கட்டுரைகள் | அரசியல் | 2019-11-23 07:08:55

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசர விபத்துச் சேவை பிரிவு கட்டட நிர்மாணப் பணி தாமதம் ஆக யார் காரணம்?

(ஊடகப்பிரிவு)

''கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிறுவுதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஐந்து மாடிகள் கொண்ட அவசர விபத்துச் சேவை பிரிவு கட்டட நிர்மாணப் பணி தாமதம் ஆனமைக்கு  நான் காரணமல்ல.ஒப்பந்தக்காரரே காரணம்.அவரது முறையற்ற செயற்பாடே காரணம்.இருந்தும்,அவரை நிறுத்தி வேறு ஒரு ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் இந்தப் பணியை ஒப்படைப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார் .''

-இவ்வாறு முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.மேற்படி விடயம் தொடர்பில் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

நான் சுகாதார இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் என்னால் முடிந்த அளவு பல அபிவிருத்திப் பணிகளை நான் செய்திருக்கிறேன்.மேலும் பல அபிவிருத்திகளைச் செய்வதற்குத் திட்டமிட்டிருந்தேன்.அவற்றுள் ஒன்றுதான் ஐந்து மாடிகள் கொண்ட அவசர விபத்துச் சேவை பிரிவு கட்டடம்.  

இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக நான் எடுத்த நடவடிக்கைகள் ,பட்ட கஷ்டம்,ஓடிய ஓட்டம் எனக்கும் என்னோடு உடன் இருந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

இதன் நிர்மாணப் பணியில் தாமதம் ஏற்படுவதற்கு அதைப் பாரமெடுத்த கட்டட ஒப்பந்தக்காரரே காரணம்.நான் அல்ல.நிர்மாணப் பணியைத் துரிதப்படுத்துவதற்காக நான் அமைச்சில் இருந்து 200 மில்லியன் ரூபாவை இரண்டு கட்டங்களாக அந்த ஒப்பந்தக்காரருக்கு முற்பணமாகப் பெற்றுக்கொடுத்தேன்.

அந்த ஒப்பந்தக்காரர் துளை இடுவதற்காக முதலில் சீன நிறுவனம் ஒன்றைப் பணிக்கு அமர்த்தினார்.அந்த நிறுவனத்துக்கு இவர் பணம் கொடுக்காததால் அவர்கள் சென்றுவிட்டனர்.

பிறகு ஜேர்மனி நிறுவனம் ஒன்றை அமர்த்தினார்.அந்த நிறுவனத்துக்கும் பணம் கொடுக்கவில்லை.அவர்களும் சென்றுவிட்டனர்.இதனால் பணி தாமதமானது.

இந்தப் பிரச்சினை சுகாதார அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதும் அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தனர்.அதில் ஒப்பந்தக்காரர் முறைகேடாக நடந்துகொண்டமை தெரிவந்தது.இதனால் அவரிடம் இருந்து ஒப்பந்தம் மீளப் பெறப்பட்டது.

வேறு ஒரு ஒப்பந்தக்காரரிடம் இந்தப் பணியை ஒப்படைப்பது என்று தீர்மானித்து அதற்காக புதிய கேள்வி மனுவைக் கோருவதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.இதற்கான செலவு மதிப்பீடு நான்கு வருடங்களுக்கு முன் செய்யப்பட்டது.புதிதாக ஒப்பந்தம் கோருவதாக இருந்தால் அந்த மதிப்பீட்டை மீளச் செய்ய வேண்டியுள்ளது.

இவை எல்லாவற்றுக்குமான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.இந்த நிலையில்தான்,ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.இருந்தாலும்,இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டே தீரும்.

இது வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒன்று.நான் அமைச்சராக இல்லாவிட்டாலும் இது நடந்தே தீரும்.

மேற்படி ஒப்பந்தக்காரரிடம் இது மாத்திரமேறி 7 வைத்தியசாலைகளின் கட்டட நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.அதில் 4 வைத்தியசாலைகளை அவர் நிர்மாணிக்கவில்லை.மூன்று வைத்தியசாலைகளை அரைகுறையாக நிர்மாணித்துள்ளார்.

ஆனால்,இந்த உண்மை எதுவும் தெரியாமல் இப்போது சிலர் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.இந்த நிர்மாணப் பணி இடம்பெறாமைக்கு நானே காரணம் என்று முகநூலில் கூறித் திரிகின்றனர்.

இந்தப் பணியை முன்னெடுப்பதற்காக நான் எடுத்த முயற்சி என்னைச் சார்ந்த எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.சிலவேளை,இவ்வாறு குற்றம் சுமத்துகிறவர்களுக்கும் தெரியும்.ஆனால்,அவர்கள் நான் பதவி விலகிய இந்தச் சந்தர்ப்பதை பயன்படுத்தி ஒருவகையான அரசியல் காழ்ப்புணர்ச்சியை என்மீது கக்குகின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு மேலும் உண்மை தெரிய வேண்டுமென்றால் இது தொடர்பான ஆவணங்களையும் நான் வெளிப்படுத்துவதற்குத் தயாராகவுள்ளேன்.

இரண்டு மாடிக் கட்டடமாக நிர்மாணிக்கப்படவிருந்த இந்த அவசர விபத்துச் சேவை பிரிவு கட்டடத்தை 5 மாடிகள் கொண்ட கட்டடமாக மாற்றி அமைத்தவன் நான்.

எதிர்காலத்தில் இந்த வைத்தியசாலையில் இட நெருக்கடி வரக்கூடும் என்பதால் அதைத் தடுப்பதற்காக நான் இவ்வாறு திட்டமிட்டேன்.

பல பிரச்சினைகளை எதிரிகொண்டுதான் இந்தத் திட்டத்தை நான் கொண்டு வந்தேன்.இது எதுவும் தெரியாமல் அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே சிலர் என்னைத் தூற்றித் திரிகின்றனர்.

இவர்களது இந்தப் போலிக் குற்றச்சாட்டுக்கான பதிலை நான் இதில் தெளிவாகக் கூறியுள்ளேன்.என்மீது குற்றம் சுமத்துகின்ற நீங்கள் இது தொடர்பில் மேலும் தெளிவைப் பெற வேண்டுமென்றால் இலகுவான வழி ஒன்றைச் சொல்கிறேன்.

எம்பியும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹரீஸின் மைத்துனன் டாக்டர் ரஹ்மான்தான் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியேச்சகராக இருக்கிறார்.ஹரீஸ் எம்பியின் ஊடாக ரஹ்மானைத் தொடர்புகொண்டு மிக இலகுவாகத் தகவலைப் பெற முடியும்.

முகநூலில் என்னைத் தூற்றித் திரிவதைவிட இந்த இலகு வழியைக் கையாண்டு தகவலைப் பெறுங்கள்.என்றார்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts