் வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இறுதிநாள் போட்டியின் ஆட்டநாயகனாக சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழக அதிரடி துடுப்பாட்ட வீரர் முஹம்மட் ஆபாக் தெரிவுசெய்யப்பட்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts