(றியாஸ் ஆதம்)
Posted By Admin | Posted On 11/12/2019, 4:46:33 PM | Views 936

​​​​​​(றியாஸ் ஆதம்)

மலரப்போகின்ற புதிய ஆட்சியில் ஏறாவூர் பிரதேச மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து, அக்காணிகளுக்குரிய ஆவணங்களையும் நிச்சயமாக வழங்குவோம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, ஏறாவூர் புன்னைக்குடா வீதியில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தலைமையில் (10) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஏறாவூர் பிரதேச மக்களுக்கு காணிகள் இருந்தும், குறித்த காணிகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாகவும், அவற்றை புதிய ஆட்சியில் பெற்றுத்தருமாறும் முன்னாள் அமைச்சர் சுபையிர் என்னிடம் கோரிக்கை விடுத்தார். நிச்சயமாக புதிய ஆட்சியில் ஏறாவூர் பிரதேச மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து அதற்கான ஆவணங்களையும் வழங்குவோம்.

2015ஆம் ஆண்டு நாங்கள் இந்த நாட்டை இன்னுமொரு தரப்பினருக்கு பாரம் கொடுத்தோம். அப்போது நாடு இருந்த நிலைமையையும், இப்போது நாடு இருக்கும் நிலைமையையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நாங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக உரங்களை வழங்கினோம். நீர்ப்பாசனத்திட்டங்களையும், குளங்களையும் அபிவிருத்தி செய்து விவசாயிகளின் நலன்கருதி அவர்களின் உற்பத்திற்கு சிறந்ததோர் சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தோம்.

இந்த நாட்டிலே பிறந்து வாழ்கின்ற ஏழை மக்களுக்கு ஒரு துண்டுக்காணியேனும் வழங்கவதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் முடியாமல் போனது. இவ்வாறான நிலையில் எமது நாட்டினுடைய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அமெரிக்காவுக்கு கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் ஒப்பந்தங்களை செய்துள்ளது. இப்படியான ஒப்பந்தங்களை எதற்காக செய்கின்றனர் என நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

அமெரிக்கா நாட்டுக்குள் வந்தால் என்ன நடக்குமென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, சிரியா, லிபியா போன்ற நாடுகளில் என்ன நடைபெற்றது. அதுபற்றி உங்களுக்கு நன்கு தெரியும். இப்போது திருகோணமலையில் இருந்து காணிகளை வழங்குவதற்கு ஆயத்தமாகவுள்ளனர். முஸ்லிம் தலைவர்களும் அவற்றுக்கு கையுயர்த்தி ஆதரவு வழங்கியுள்ளனர். இவற்றுக்கு ஏன் ஆதரவு வழங்கினீர்கள் என முஸ்லிம் தலைவர்களைப் பார்த்து கேளுங்கள்.

எதிர்வரும் 16ஆம் திகதி மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து, கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்யுங்கள். நாங்கள் நாட்டைப் பொறுப்பேற்று இன, மத வேறுபாடுகளின்றி சகலரும் நிம்மதியாக வாழக்கூடிய அச்சமற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம். நீங்கள் தொழிலுக்குச் செல்லும் போது இன, மத, குலம் பார்த்து ஏதாவது அநியாயம் நடந்தால், அது மனித உரிமை மீறலாகும். அப்படியான ஒரு சம்பவம் கோட்டாபய நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெறாது.

குறிப்பாக பயங்கரவாத யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்து கிழக்கு மாகாணத்தில் காபட் பாதைகள், பாலங்கள், குளங்கள், நீர்ப்பாசனத்திட்டங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் என பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்துள்ளோம். அவற்றை எல்லாம் முஸ்லிம் தலைவர்கள் மறந்து செயற்பட்டாலும், மக்கள் ஒருபோம் மறந்திருக்கமாட்டார்கள் என நம்புகின்றேன் என்றார்.

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts