அஸ்லம் எஸ்.மௌலானா
Posted By Admin | Posted On 2019-12-06 23:27:40 | Views 869

 

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரின் இனாம் மௌலானாவின் பல்துறை சாதனைக்காக 'துர்ரதுல் மஹ்மூத்' (விலைமதிப்பற்ற முத்து) எனும் பட்டம் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரியின் சேர் ராசிக் பரீத் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின்போது கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.அமீன் தலைமையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மற்றும் கல்விமான்கள், அதிகாரிகள் முன்னிலையில் இம்மாணவி பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார்.

கல்லூரி வரலாற்றில் மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும். இவர் கல்வித்துறையில் மாத்திரமல்லாமல் தமிழ் தினம், ஆங்கில தினம், மீலாதுந் நபி விழா,  விஞ்ஞான ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து போட்டி  நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி, தேசிய, மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்று, கல்லூரிக்கும் இப்பிராந்தியத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றார் என்று கல்லூரி அதிபர் யூ.எல்.எம்.அமீன் இதன்போது புகழாரம் சூட்டினார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்ற பாத்திமா ஷைரின் இனாம் மௌலானா, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்ததுடன் கடந்த வருடம் ஜீ.சி.ஈ.(சா/த) பரீட்சையில் 09 A சித்திகளைப் பெற்றிருந்தார்.

கல்வி அமைச்சின் அனுசரணையுடன் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வருட தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சிரேஷ்ட மாணவியர் பிரிவில் ஆங்கில மொழிமூல பேச்சுப் போட்டியில் இவர் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

அத்துடன் கடந்த வருடம் தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இம்மாணவி இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தோனேஷியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மட்ட போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளார்.

இவர் கல்முனை கடற்கரைபள்ளி வீதியை சேர்ந்த இனாம் ஷக்காப் மௌலானா மற்றும் மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts