உள்நாடு | அரசியல் | 2019-10-21 15:55:33

கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாவுடன் பேசப்போவதில்லை: மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றை உள்ளடக்கியதாகவே எமது 13 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தோம். அவ்வாறு இருக்கையில் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் யாரோ அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

இது குறித்து ஆராய எமது கோரிக்கைகளை உருவாக்கிய ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இந்த வாரத்தில் கூடி ஆராயவுள்ளோம். எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில் இந்த வாரத்தில் ஒரு தினத்தில் நாம் ஐந்து கட்சிகளும் கூடி ஒரு உறுதியான நிலைப்பாட்டினை எட்டுவதுடன் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

எம்முடன் பேச தயாராக உள்ள கட்சிகளையும் சந்தித்து நிலைப்பாடுகள் குறித்து ஆராய்வோம். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எமது கோரிக்கைகளை ஆராய்ந்துள்ளாரா என எமக்கு தெரியவில்லை. ஆனால் எம்முடன் பேச தயாராக உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே நாம் அவருடன் பேசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.” என்றுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts