உள்நாடு | சமூக வாழ்வு | 2019-12-08 15:05:38

அம்பாறை மாவட்டத்தில் 7 ஆயிரத்தி 147 குடும்பங்கள் பாதிப்பு, ஒருவர் மரணம், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு – மாவட்ட முகாமைத்துவ கூட்டத்தில் அரசாங்க அதிபர் 

(ஏ.எல்.எம்.ஸினாஸ்)

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக  7 ஆயிரத்தி147 குடும்பங்களைச் சேர்ந்த 25027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார். மவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம் மாவட்ட செயலக கூட்டமண்டபத்தில் (06) நடைபெற்றது. மாவட்டத்தின் அனர்த்த நிலமைகள் தொடர்பாக திணைக்களங்களுக்கு தெளிவுபடுத்தும் போது இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது,

அம்பாறை மாவட்ட அனர்த்த மத்திய நிலையம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுவருகின்றன. இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மாவட்டத்தில் 129 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேவேளை சம்மாந்துறை பிரதேசசெயலக பிரிவில் வெள்ளநீரை கடக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.  

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் மாவட்ட செயலாளர் திணைக்களத் தலைவர்களை வேண்டிக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட முப்படையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதேவேளை கல்முனை - நற்பிட்டிமுனை ஊடாக நாவிதன்வெளிக்கு செல்லும் கிட்டெங்கி பாலத்தின் பிரதான வீதியில் தொடர்ந்து வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால்  குறித்த வீதியால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியவசிய போக்குவரத்துக்கு கடற்படை மற்றும்  இராணுவத்தினர் உதவிகளை வழங்கிவருகின்றனர்.

கல்முனை துறைவந்திய மேட்டு கிராமத்துக்கு செல்லும் சகல வீதிகளும் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில்  முற்றாக தடைப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கல்முனை, பாண்டிருப்பு, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போண்ற தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ள நீரில் சிறுவர்கள் விளையாடச்செல்வது மற்றும் அனர்த்தங்கள் நடைபெறும் இடங்களுக்கு பொதுமக்கள்  கூட்டம் கூட்டமாக சென்று பார்வையிடுவதை  தவிர்த்து அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் பொதுமக்களை கேட்டுள்ளது.  


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts