கட்டுரைகள் | அரசியல் | 2020-03-01 10:08:40

‘இரட்டைச்சமன்பாட்டு அரசியல்’ ஜெனீவா சூத்திரம் எப்படி இருக்கும்?

(சுஐப் எம்.காசிம்)

நியாயம் தேடும் சமர்க்களங்கள் மீண்டும் ஜெனீவாவின் வாசலை நோக்கி நகர்த்தப்படும் சூழலிது. முப்பது வருடப் போராட்டங்களின் எச்சங்களாக தமிழர் தரப்புக்கு இன்று நந்திக்கடல் சாட்சிகளே எஞ்சியுள்ளன. இதேபோன்று, தென்னிலங்கைக்கு எஞ்சியுள்ள சாட்சிகளாக போர்க்குற்ற விசாரணைகள் உள்ளன. “வண்டி உருண்டோட சக்கரங்கள் தேவை, நமது நாட்டின் அரசியல் புரண்டோட இவ்விரண்டு சாட்சிகளும் தேவை”. சர்வதேசத்தின் கவனங்களை ஈர்ப்பதற்கு இவ்விரு தரப்புக்களும் சாட்சிகளாகப் பாவிப்பதும் இவற்றைத்தான். நடந்தவற்றை மறந்து தேசப்பற்று, தேசப்பொதுமையில் ஒன்றிணையுமாறு அழைக்கும் புதிய அரசாங்கத்தின் கோட்பாடுகளுக்கு மத்தியில், தமிழர் தரப்பின் நியாயந்தேடல் அரசியல் எவ்வாறு பிழைக்கப்போகிறது?

“பயங்கரவாதத்தின் சாயல்கள், செயற்பாடுகள், சிந்தனைகள் சிவில் சமூகங்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கின்றன. இதனால்தான் போரை முடித்து வைத்தோம். எனவே எமது போரியல் தந்திரங்களை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற நிலைப்பாட்டில் புதிய அரசு களத்தை நகர்த்துகிறது.

சிறுபான்மையினரின் விடாப்பிடியும் விதண்டாவாதமும் தென்னிலங்கைப் பெரும்பான்மைக்குப் பிடிக்கவில்லை என்ற பாணியில், புதிய அரசாங்கம் செல்வதும் இக்களங்களை வெல்லும் இலக்கில்தான். இந்நிலையில் தமிழர் தரப்பு நியாயங்களை வெல்வதற்கு என்ன வழிகள்? எங்கிருந்து வெல்லலாம்? சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டிய விடயங்களும் இவைதான்.

பயங்கரவாதத்தை தோற்கடித்தாலும் வீழ்த்தப்பட்ட பொதுமக்களின் இலட்சியங்கள், அம்மக்களுக்கான நீதிகள் கிடைக்க வேண்டுமென்பதில், தமிழர் தரப்புக்குள்ள விடாப்பிடியையே தென்னிலங்கை வெறுக்கிறது. மேலும், கடந்த ஆண்டு ஜெனீவா அமர்வில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணை 30|1 தீர்மானம், படைவீரர்களைக் காட்டிக்கொடுக்கும் முயற்சி என்று அரசாங்கமும், இந்தத் தீர்மானமே போர்க்குற்றங்களை பக்கச்சார்பின்றி விசாரிக்க வழிகோலுமென தமிழர் தரப்பும் கூறுவதும், இரட்டைச்சமன்பாட்டு அரசியலே! இது ‘பிரிவினை அரசியலின் நிஜம் நீங்கவில்லை’ என்பதையே காட்டுகின்றன. “ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்” இந்த நிலைப்பாடுகள், வடக்கு தெற்கு பேதங்களை வலுவூட்டுவதுதான் சில அரசியல்வாதிகளையும் பிழைக்கச் செய்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் விலங்கிடப்பட்டுள்ள எமது நாட்டை மீட்டெடுப்பதாக ராஜபக்‌ஷக்களும், நல்லாட்சி அரசில் சாதிக்க முடியாமற்போனதை சர்வதேச அழுத்தத்தில் பெறப்போவதாக தமிழர் தரப்பும் கூறுவதை நிறுத்தி, புதிய அத்தியாயத்திலிருந்து இத்தரப்புக்கள் பயணிப்பதில்லையா? பேதமில்லாத சமூகங்களை உருவாக்குவதற்கு உழைப்பதில்லையா? இதுதான் இன்று புதிதாக வளர்ந்து வரும் இளம்தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்கள். இத்தலைமுறையினரின் அபிலாஷைகளை இன்னும் எமது தலைமைகள் சிந்திப்பதாக இல்லை. ஜெனீவா அமர்வுகளில் மாத்திரம் ஒன்று கூடுவது, கோஷமிடுவதை வழமையாக்கியுள்ள இவர்களின் செயற்பாடுகள், இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தொடரப்போகின்றன?

தாய் நாட்டிலிருந்து எத்தனையோ மைல்கள் தொலைவிலுள்ள சுவிற்சர்லாந்துக்குச் செல்லும் இலங்கையர், “புலம்பெயர் தமிழர்” என்றும் “புலம்பெயர் சிங்களவர்” என்றும் பிரிந்துநின்று ஆர்ப்பாட்டம் செய்வதால், இவ்வளவு காலமும் ஆர்ப்பாட்டம் செய்ததால் எதனைப் பெற்றோம்? இவ்வளவு சிறிய நாட்டில் இத்தனை பேதங்களா? என்பதை சர்வதேசத்திற்கு காட்டியதைத் தவிர வேறு எதையும் இவர்கள் செய்யவில்லை.

உண்மையில் தேர்தலின் வாடைகளுக்குள், ஜெனீவா அமர்வுகளும் இடம்பெறுவதால் இருதரப்பு அரசியல் வியாபாரமாகவே இவ்வமர்வுகள் பயன்படுத்தப்படப்போகின்றன. சமூகங்களின் பிரச்சினைகள் பொருளாதார அபிவிருத்திகளில் தங்கியுள்ளதாகக் கூறும் ஜனாதிபதி, தொடர்ந்தும் இராணுவச் சித்தாந்தங்களை உயிரூட்டுவதும், தமிழர் தனித்துவம் கரைந்துபோவதைப் பாதுகாக்க நியாயங்கள், சுய நிர்ணயங்கள் தேவை என்பதும், அதிகார வர்க்கத்தினரின் சுகபோக நிலைப்பாடுகளாகக் காட்டப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. இதுபற்றியே இன்று இளம் சமுதாயத்தினர் சிந்திக்கின்றனர். இச்சிந்தனைகளை மெருகூட்டி, பேதமில்லாத தேசத்தை உருவாக்குவதற்கான தலைமைகளை அடையாளம் காணாவிடின், எதிர்காலத்தில் எம்மால் சாதிக்க முடியுமானவை எவையும் இருக்காது.

எனவே, இந்த ஜெனீவா அமர்வுகளிலிருந்தாவது பேதமையில்லாத தேசத்துக்கான வழிகாட்டல்களை வழங்க அரசியல் தலைமைகள் முன்வர வேண்டியுள்ளது. இதைவிடுத்து சர்வதேச நாடுகளை நாம் நாடிச்செல்வதும், இன்னும் பல நூறு வருடங்களுக்கு எமது சமூகங்கள் துருவங்களாக செயற்படுவதும் தடுக்க முடியாமற்போகும். இந்த முடியாமைகள் எமது குழந்தைகள், வாரிசுகள் மற்றும் நாட்டையே குட்டிச்சுவராக்கி, வௌிநாட்டுக்காரர்களை நிலச்சுவாந்தர்களாக்கிவிடும். ஒரே மண்ணில் பிறந்த மைந்தர்களின் வாழ்வியல் உரிமைகளுக்கே வடக்கு, தெற்கு என வேலி போடும் எமது சிந்தனைகள், வௌிநாடுகளின் திட்டங்களுக்குத் தீனிபோடுவதால்தான் நாம் இன, மத, பிரதேச வேறுபாடுகளால் பிரிக்கப்பட்டுள்ளோம் என்பதை எண்ணிச் செயற்படுவதே, எமது தேசத்தை அந்நியசக்திகளின் ஆளுகைகளிலிருந்து விடுவிக்கும்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts