உள்நாடு | அரசியல் | 2019-11-19 18:07:58

யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் நன்றி செலுத்தியுள்ளனர்: முன்னாள் அமைச்சர் சுபையிர்.

(எஸ்.அஷ்ரப்கான்)

30வருட யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டைப் பாதுகாத்து, நாாட்டினுடைய முன்னேற்றத்திற்காக உழைத்த மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் நன்றி செலுத்தும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அளித்து, அவரை வெற்றிபெறச் செய்துள்ளனர் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளினால் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டைப் பாதுகாத்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் நன்றி செலுத்தும் வகையில் இந்தத் தேர்தலினைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அளித்து நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர். நாட்டுக்குப் பொருத்தமான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பது, வரவேற்கத்தக்க விடயமாகும். அந்த வகையில் நாட்டு மக்களின் பேராதரவினைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக, கோட்டாபய ராஜபஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்து அவருடைய வெற்றியின் பங்காளிகளாக இருக்கின்ற அத்தனை ஆதரவாளர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதுடன், குறித்த  தேர்தலானது அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய சகல தரப்பினரையும் போற்றுகின்றேன்.

நல்லாட்சி எனும் போர்வையில் ஐக்கிய தேசியக்கட்சியினால் கொண்டு வரப்பட்ட ஆட்சியில், வெளிநாட்டு சக்திகளின் சதிவலையில் நாடு சிக்குண்டு, நாட்டினுடைய இறைமை, பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாக இருந்த, இந்தக்காலப்பகுதியில் நடாத்தப்பட்ட தேர்தலில் நாட்டையும், நாட்டினுடைய வளங்களையும் பாதுகாப்பதற்கு பொருத்தமான ஒருவரை மக்கள் தெரிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். 

பெரும்பான்மை மக்களின் பேராதரவு கோட்டாபய ராஜபஷவுக்கு உள்ளது என்பதனை முஸ்லிம் தலைமைகள் புரிந்திருந்தும், அவர்கள் பெரும்பான்மை மக்களினுடைய உணர்வுகளுக்கு எதிராக நின்று சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்து இன்று முஸ்லிம் சமூகத்தினை நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளனர். இது மிகவும் வேதனையான விடயமாகும்.

ஒவ்வொரு தேர்தலிலும் மஹிந்த குடும்பத்தினை எதிர்த்து அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், கேவலம் தமது சுயநல அரசியலுக்காக மஹிந்த குடும்பத்தினரை முஸ்லிம்கள் மத்தியில் இனவாதிகளாக, காட்டியே தங்களுடைய கட்சியினையும், பதவிகளையும் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறானவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு படிப்பினையாகும்.

 இந்த நாட்டிலே காணப்படுகின்ற சந்தேகங்கள், இனவாதம் ஆகியன களையப்பட்டு, மலரப்போகின்ற புதிய ஆட்சியில், மூவின மக்களும் நிம்மதியாகவும், ஒற்றுமையுடனும் வாழக்கூடியதொரு சூழல் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவ்வாறான விடயங்களை செய்வதற்குரிய ஆற்றலும், வல்லமையும்  கோட்டாபய ராஜபஷவிடமே உள்ளது. நாட்டில் வாழும் சகல இன மக்களினதும், அபிலாசைகளை பூத்தி செய்யக்கூடிய மற்றும் நாட்டினுடைய பாதுகாப்பினை உறுதி செய்து நாட்டின் வளங்களையும் பாதுகாக்கக்கூடிய ஒரு சிறந்த தலைவராகவும் அவர் காணப்படுகிறார்.

நல்லாட்சியில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய ஊழல் மேசடிகளில் ஈடுபட்டு, இந்த நாட்டினுடைய பொருளாதாரம் சூறையாடப்பட்டது. குறிப்பாக மத்திய வங்கியிலே பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றது. நாட்டினுடைய வளங்களும், நிலங்களும் வெளிநாடுகளுக்கு விற்பதற்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்த இக்காலகட்டத்தில், நாட்டு மக்கள் அந்த பொல்லாத ஆட்சியினை விரட்டியடித்து நாட்டைப் பாதுகாத்துள்ளனர். குறிப்பாக நாட்டுக்கு துரோகமிழைத்தவர்களை நாட்டு மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகப் புறக்கனித்துள்ளனர் என்பதே உண்மையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts