உள்நாடு | அரசியல் | 2019-11-15 18:25:35

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த பணி இன்று காலை ஆரம்பமானது. கொழும்பு மாவட்டத்தில் 1,175 வாக்கெடுப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நடவடிக்கை வெற்றிகரமான முறையில் இடம்பெறுகிறது. கம்பஹா மாவட்டத்திற்கு தேவையான வாக்குப் பெட்டிகளும் அனுப்பப்படுவதாக மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் எமது நிலையத்திற்கு தெரிவித்தார். காலி மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் பணிகள் இடம்பெறுகின்றன.

மாத்தளை மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் நடவடிக்கை பூர்த்தி அடைந்திருப்பதாக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜி.கே பெரேரா எமது நிலையத்திற்கு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி அடைந்திருப்பதாக கண்டி மாவட்ட செயலாளர் திஸ்ஸ கருணாரட்ண தெரிவித்தார். மாத்தறை மாவட்டத்தில் 458 இடங்களில் வாக்களிப்பு இடம்பெறவிருக்கிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன. நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

அம்பாறை தேர்தல் தொகுதியில் 179 வாக்களிப்பு நிலையங்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 88 வாக்களிப்பு நிலையங்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களுமாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 518 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்களிப்பு நிலையங்களில் 05 இலட்சத்து 03 ஆயிரத்து 790 பேர் வாக்க ளிக்க தகுதிபெற்றுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ண குறிப்பிட்டார். 

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. வாக்களிப்ப நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை தேர்தல் தொகுதியில் 94,781 பேரும் மூதூர் தொகுதியில் 107,030 பேரும் சேருவில தொகுதியில் 79,303 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்று கொண்டு செல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 பேரும் மட்டக்களப்பு தொகுதியில் 187,672 பேரும் பட்டிருப்பு தொகுதியில் 94,648 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts