கட்டுரைகள் | அரசியல் | 2020-02-24 15:47:57

ராஜபக்ஸவினரின் கையையே மீறிய இனவாதம், ஆபத்தின் உச்சம், விழித்தெழுமா முஸ்லிம் சமூகம்...?

(மிஸ்பாஹுல் ஹக்)

ஒரு விடயம் நடந்தேறுகின்ற போது அதில் பல்வேறுவிதமான படிப்பினைகளையும், எச்சரிக்கைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அண்மையில் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வர்த்தமானிப்படுத்தப்பட்டிருந்தது. இது பேரின மக்களிடையே இனவாதமாக மாற்றப்பட்டு, அவ் வர்த்தமானியை அமைச்சரவை தற்காலிகமாக இடை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது பல்வேறு விடயங்களை தெளிவு செய்கின்ற போதும், ஒரு பெரிய ஆபத்தை நோக்கிய எச்சரிக்கையும் முஸ்லிம் சமூகத்துக்கு சொல்கிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டு அணியினர் வெற்றி வாகை சூட இல்லாத பொல்லாத இனவாதத்தை எல்லாம் கிளறி விட்டிருந்தனர் ( இலங்கையில் இனவாதமென்பது ராஜபக்ஸவினரால் மாத்திரமே விதைக்கப்பட்டதல்ல என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.). இது முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பானது என்பது மறுப்பதற்கில்லை. இருந்தும் அவ் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பிரதான ஆளி மொட்டு அணியினரிடம் ( குறிப்பாக ராஜபக்ஸ அணியினரிடம் ) இருந்தால், இன்று இல்லாது போனாலும், என்றாவது ஒரு நாள் அவர்களை திருப்தி செய்து இவற்றை முடிவுக்கு கொண்டுவர முடியுமென்ற நம்பிக்கையில் இருக்கலாம். சாய்ந்தமருது வர்த்தமானி விடயமானது அந் நம்பிக்கையில் மண்னை அள்ளிப் போட்டுள்ளது.

பிரதமர் மஹிந்தவின் ஆளுமை சாதாரணமாக மட்டிடக் கூடியதல்ல. ஜனாதிபதி கோத்தாபாயவை இலங்கை பேரின மக்களே ஒரு சிறந்த பௌத்தனாக ஏற்றுள்ளனர். நாம் இனவாதம் மேலெழாமல் சில விடயங்களை சாதிக்க இதனை ஒரு சிறந்த சந்தர்ப்பம் ஒரு போதும் ஏற்படப் போவதில்லை. கள்ளனின் கையில் களஞ்சியசாலை திறப்பை கொடுக்க வேண்டுமென்ற முதுமொழியை இவ்விடத்தில் நினைவிற்கொள்வது பொருத்தமானது.

சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கியது சாதாரண ஒரு விடயம். இதில் இனவாதம் பேச ஏதுமில்லை. இப்படியான ஒரு விடயத்தை இனவாதமாக்கி, மஹிந்தவின் ஆளுமையையும், கோத்தாவின் பௌத்த முத்திரையையும் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். இது தற்போது இனவாதத்தின் பிரதான ஆளி மொட்டு அணியினரிடம் ( ராஜபக்ஸ அணியினரிடம் ) இல்லையென்பதை துல்லியமாக்குகிறது. தற்போது இலங்கையில் நிலவும் இனவாதம் மஹிந்த, கோத்தாவை ஆட்டிப் படைக்கும் வல்லமை வாய்ந்தளவு விஸ்வரூபமெடுத்துள்ளது. இலங்கையின் பலமான ஆட்சியாளர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத இவ் இனவாதத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும். இனி இனவாதிகளின் தாளத்துக்கு இலங்கையரசு ஆடியேயாக வேண்டும் என்பதையறிய இதனை விட சான்றேதும் தேவையில்லை. இது முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தான செய்தியை கூறுகிறது.

இலங்கை சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம் மக்கள் தற்போதைய நிலையை உணர்ந்து மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்பதோடு இவ் இனவாதத்தை எதிர்கொள்வதற்கான ( இன நல்லுறவை வளப்பதற்கான ) பொறிமுறைகளை ஆய்வுகள் செய்து செயற்படுத்த வேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதை உணர வேண்டும். இலங்கை முஸ்லிம் மக்கள் என்னவோ, முஸ்லிம் அரசியல் தலைமைகள் தான் இக் கட்டில் இருப்பதாக நினைத்து வீடுகளில் நிம்மதியாய் குரட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கின்றனர். விழித்தெழுமா எமது முஸ்லிம் சமூகம்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts