கட்டுரைகள் | சமூக வாழ்வு | 2020-04-01 15:15:28

சந்தைகள், கடைகள் திறக்கக் கூடாது என்ற தீர்மானம் செயலணியின் முடிவேயன்றி, மாநகர முதல்வரின் தனிப்பட்ட தீர்மானமல்ல..!

(அஸ்லம்.எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் பொருட்டு, பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் எதுவும் திறக்கப்படக் கூடாது என்ற தீர்மானம் கொரோனா தடுப்பு செயலணியின் முடிவேயன்றி, மாநகர முதல்வரின் தனிப்பட்ட தீர்மானமல்ல என்று மாநகர முதல்வரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ட்டிருப்பதாவது;

கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் பொருட்டு, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேளையிலும் கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் எதுவும் திறக்கப்படக் கூடாது என்ற தீர்மானம் மாநகர முதல்வரின் தனிப்பட்ட முடிவு போன்று சிலர் விமர்சித்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.

உண்மையில் இத்தீர்மானமானது மாநகர சபை, பிரதேச செயலகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய கொரோனா தடுப்பு செயலணியின் தீர்மானம் என்பதை இத்தால் அறியத்தருகின்றோம்.

பிரதேச செயலாளரின் அதிகாரம் என்பது அவரது பிரதேச மட்டத்தில் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது. கல்முனை மாநகர சபை எல்லைக்குள் 03 பிரதேச செயலகங்கள் உள்ளடங்கியிருப்பதனால் அந்த மூன்று பிரதேச செயலாளர்களையும் 03 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளையும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி, கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி, முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தகர் சங்கங்களின் பிரதானிகளை உள்ளடக்கியதாக ஒரு செயலணி உருவாக்கப்பட்டு, அதன் ஊடாக கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் கூட்டுப்பொறுப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமூகப்பொறுப்பை உணர்ந்தே இப்படியொரு செயலணிக் கட்டமைப்பை மாநகர முதல்வர் உருவாக்கியுள்ளார்.

அந்த வகையில் அண்மையில் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி செயலணியின் மூன்றாவது ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றபோது மக்கள் ஒன்று சேர்வதை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்று மிகவும் ஆழமாக கலந்துரையாடப்பட்டு, செயலணியின் முக்கிய அங்கமான சுகாதாரத்துறையினரின் கண்டிப்பான அறிவுறுத்தல்களை உள்வாங்கியே, மேற்படி தீர்மானத்தை செயலணி மேற்கொண்டிருந்தது.

கடந்த இரு தடவைகள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட வேளைகளில் உணவுப் பொருள் கொள்வனவுக்காக சந்தைகள் மற்றும் கடைத்தெருக்களில் கொரோனா தொற்று தடுப்புக்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் மக்கள் அலைமோதியதால் கொரோனா தொற்று சூழல் ஏற்படுத்தப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு, மக்கள் மத்தியில் இடைவெளி ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் சுகாதாரத்துறையினரால் வலியுறுத்தப்பட்டதன் பேரில் வர்த்தகர் சங்கத்தினரின் முழுமையான இணக்கத்துடன் மாற்று ஏற்பாடுகளுடனேயே செயலணி இத்தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.

இந்த செயலணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கூட்டத் தலைமைத்துவம் என்ற ரீதியிலேயே மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார். அத்துடன் செயலணிக் கூட்டத்தில் மாநகர முதல்வரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாகவே பள்ளிவாசலால்கள் மற்றும் கோவில்களில் ஒலிபெருக்கி மூலம் அவரது பெயரில் மேற்படி தீர்மானம் தொடர்பிலான அறிவித்தல் வாசிக்கப்பட்டது.

உலக வல்லரசுகளை ஆட்டங்காணச் செய்துள்ள கொரோனா எமது நாட்டிலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பல ஊர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, முடக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறையினரின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் எமது கல்முனை மாநகர பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகள், அறிவுறுத்தல்களை உள்வாங்கி மேற்படி செயலணி அவ்வப்போது பல்வேறுபட்ட தீர்மானங்களை மேற்கொண்டு, அமுல்படுத்தி வருகின்றது.

தவிர, இது கல்முனை மாநகர முதல்வரினதோ, ஆணையாளரினதோ அல்லது மாநகர சபை நிர்வாகத்தினரதோ தனிப்பட்ட தீர்மானமோ பிரச்சினையோ அல்ல என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து செயற்பட முன்வர வேண்டும். அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக விமர்சிக்கின்றனர் என்று பார்த்தால், சமூகத்தை வழிநடத்த வேண்டிய கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் என்போரும் முகநூலில் குந்திக்கொண்டு, மாநகர முதல்வரை திட்டித்தீர்ப்பதைக் காண முடிகிறது.

மேற்படி தீர்மானம் தொடர்பில் செயலணிக் கூட்டம் நடைபெற்ற அன்றைய தினம் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் மாநகர முதல்வரின் அவசர அறிவித்தல் எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், அது செயலணியின் தீர்மானம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் மக்களை குழப்பும் வகையில் சிலர் அதனைத் திரிபுபடுத்தி, முதலவரை கண்டனம் செய்கின்றனர் என்றால் இவர்களது நோக்கம் என்னவாக இருக்கும்?

உண்மையில், இவர்கள் தற்போதைய அபாய சூழ்நிலையையும் யதார்த்தங்களையும் சமூகப் பாதுகாப்பையும் சற்றும் பொருட்படுத்தாமல்தான் விமர்சிக்கின்றனரா? அல்லது உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே விமர்சிக்கின்றனரா என்பது தொடர்பில் சந்தேகம் எழுகிறது.

மேற்படி தீர்மானத்தினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை பொருந்திக் கொண்டு, ஒத்துழைப்பு வழங்குவதற்கு சாதாரண பொது மக்கள் தயாராக இருக்கின்ற போதிலும் இவ்வாறானோர், பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் தேவையற்ற விமர்சனங்களை மேற்கொள்வதற்கானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

பல்லாயிரம் உயிர்களை காவு கொண்டு, கொரோனா தாண்டவமாடுகின்ற இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான் போன்ற நாடுகளில் இன்று என்ன நடக்கிறது என்று நம் கண்முன்னே தெரிகிறது. ஆனாலும் நமது வீட்டுக்கதவை கொரோனா தட்டிய பின்புதான் நாம் கண்விழிப்போம் என்கிறோமா? நம் பிரதேசத்தில் அல்லது நம் குடும்பத்தில் ஒருவர் கொரோனா தொற்றி, அங்கோடை வைத்தயசாலைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பயனளிக்காமல், அவர் உயிரிழந்து, அவரது ஜனாஸாவைக் கூட பார்வையிட சந்தர்ப்பமில்லாமல், எரிக்கப்பட்ட செய்தி கிடைத்த பின்னர்தான் கொரோனா தொற்றின் பாரதூரத்தை நாம் கண்டு கொள்வோம் என்கிறீர்களா? இப்படியொரு நிலை ஏற்படாதவாறு இறைவன் காப்பாற்ற வேண்டும்.

இந்த பேரிடர் காலத்திலும் மூன்று வேளை சாப்பாட்டில் எமக்கு எந்தக் குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைப்பது ஒரு புறமிருக்க, வீட்டில் முடங்கியிருக்கிறோம் என்பதற்காக வயிறுமுட்ட பலவேளை சாப்பிட வேண்டும் என்று அடம்பிடிப்போரும் எம்மில் இருக்கின்றனர் என்பது குறித்து கவலையடைகின்றோம்.

நேற்று கல்முனை மாநகர சபைக்கு வருகை தந்திருந்த அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ஒரு விடயத்தைக் கூறினார். அதாவது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று சிங்கள ஊடகங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அதனை உண்மைப்படுத்துவது போன்றே எம்மில் சிலரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அவ்வாறாயின் இந்த நாட்டில் வாழ்வதற்கு முஸ்லிம்கள் அருகதையற்றவர்கள் என்ற நிலையை பெரும்பான்மையினர் மத்தியில் நாம் தோற்றுவிக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆகையினால் அனைவரும் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும். அவ்வாறான ஒரு சமூகப் பொறுப்பை சுமந்திருக்கின்ற ஒருவராக கல்முனை மாநகர முதல்வர் இருப்பதனாலேயே அரச நிர்வாகம், சுகாதாரத்துறை, பொலிஸ், முப்படை, வர்த்தகத்துறை உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து எமது மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றார் என்பதை சம்மந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூக பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு சற்று தியாகம் செய்து ஒத்துழைக்க முடியா விட்டாலும், உபத்திரமாவது செய்யாமல் ஒதுங்கி நில்லுங்கள் என்பதே சம்மந்தப்பட்டோரிடம் நாம் விடுக்கும் பணிவான வேண்டுகோளாகும். இல்லையேல் எதிர்காலங்களில் இத்தகைய மக்கள் நலன்சார் விடயங்களில் இருந்து பொறுப்புள்ளவர்கள் ஒதுங்க வேண்டியேற்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts