கட்டுரைகள் | அரசியல் | 2019-11-10 21:28:11

சஹ்ரானை காரணம் காட்டி முஸ்லிம்களை மிரட்டும் மஹிந்த தரப்பு!

ஊடகப்பிரிவு

சஹ்ரானை காரணம் காட்டி முஸ்லிம்களை மிரட்டி கோட்டாவுக்கு வாக்களிக்க வைக்கும் நடவடிக்கையில் மஹிந்த தரப்பு ஈடுபட்டு வருகிறது என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

சஹ்ரானின் சம்பவத்துக்குப் பின் இந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்றொரு கதையைப் பரப்பி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு மஹிந்த தரப்பு முயற்சி செய்து வருகிறது.

சஹ்ரானின் செயற்பாடுகள் தொடர்பில்-குண்டு வெடிக்கப் போவது தொடர்பில் பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிந்திருந்தும் அவர்கள் அதைத் தடுப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சஹ்ரானை வைத்துக்கண்டு இந்தத் தேர்தலை வெற்றி பெறுவதற்கும் முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கும் மஹிந்த தரப்பினர் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.முஸ்லிம் பகுதிகளில் அடிக்கடி சோதனைகள் இடம்பெறுகின்றன.

முஸ்லிம்களை இந்தச் சோதனைகள் மூலமாக அச்சுறுத்துகின்றனர்.அதனூடாக முஸ்லிம்கள் பயந்து மஹிந்தவின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.தேர்தல்கள் நெருங்கும்போது இவ்வாறான சம்பவங்களை அவர்கள் திட்டமிட்டு நிகழ்த்துகின்றார்கள்.

நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.எங்களை எப்படித்தான் அச்சுறுத்தினாலும் அந்த அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அடிபணியக்கூடாது.நாங்கள் அன்னச் சின்னத்துக்கே வாக்களித்து சஜித் பிரேமதாசா அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

அதாவுல்லா ,ஹிஸ்புல்லாஹ்,ஹசன் அலி,பஷீர் ஆகியோர் கோட்டாவின் வெற்றிக்காகக் பாடுபடுகின்றனர்.தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே இதைச் செய்கிறார்கள்.எமது சமூகத்தை விற்று அந்தப் பதவிகளைப் பெறுவதற்காக அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.

நாங்கள் பதவிக்காகப் போராடவில்லை.எம் இனத்தின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவுமே போராடுகிறோம்.

சஜித் பிரேமதாசா இன்று மூன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.போதைவஸ்தை ஒழிப்பது,இனவாதம் பேசுபவர்களை தண்டிப்பது மற்றும் ஊழல்வாதிகளை தண்டிப்பது போன்றவையே அந்த மூன்று போராட்டங்களாகும்.

வடக்கு-கிழக்கில் 90 வீதமானவர்கள் வாக்களிக்க வேண்டும்.அப்போதுதான் சஜித்தை வெற்றிபெறச் செய்ய முடியும்.எல்லோரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.இது எமது பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட தேர்தல் என்பதை நாம்  புரிந்துகொள்ள வேண்டும்.

சஜித்துக்கு ஆதரவாக சந்திரிக்கா மேடை ஏறி இருப்பது எமக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கிறது.ஜேவிபிகூட இரண்டாவது விருப்ப வாக்கை சஜித்துக்கே அளிக்குமாறு கூறுவார்கள்.அவர்களின் பேச்சு இப்போது அப்படித்தான் உள்ளது.

சஜித்தின் வெற்றி உறுதி.என்றாலும்,நாம் வாக்களிப்பு வீதத்தைக் கூட்ட வேண்டும்.-என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts