உள்நாடு | அரசியல் | 2020-09-07 07:50:59

தந்தையின் தோல்விக்கு நான் காரணமா ? : "வெற்றிக் குளம்பொலியில்" கண்ணீர் மல்க பேசினார் அக்கறை முதல்வர் சக்கி.ஏ.அதாஉல்லா.

(ஹுதா உமர்)

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய தந்தையும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தோல்வியை தழுவ நானும் ஒரு காரணம் எனும் பழிச்சொல்லை என்மீது பலரும் சுமத்தியிருந்தார்கள். மட்டுமின்றி இட்டுக்கட்டிய பல செய்திகளையும் பேசிவந்தார்கள். ஆனால் இன்று கடந்த 05 வருடங்களாக என்னுடைய மனதில் இருந்துவந்த சுமை அகல்கிறது என தேசிய காங்கிரசின் பிரதிச் செயலாளர் நாயகமும் அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான அதாஉல்லா அஹமட் சக்கி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமக்கு வாக்களித்த வாக்காளர்கள், வெற்றிக்காக உழைத்த கட்சி முக்கியஸ்தர்கள், போராளிகளுக்கு நன்றி தெரிவித்து அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் தேசிய காங்கிரசின் வெற்றிக் குளம்பொலி நிகழ்வு கடந்த சனிக்கிழமை அவரது தலைமையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

என்னுடைய பெயரின் மீது படிந்திருந்த கரையை போக்க குறைந்தது ஒருநாளாவது தேசிய காங்கிரஸின் தலைவர் ஏதாவது ஒரு வகையில் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று இறைவனிடம் கரமேந்தி பிராத்தித்தேன். அதற்குரிய பயன் எனக்கு கிடைத்திருக்கிறது. அவரை வெல்லவைக்க வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என கலங்கிய குரலில் பேசி முடித்தார்.

இந்நிகழ்வில் அவரது தந்தையும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கடந்த பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய வேட்பாளர்கள், தேசிய காங்கிரஸ் உயர்பீட மற்றும் செயற்குழு முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts