கட்டுரைகள் | அரசியல் | 2019-12-05 19:53:26

ராஜ யோகத்தில் ராஜ்ய வியூகம்

-சுஐப் எம் காசிம்-

புதிய அரசாங்கத்தின் பயணம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு எமது நாட்டை மட்டுமன்றி முழு உலகையும் உலுக்கியெடுக்கின்றது.ராஜபக்‌ஷக்களின் கடந்த பத்து வருட ஆட்சியில் ஏற்பட்ட மிக முக்கியமான சம்பவம்

உலகின் கவனத்தை இலங்கையில் ஈர்த்ததுடன் அவர்களை சர்வதேச விமர்சனங்களுக்கும் உள்ளாக்கியது. முப்பது வருட ஆயுதப் போராட்டத்தை 2009 இல் தோற்கடித்த ராஜபக்‌ஷக்களுக்கு உள்நாட்டில் மவுசும் வௌிநாடுகளில் எதிர்ப்பும் ஏற்பட்டிருந்த நிலையில் இவ்விரு விடயங்களையும் கவனமாகக் கையாள்வதில் இவர்கள் சளைக்கவில்லை.உள்நாட்டு மவுசைத் தேர்தலுக்கும் வௌிநாடுகளின் எதிர்ப்பை தேர்தல் முதலீடுகளுக்கும் பயன்படுத்துவதில் ராஜபக்‌ஷக்கள் வெற்றியடைந்ததாகவே சொல்ல வேண்டும்.2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தோல்வியை ஒரு அடி சறுக்கலாகக் கருதிய இவர்கள், இத்தோல்விக்கு வௌிநாடுகளே சதி செய்ததாகக்காட்டி தென்னிலங்கையில் முதலீடுகளை இரட்டிப்பாக்கிக் கொண்டனர்.இந்த இரட்டிப்பிலிருந்தே இவர்களின் புதிய அரசியல் பயணம் ஆரம்பமாகப்
போகிறது.

இலங்கை ஜனாதிபதிகளின் மரபுக்கமைய முதலாவது விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட புதிய ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷ, அங்கு தெரிவித்த கருத்துக்கள் ஜனாதிபதிகளின் வழமைக்கு முரணாக இருந்தன. புதுடில்லியின் ஆலோசனைகள் அத்தனைக்கும் ஆமாம் போடும் தலைவராக அவர் நடந்து கொள்ள வில்லை.சாத்தியமானவைக்கு மட்டும் தலையசைத்த அவர், சாத்தியமற்றதைப் பேசிப்பயனில்லை என்றார். அவ்வாறானால் இந்தியாவாலும் இலங்கையில் சாதிக்க முடியாதது என்ன?இலங்கைக்குப் படையனுப்பிய இந்தியா, இலங்கையுடன் ஒப்பந்தம் செய்த இந்தியா, இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடித்து வைக்க ஒத்துழைத்த இந்தியாவால் எதைச் சாதிக்க முடியாமல் போகும்? இதுபற்றித்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தௌிவுபடுத்தினார். பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறாது சமஷ்டியோ,இதற்கு நிகரான தீர்வோ தரமுடியாதென்றார்.அவ்வாறானால் பௌத்த சிங்களவர்களின் பெரும்பான்மை ஆதரவை இந்தியாவால் பெற முடியாதென்பதே அது.

வடக்கு,கிழக்கு ஆயுதப்போராட்ட த்தில் இந்தியாவின் பங்களிப்புகள் அத்தனையும்,தென்னி லங்கையின் மன உணர்வுகளுக்கு எதிரானதென்ற நிலைப்பாடு 1980 க்குப்பின்னர் ஏற்படுத்தப்பட்டதென்பதே உண்மை.இதனால் இந்தியாவின் தலையீட்டிலான தீர்வுகள் எவையும் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறாது என்பதையே கோட்டாபய உணர்த்தியுள்ளார். இவரது சகோதரரான மஹிந்த ராஜபக்‌ஷவின் தமிழர் தீர்வு குறித்த நிலைப்பாட்டையும் தாண்டி கோட்டாவின் நிலைப்பாடு சென்றதை அவதானிக்கும் சிலர், ராஜபக்‌ஷக்களுக்குள் விரிசல் வந்துள்ளதாக வாய் திறக்கத் தொடங்குவர்.ஆனால் இதை விரிசலாகப் பார்க்காது தெனிலங்கை நிலைப்பாட்டின் ஒருபடி வளர்ச்சியாகவே பார்க்க வேண்டும்.

2013 இல் அரசியலமைப்பின்13க்கும் அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரத் தயார் என்ற மஹிந்தவின் கருத்துக்கு முற்றிலும் மாற்றமாக சமஷ்டித்தீர்வு,மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பேசிப்பயனில்லை, இவற்றைச் செய்ய பெரும்பான்மை ஆதரவு தேவையென கோட்டாபய ஏன் சொன்னார்? இச்சிந்தனைகளிலிருந்தே இனிமேல் தென்னிலங்கை அரசியல் களம் விழிப்படையப் போகின்றது.இம்முறை தேர்தலுடன் நான்கு
தடவைகள் சுமார் இருபது வருடங்களாக ராஜபக்‌ஷக்களை சிறுபான்மையினர் நூற்றுக்குத் தொண்ணூறு வீதம் நிராகரித்துள்ளனர்.2005,2010,2015,2019 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் சிறுபான்மையினரால் இவர்கள் நிராகரிக்கப்பட்ட போதும் பெரும்பான்மைச் சிங்களவர்களால் வரவேற்கப்பட்டிருந்தனர் .இதனால் சிங்களவர்களைக் கைவிட்டு, சிறுபான்மையினர் உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை.அதிகாரத்துக்கு வருவதற்கு ஆதரிக்காதோருக்கு எப்படி அதிகாரங்களை வழங்குவது, எவ்வாறு சமஷ்டி கொடுப்பது. காணி,பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கி எப்படி இவர்களை ராஜாக்களாக்குவது? இதுதான் ராஜபக்‌ஷக் களின் முடிவு.மறுபுறம் காணி,பொலிஸ் அதிகாரங்கள் கோருவோர் முதலில் ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்குமாறே கோர வேண்டும்.மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண சபை நிர்வாகத்தை ஆளுநர் என்ற தனி மனிதர் கட்டுப்படுத்துவது ஜனநாயகமாகாதென்ற நிலையில் இந்தக் கோரிக்கையே வலுப்பெறும். இதற்கு இப்படியும் பதிலளிக்க முடியும்.மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் பிரதிநிதிதானே ஆளுநர்.

வடமாகாண அமைச்சர்கள் இருவரை முதலமைச்சர் பதவி நீக்கியதையே சவாலுக்குட்படுத்திய நிலைமைகள்,மற்றும் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவத ற்கான காணிகளைக் கூடப் பெற முடியாத கையாலாகாத் தனங்கள்,வடக்கு, கிழக்கில் தேவையான இடங்களையெல்லாம் தொல்பொருட் திணைக்களம் சுவீகரிப்பது, வன விலங்கு தினைக்களத்தின் காணிக் கபளீகரம் போன்ற செயற்பாடுகள் மாகாண சபைகளின் பொம்மைத் தன்மையையே வௌிப்படுத்துகின்றன. தென்னிலங்கை யைப் பொறுத்த வரை வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது சிங்கள இனத்தவரின் குடிப்பரம்பலை முடக்கும் சிந்தனையாக வும்,இரு நாடுகளின் எல்லைக்காவலுக்கான உத்தியோக பூர்வ இராணுவமுமாகவுமே பார்க்கப்படுகிறது. புலிகள் இராணுவ ரீதியாகப்பலம்பெற்றிருந்த காலத்தில் ஏற்பட்ட இந்த அச்சம் இன்னும் தென்னிலங்கையை விட்டுப்போகவும் இல்லை.இதனால்தான் இவ்வதிகாரங்களை வழங்கி தென்னிலங்கையை அச்சப்படுத்த, அம்மக்களின் அதிருப்திக்குள்ளாக ராஜபக்‌ஷக்கள் விரும்பவில்லை. காணி அதிகாரம் கையிலிருக்கும் வரை நாட்டின் எந்த மூலையிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கின் எந்தப்பகுதியிலும் பெரும்பான்மை இனத்தவரைக் குடியமர்த்தலாம் என்ற நம்பிக்கையிலே இனித் தென்னிலங்கை நகரவுள்ளது. பொலிஸாரை மட்டுமல்ல, நிதி அதிகாரத்தையும் மாகாண சபைகக்கு வழங்காது மத்திய அரசில் வைத்துக் கொண்டுதான் ராஜபக்‌ஷக்களின் வியூகங்கள் வளரவுள்ளன. இதற்கான எதிர்ப்புக்கள் புலம்பெயர் அமைப்புக்களிடம் வரும்போது என்ன செய்வதெனத் திண்டாட நேரிடும் என எண்ணிவிடாதீர். தம்பக்கம் உள்ள வரதராஜப்பெருமாள், கருணா அம்மான், பிள்ளையான் ஆகியோரை வைத்தே அடுத்த காய்கள் நகர்த்தப்படும்.தமிழீழத்தையே பிரகடனம் செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பிய பெருமாள் இருக்கையில் என்ன பயம். மேலும் சீன,பாகிஸ்தான் உறவுகளை ராஜபக்‌ஷக்கள் கையாளப்போவதிலும் இராதந்திரங்கள் இல்லாமலிருக்காது.தொழில்நுட்பத்துக்கு சீனாவும்,வியாபாரத்துக்கு பாகிஸ்தானும் அரசியல் ஒத்துழைப்புக்களுக்கு இந்தியாவும் இருந்தால் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது".


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts