கட்டுரைகள் | அரசியல் | 2019-09-16 03:14:22

சு.கவின் சஜிதை நோக்கிய நகர்த்தல் ஏன்??

மிஸ்பாஹுல் ஹக்

சு.கவானது மிக நீண்ட காலமாக இலங்கை அரசியலை தன் கைக்குள் சுருட்டி வைத்திருந்தது. அந்த கட்சியின் தற்போதைய நிலை யாவரும் அறிந்ததே! ஜனாதிபதியென்ற மிகப் பெரும் பதவியை தன்னகத்தே கொண்டிருந்தும் கவனிப்பாரற்று விடப்பட்டிருந்தது. இந் நிலையில் அதனுடைய வளர்ச்சிக்கு ஒரு வித்தியாசமான காய் நகர்த்தல் அவசியமாகும். சு.கவானது சஜிதை குறி வைத்தது இன்று நேற்றல்ல. கடந்த 52 நாள் ஆட்சி மாற்ற குழப்பத்தின் போது சஜிதை பிரதமராக்கும் நோக்கில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சு.கவுக்கும், ரணில் தலைமையிலான ஐ.தே.கவுக்குமிடையிலான உறவை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது (சில வேளை சஜித் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் ஒரு சிறிய உறவு ஏற்பட வாய்ப்புள்ளது.). சுதந்திர கட்சி தனித்து களமிறங்கி சவால் விடுக்குமளவு பலமிக்கதாகவும் இல்லை. சு.க விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, சு.கவுக்குள்ள தெரிவாக பொதுஜன பெரமுனவே இருக்கும். 

சு.கவுக்கும், பொதுஜன பெரமுனவுக்குமிடையில் சின்ன (மொட்டு, கை) வேறுபாடுகளின்று வேறு வேறுபாடுகளில்லை எனலாம். இவ்வாறான நிலையில் சு.கவானது மொட்டுவுடன் கை கோர்க்குமாக இருந்தால், அது சு.க ஆதரவாளர்களை மொட்டுவுடன் இணைப்பதற்கு வழிகோலும். அது மட்டுமின்றி பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால், அதுவே சு.கவின் அழிவுக்கு காரணமாக அமையும். இப்போதே சு.கவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொன்றாக களன்று, மொட்டுவின் பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர். மொட்டு ஆட்சியும் அமைத்தால் சொல்லவா வேண்டும்? அது மாத்திரமல்ல... அவர்கள் ஓணான் விட்டு வெற்றிலை ஆயத் தேவையில்லையே? சு.கவினூடாக மொட்டுவதை ஆதரிப்பதை விட நேரடியாக ஆதரிக்கவே விரும்புவர். அதுவே இலாபமான வருமானத்தை பெற்றுக்கொடுக்கும். ஐ.தே.க வெற்றி பெறுவதானது சு.கவுக்கு எதிர்கால சவாலைத் தான் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சு.க சஜிதை வேட்பாளராக்கிய கூட்டை அமைத்தால், அதன் பிரதான பாத்திரம் சு.கவிடம் காணப்படும். வழமை போன்று சு.க தேர்தல் களத்தில் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும். இது தவிர்ந்து வேறு எந்த தீர்மானத்துக்கு சென்றாலும், சு.க இழிவான தோல்வியை சந்திக்க நேரிடும் அல்லது துணை பாத்திரம் ஏற்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக சு.கவில் தொடர்ந்து பயணிப்பதை பலரும் பரிசீலிக்க நேரிடலாம். தேசிய அரசியலில் துணை பாத்திரம் ஏந்தும் கட்சியின் பின்னால் செல்ல யாரும் விரும்பமாட்டார்கள். இத் தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் வரும். இத் தேர்தலில் சு.க பிரதான பாத்திரமேற்காது போனால், இதிலுள்ளவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.

தற்போதைய ஜனாதிபதியை சு.கவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் தோல்வி உறுதி செய்யப்பட்டது போன்றாகிவிடும். தற்போது சு.கவில் உள்ளவர்களில் நாடு பூராண செல்வாக்குள்ளவர்கள், பேசு பொருளானவர்கள் யாருமில்லை எனலாம். இந் நிலையில் மக்களிடையே பேசு பொருளாகவுள்ள சஜிதை களமிறக்கினால், சு.கவானது தனது நிலையை ஓரளவு உறுதி செய்து கொள்ளும். தங்களது பரம்பரை எதிரியான ஐ.தே.கவையும் பல கூறுகளாக சிதறச் செய்துவிடலாம். தன்னை நடு வீதியில் விட்டுச் சென்ற ரணில் தலைமையிலான ஐ.தே.கவையும் ஜனாதிபதி மைத்திரி பழி வாங்கிவிடுவார்.

சு.கவானது பலமிழந்துவிட்டதென்பதை மக்கள் உணராமல் தடுத்தல், சு.கவை அழிவிலிருந்து பாதுகாத்தல், ரணில் தலைமையிலான ஐ.தே.கவை சுக்கு நூறாக்கல் போன்ற பல்வேறு சிந்தனைகளின் விளைவே சஜிதை நோக்கிய திட்டமிடலாகும். சு.கவானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறங்கினாலோ அல்லது அது கூட்டு சேர்ந்து களமிறங்கினாலோ, அது மொட்டுவின் வாக்கு வங்கியில் சிறிய தாக்கத்தை எற்படுத்தும். ஏனெனில், சு.க ஆதரவாளர்கள் மொட்டுவின் பக்கம் சாயும் இயல்புகொண்டவர்கள். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts