ஹுதா உமர்
Posted By Admin | Posted On 2019-10-08 21:53:26 | Views 990

சஜா அனைஸ்

தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, முஸ்லிங்களுக்கு எதிரியாக காட்டப்படும் கோத்தாபாயவை ஜனாதிபதியாக்க முனைவதாகவும், தேசிய பட்டியலை இலக்காக கொண்டு முஸ்லிம் சமூகத்தை இனவாதிகளிடம் காட்டிக்கொடுப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாற்றுக்கள் முட்டாள் தனமான ஒன்றாகும் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் அல்ஹாஜ் யூ . எல். நூருல் ஹுதா தெரிவித்தார்.

இன்று (08) மாலை இடம்பெற்ற கிழக்கு சமூக அபிவிருத்தி இஸ்தாபன கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த பல வருடங்களாக ஒரே அமைச்சரவையில் சக அமைச்சராக இருந்த ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா அவர்கள் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தால் கிழக்கில் தமது செல்வாக்கை தக்கவைக்கவேண்டிய தேவையில் இருந்த சுதந்திர கட்சி தேசிய பட்டியல் உறுப்புரிமை மட்டுமல்ல அமைச்சரவை அமைச்சர் பதவியும் வழங்கியிருக்கும். அப்படியான அதிகாரத்தை பெறவேண்டிய தேவை அவருக்கு இருந்திருக்கவில்லை. இந்த நாட்டையும் நாட்டில் வாழும் சகல சமூகத்தையும் பாதுகாக்க யார் பொறுத்தமோ அவரே தேசியகாங்கிரஸின் தெரிவாக எப்போதும் இருந்திருக்கிறது.

முப்பது வருடங்களாக யுத்தம் நடைபெற்ற போது முஸ்லிம் அடையாளங்களை அழிக்கும் சட்டமூலங்களை கொண்டுவந்து முஸ்லிங்கள் மனநோகும் எந்தவித சட்டங்களையும் அப்போதைய அரசாங்கங்கள் செய்யவில்லை. ஒரு மனிதாபிமானமில்லாதவர் செய்த காட்டுமிராண்டி செயலால் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை உச்சகட்டமாக மனநோக செய்த செயலை செய்தவர்கள் இந்த நாட்டின் முள்ளந்தண்டு இல்லாத ஆட்சியாளர்களே. அந்த தாக்குதலில் ஈடுபட்ட யாரும் இஸ்லாமிய கலாச்சார ஆடைகள் எதையும் அணியவுமில்லை அப்படி இருக்க சம்பந்தமே இல்லாமல் அப்படியான தடைகளை கொண்டுவர வேண்டிய தேவை ஏன் இந்த அரசுக்கு ஏற்பட்டது ? திருமண சட்டம், புதிய யாப்பு திருத்தம், மதரஸா மீதான பார்வை என மேலைத்தேய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இந்த அரசாங்கம் செயற்படுவது தெளிவாக தெரிகிறது.

தமிழ், முஸ்லிம்,சிங்கள மக்களை அடக்கி தமது கனவை நனவாக்க இலங்கையை சீரழித்துக்கொண்டு பாடுபட்ட ஒரு இயக்கத்தை அழித்து இந்த நாட்டில் சமாதானம் மலரவேண்டும். மக்களின் விருப்பம் இல்லாமல் இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படல் வேண்டும், சகல மக்களும் நிம்மதியாக வாழும்படியான ஜனநாயக யாப்பு உருவாக்கப்படல் வேண்டும் எனும் தேசிய காங்கிரசின் கோரிக்கைகளை ஏற்று அவற்றில் பெரும்பான்மையானவற்றை வெற்றிகரமாக முடித்து இந்த நாட்டில் நிம்மதியான காற்றை சுவாசிக்க வழிசமைத்த மஹிந்த ராஜபக்சவுக்கு கிழக்கின் மக்கள் தலைவனாக நன்றியுடன் எங்களது தலைமை பயணித்துள்ளது.

அமைச்சுக்களையும், அரசின் வரப்பிரசாதங்களையும் அனுபவித்துவிட்டு முதுகில் குத்தும் எந்த ஒரு காரியத்தையும் இஸ்லாமிய மகனான அதாஉல்லா செய்யவுமில்லை. இனிமேலும் செய்யவும் மாட்டார். மேற்கத்தைய சக்திகளினால் கண்குத்தப்பட்டிருக்கும் எமது நாட்டின் இறையாண்மையையும், சொத்துக்களையும் பாதுகாத்து நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய காலகட்டத்தில் இப்போது நாம் இருந்து கொண்டு இருப்பதனால் சிறந்த நிர்வாக திறமையும் அதி உச்ச நாட்டுப்பற்றும் உள்ள மஹிந்த ராஜபக்ஸவை தலைமையாக கொண்ட பொதுஜன பெறமுண கூட்டமைப்புடன் நாங்கள் பயணிக்க ஆயத்தமாக உள்ளோம்.

ஏனைய முஸ்லிம் கட்சிகள் அவர்களது முதலாளிகளின் கட்டளைகளுக்கு இணங்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது போன்று அல்லாது எமது தேசிய காங்கிரஸ் இந்த நாட்டின் பிரஜைகள் அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் வாழ்வியலுக்கு தேவையான அம்சங்களை கோரிக்கையாக முன்வைத்து இணைத்துள்ளோம். அந்த கோரிக்கைகள் இறைவனின் உதவியுடன் நிட்சயமாக எங்களுடைய புதிய ஜனாதிபதியும், புதிய ஆட்சியும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts