பிராந்தியம் | கல்வி | 2020-02-11 06:02:46

எமது மாணவர்கள் கடல்கடந்து சர்வதேசத்தில் கூட சாதிக்கின்றனர் : ஸாஹிரா அதிபர் ஊடக சந்திப்பில் பெருமிதம்

(ஹுதா உமர்)

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் எமது மாணவர்களை மாகாண, தேசிய மட்டங்களையும் தாண்டி சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க களமாக அமைந்துள்ளது என சாய்ந்தமருது ஸாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஸாஹிரா தேசிய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு (11) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொள்ள உள்ளார்.

இது சம்பந்தமாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10) திங்கட்கிழமை மாலை பாடசாலை கேட்டோர் கூடத்தில் அதிபர் எம்.ஐ.ஜாபீர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

சுமார் நான்கு வருடங்களின் பின்னர் நடைபெறும் இந்த இல்ல விளையாட்டுப் போட்டியினை சர்வதேச தரத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை எமது பாடசாலை ஆசிரியர்கள் குழாம் மற்றும் அபிவிருத்தி சபையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

இவ்விளையாட்டுப் போட்டியின் ஊடாக மாணவர்களின் ஆளுமை, உடல் வலிமை, தலைமைத்துவ பண்புகள், மாணவர்களுக்கிடையில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை,, புரிந்துணர்வுகள் போன்ற நற்பண்புகள் விருத்தியடையும் என எதிர்பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் விளையாட்டின் ஊடாக எமது மாணவர்கள் மாகாணம், தேசியம் மற்றும் சர்வதேசம் வரை சாதித்து காட்டியதன் மூலம் எமது பாடசாலையின் நாமம் சர்வதேசம் வரை வியாபித்துள்ளமை எமக்கு பெருமை தரும் விடயமாகும்.

இல்ல விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடாத்தி முடிக்க பாடசாலை அபிவிருத்தி சபையினர், பழைய மாணவர்கள் மற்றும் எமது பிராந்திய வர்த்தக நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றனர். இப்போட்டி நிகழ்வுகளுக்கு பாடசாலை மாணவர்களிடம் எதுவித நிதிகளும் அறவிடவில்லை.

இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் 21.02.2020ம் திகதி நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் பாடசாலை பிரதி அதிபரும், விளையாட்டுச் சபை தவிசாளருமான எம்.எச்.எம்.அபூவக்கர், சிரேஷ்ட விளையாட்டு ஆசிரியரும் விளையாட்டுச் சபை செயலாளருமான அலியார் பைசர், பாடசாலை விளையாட்டுப் பொறுப்பதிகாரியும் போட்டிகளின் பணிப்பாளருமான கே.எம்.தமீம், பாடசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் எம்.ஐ.எம். முஸ்தாக், ஈ-ஸாஹிரா மற்றும் பாடசாலை ஊடக பொறுப்பதிகாரி சஃபி எச். இஸ்மாயில் உள்ளிட்ட ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts