பிராந்தியம் | அரசியல் | 2020-02-11 23:24:40

கல்முனை விடயத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா இனவாத அரசியலுக்கு எதிராக குரல்கொடுத்தார். ஹரீஸ் எம்.பி !!

ஹுதா உமர்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். 

சனிக்கிழமை மாலை அட்டாளைச்சேனையில் நடைபெற்ற புத்திஜீவிகள் அமையத்தின் தங்க விருதுகள் 2020 நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய அவர். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, 

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன்  பார்த்தார்கள். மட்டுமின்றி பிரதமரின் செயலாளருடன் என்னை அனுமதிக்கக் கூடாது என வாதிட்டனர்..

என்னை அந்த செயல் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.  இருந்தாலும் வரவேற்பறையில் காத்திருந்த போது அதை அறிந்த பிரதமர் தனது செயலாளர்களை அனுப்பி என்னை உள்ளே வரவழைத்தார். அங்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி, இராஜாங்க அமைச்சர்  விமலவிர  திஸாநாயக்க , கிழக்கு மாகாண ஆளுநர், முக்கிய அரச அதிகாரிகள், தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் புத்திஜீவிகள் எனப்பலரும் குழுமியிருந்தனர். 

தமிழ் மக்களின் சார்பில் இராஜாங்க அமைச்சர் விமலவிர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ யானி ஆகியோருடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் களின் குரல் அப்பிரதேச செயலக தரமுயர்வுக்கு ஆதரவாக  இருந்த போது நான் தைரியமாக அந்த பிரதேச செயலக உருவாக்கம், அமைவிடங்களை பற்றி தெளிவுபடுத்தினேன். அரசாங்க அதிபரும் அதுபற்றிய முழு விளக்கத்தை வழங்கினார்.

 கடந்த கால அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக உருவாக்கிய செயலகம் என்பதை உறுதியாக எடுத்துரைத்தோம். அதை செவியுற்ற பிரதமர் அவர்கள் அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை உண்டாக்குவதாகவும் தெரிவித்து 100 மீட்டர் தூரத்திற்குள் இரு செயலகங்கள் இருப்பதை கேட்டு ஆச்சரியப்பட்டார். 

1987 ஆம் ஆண்டு இருந்தது போன்று நான்கு சபைகளை உருவாக்கி  நான்கு செயலகமங்களை உருவாக்கும் யோசனையை  ஏற்றுக்கொள்வதாக எனது நிலைப்பாட்டை அறிவித்தேன். அப்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்பது வருடங்களாக அந்த செயலகம் இயங்குவதாகவும் அதை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர். 

அக்கூட்டத்திற்க்கு அப்போது சமூகமளித்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் இனவாத அரசியலுக்கு எதிராக குரல்கொடுத்தார். இனவாதமாக அமைக்கப்பட்ட கல்விவலயங்கள், நிர்வாக அலகுகளுக்கு எதிராக கடுமையாக பேசினார். இந்த நாட்டில் சகல இனங்களும் நிம்மதியாக வாழவேண்டிய தேவையை உணர்த்தி பேசினார். அதன் பின்னர் நாங்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தோம். மாற்று அரசியல் கொள்கைவாதியாக இருந்தாலும் அவரின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன். 

பிரதமருடனான அந்த கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை தீர்த்து வைக்க ஒரு எல்லைநிர்ணய ஆணைக்குழுவை அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. தமிழ்,முஸ்லிம் மக்களின் சாட்சியங்கள் கேட்கப்பட்டு நியாயமான ஒரு தீர்வை பெற முடிவு எட்டப்பட்டது. அதன் பின்னர் சில அரசியல் சித்து விளையாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருவது மிகவும் கவலையான ஒன்றாக நான் பார்க்கிறேன். 

தேசிய காங்கிரஸ் அபிமானிகள் அந்த பிரச்சினை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் மட்டுமே முடிக்கப்பட்டதாகவும், என்னுடைய அபிமானிகள் என்னால் மட்டுமே முடிக்கப்பட்டதாகவும் பதிவிட்டு சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இது தேவையில்லாத ஒரு விடயம். 

முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதிகளான எங்களின் ஒற்றுமையான குரலுக்கு கிடைத்த வெற்றியே.

இந்த கட்சி சண்டை கலாச்சாரம்  மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள். 

எமது பிரதேச பள்ளிவாசல் சம்மேளனங்கள், பொதுநல அமைப்புக்கள், என்பன இதுசம்பந்தமாக தமது கரிசணையை செலுத்தி எமது அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்தி தமது சமூகத்தின் இருப்பை பலப்படுத்த முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் பல துறைகளையும் சேர்ந்த சாதனையாளர்களுக்கு தங்க விருதுகள் 2020 யும், கடந்த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக சாதனை செய்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts