கட்டுரைகள் | அரசியல் | 2019-11-18 09:53:48

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை.

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சி முறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான தனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றை மஹிந்த வெளியிட்டுள்ளார்.

‘எனது சகோதரரின் வெற்றி குறித்து’ என்ற தலைப்பிலான குறித்த அறிக்கையில், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதும் கூட்டு எதிரணியினதும் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ இந்த ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமான ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

எவருக்குமே அசௌகரியத்தைக் கொடுக்காத வகையில் அமைதியான முறையில் இந்த வெற்றியைக் கொண்டாடுமாறு எமது கட்சியின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தேர்தலில் எமக்கு சார்பாக தீர்க்கமான முறையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இன்றைய அரசாங்கத்தின் கடந்த ஐந்து வருடகால செயற்பாடுகளே அதற்கு காரணமாகும். இதனால், எவருக்குமே அசௌகரியத்தைக் கொடுக்காத முறையில் நாம் நடந்துகொள்ள வேண்டியது நாட்டுக்கும் மக்களுக்கும் நாம் செய்யவேண்டிய ஒரு கடமையாகும்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசாங்கத்தினால் கொடுமைக்கும் தொல்லைக்கும் உள்ளாக்கப்பட்ட சகலருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைத் திட்டமொன்றை நாம் முன்னெடுப்போம்.

மக்களின் ஆணையை குறுகிய அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் பல்வேறு இனவாத, மதவாத குழுக்களுடனான பின்கதவு வழியான உடன்பாடுகளின் ஊடாக மீண்டும் ஒரு தடவை திருடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட 2015 பாணியிலான முயற்சியை தீர்க்கமான முறையில் தோற்கடித்தமைக்காக நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

அரசியல் நோக்கங்களுக்காக மதவாதத்தையும் இனவாதத்தையும் ஊக்கப்படுத்துகின்ற ஆபத்தான விளையாட்டுகளுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது.

நாம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து வரும் நாட்களில் மக்களுக்கு அறிவிப்போம். இந்த தேர்தலில் மக்களினால் எமக்கு வழங்கப்பட்ட தெளிவான ஆணையைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற பாரம்பரியங்களுக்கு இணங்க உகந்த முறையில் இன்றைய அரசாங்கம் செயற்படும் என்று நம்புகிறோம். இது தாய் நாட்டுக்கும் தேசபக்த மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்” என்று தெரிவித்துள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts