ஹுதா உமர்
Posted By Admin | Posted On 2019-09-18 12:50:21 | Views 987

நூருல் ஹுதா உமர்

 யுத்தத்திற்கு பின்னர் இந்நாட்டில் புதிய சூழ்நிலை தோன்றியுள்ளது. இச்சூழ்நிலையில், முஸ்லிம்கள் மீதான அடக்கு முறை, முஸ்லிம்களுடைய அரசியல், சமூக, பொருளாதார கலாசார விடயங்கள் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றன என தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பாஸில் தெரிவித்தார்.
 
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் 19 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை பிரதேச மத்திய குழு மற்றும் அஸ்ரப் சமூக எழுச்சி மன்றம் ஆகிய இணைந்து நடாத்திய  அன்னார் தொடர்பான நினைவுப் பேருரைகள், துஆ பிரார்த்தனைகள் கடந்த 16ஆம் திகதி இரவு பாலமுனை இப்னு ஷீனா கணிஷ்ட வித்தியாலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவின் தலைவர் ஏ.எல்.எம்.அலியார் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் அதிதிகளாக, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி ஏ.ஏ. கபூர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா உப தவிசாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, பாலமுனை உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கலாநிதி பாஸில் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

யுத்தத்திற்கு முன்னர் இந்நாட்டில் எவ்வாறு தமிழ் சமூகத்தினரது எழுச்சி பலவீனப்படுத்தப்படுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதோ, அதனை ஒத்ததாகவும், அதனைவிட நவீன முறையிலானதாகவும் முஸ்லீம் சமூகம் இன்று பலவீனபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

  யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்களின் அரசியல் பல கூறாக்கப்பட்டு பல முஸ்லிம் தலைவாகள் இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களிடம் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு, எதிர்கால சிந்தனைகள் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளன.

 தலைவர் அஸ்ரப் சிறந்த தலைமைத்துவ ஆளுமை கொண்டவராக இருந்ததுடன், சிறந்த அரசியல்வாதியாக, சட்டப்புலமை வாய்ந்த நிபுணராக, கவிஞனாக, மனிதநேயமுள்ள சமூகப்பற்றாளனாக, வசீகரமுள்ள பேச்சாளனாகவும் திகழ்ந்தார். அவிரிடம் சிறந்த எதிர்கால சிந்தனை நோக்கு காணப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  அவரது அரசியல் பயணத்தில் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து அதனூடாக அனைத்து இன மக்களும் இன ஐக்கியத்துடன் வாழ்வதற்கான அவரது இலட்சியப் பயணத்தை தொடர்ந்த போது 2000 ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி அகால மரணமானார். இவரது மரணச் செய்தி முஸ்லிம் சமூகத்தை ஆழ்ந்த துயரத்திற்கு கொண்டு சென்றது.

  அவரது மறைவுக்குப் பின்னர் ஸ்ரீ.மு.காங்கிரஸ் மெது மெதுவாக பலவீனமடைந்தது, இன்று பல கூறுகளாக சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கின்றன. இது அவரது மனைவியூடாகப் பிரிப்பதற்கு எத்தனிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் அதாஉல்லாவினாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியினூடாக றிஸாட் பதியுதீனாலும், முன்னாள் செயலாளர் ஹசன் அலி போன்றவர்களின் கட்சி உள்ளிட்ட ஏழு அமைப்புக்களாக பிரிந்து இன்று மு.கா. கட்சி பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

 இவ்வாறான சூழ்நிலையில், இன்றைய முஸ்லிம் தலைவர்களிடம் சமூகம் பற்றிய எந்த எதிர்கால திட்டங்களும் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகவுள்ளது. யுத்தம் முடிவடைந்த காலத்தின் பின்னர் முஸ்லிம் தலைவர்கள் பல தந்துரபாயங்களை தீட்டி இருக்க வேண்டும். இவ்வாறா சூழ்நிலைகள் ஏற்படும் போது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு தொடர்பிலான ஆலோசனைகள் செய்து திட்டங்களை மன்னெடுத்திருக்க வேண்டும்.

 தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது சமூகம் சார்ந்த பணியை மிகவும் துல்லியமாக காய்நகர்த்தி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆயுத மோதலில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து அவர்கள் இன்று அரசியல் ரீதியாக பலத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் உரிமைகளையும், எதிர்கால திட்டங்களையும் அபிவிருத்திசார் இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவும், புதியதோர் அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்வதற்குமான தயார்படுத்தல் முயற்சிகளையும் முன்னகர்த்தி செல்வது எமது தலைமைகளுக்குப் பாடமாக அமைய வேண்டும்.

 

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts