பிராந்தியம் | அரசியல் | 2019-09-11 16:38:34

சஜித் சு.கவுடன் இணைந்து தேர்தலில் களமிறங்குவாரா...?சாதூரியமான தீர்மானமாகுமா...?

மிஸ்பாஹுல் ஹக்


ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்ற கதையாடல்களை சந்து பொந்தெல்லாம் காணக்கிடைக்கின்றன. இவ்வாறான நிலையில் அமைச்சர் சஜித், தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என கூறியும் வருகிறார். இதனையும், இன்னும் சில விடயங்களை வைத்து சஜிதுக்கு ஐ.தே.கவில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காவிட்டால், அவர் சு.கவில் போட்டியிடுவார் என்ற கதையாடல்களை அவதானிக்க முடிகிறது.

சு.கவுடன் இணைந்து சஜித் களமிறங்குவது, மரித்து கிடக்கும் சு.கவுக்கு உயிரளிப்பது போன்றாகிவிடும். ஆனால், சஜித்.....? சஜிதுடைய பலமே ஐ.தே.கவாகும். இது அவருக்கு நன்றாகவே தெரியும். இன்று இலங்கை மக்கள் அனைவரும் சஜிதை விரும்புகிறார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த சிலர் முனைகின்றனர். சஜிதை விரும்புவோர் வேறு யாருமல்ல, இன்று ரணில் தலைமையிலான ஐ.தே.கவை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாதென்ற எண்ணப்பாடுள்ள ஐ.தே.கவின் தீவிர ஆதரவாளர்களே! இன்று அவர் நடாத்தும் கூட்டங்களில் பங்கு பற்றுவோர் எல்லாம் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் என்பதை சாதாரணமாக அவதானிக்க முடிகிறது. இவ்வாறான நிலையில் அவர் சு.கவோடு இணைந்து தேர்தல் கேட்டால் என்னவாகும்? சுருங்க கூறின், அவர் தனது பலத்தை முழுமையாக இழப்பாரெனலாம்.

சஜித் பெருமளவான மக்கள் ஆதரவுகொண்ட, தனி மனித செல்வாக்குடைய நபராகவோ அல்லது ஐ.தே.க போட்டியிட்டு வெற்றியீட்டுவதை தவிர்ந்து, அவருக்கு வேறேதேனும் வெற்றி வாய்ப்பு இருந்திருந்தாலோ, அவர் ஐ.தே.கவின் வேட்பாளர் அந்தஸ்து கோரி இத்தனை தூரம் சென்று ரணிலின் காலை பிடிக்க வேண்டிய தேவையில்லை. இதற்கு மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாட்டை உதாரணமாக கொள்ளலாம். சு.கவில் மஹிந்த அணி புறக்கணிக்கப்பட, அவர்கள் நினைத்தது போன்று ஆட முடியாது போக, தனிக்கட்சி அமைத்து இலங்கை நாட்டையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஒப்பீடானது, சஜித், தனது வெற்றி ஐ.தே.கவிலேயே தங்கியுள்ளது என்பதை நன்குணர்ந்து காய் நகர்த்துவை அறிந்துகொள்ளச் செய்கிறது.

இலங்கை அரசியலில் சு.கவுக்கும், ஐ.தே.கவுக்குமிடையிலான மோதல் மிக நீண்ட நாட்களாக நடந்தேறி வருகிறது. சு.கவினரின் பரம்பரை எதிரியாக சஜிதுள்ளார். இவ்வாறான நிலையில் சு.கவினரின் வாக்கு சஜிதை சென்றடைவது மிக அரிதானது. இது மஹிந்தவின் வெற்றியை சாதகமாக்கும். அது மாத்திரமன்றி சஜிதை விரும்பும் ஐ.தே.கவினர் கூட, அவர் ஐ.தே.கவை விட்டு விலகி சென்றால், அவரை எதிர்ப்பார்களே அன்றி, ஆதரித்துவிடமாட்டார்கள். இதுவே யதார்த்தம். இந்த சிந்தனை உள் நுழைத்து பார்த்தால், சஜித் சு.கவுடன் இணைந்து தேர்தல் கேட்பதானது மிகத் தவறானதொரு செயலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஐ.தே.க எவ்வித உடைவுமின்றி கடந்த தேர்தலை எதிர்கொண்ட போதே மொட்டுவின் முன்னால் சிறிதேனும் தாக்கு பிடிக்க முடியாது யானை தலை கீழாய் வீழ்த்தப்பட்டிருந்தது. அந்தளவு மொட்டு பலமிக்கதாகவுள்ளது. அந்த பலத்தை உடைப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. இது நாடறிந்த உண்மை. அவ்வாறிருக்கையில் ஐ.தே.க பிளவு படுமாகவுமிருந்தால், தோல்வியை தேர்தலுக்கு முன்பே எழுதி கொடுத்தது போன்றாகிவிடும். ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மனதால் பின்வாங்கிவிடுவார்கள். சர்வதேசம் தோற்கும் குதிரை மீதெல்லாம் பந்தயம் கட்ட விரும்பாது. இதுவெல்லாம் மஹிந்தவின் வெற்றி இன்னுமின்னும் சாதகமாக்கும்.

சஜித் வேறு பக்கம் சென்று தோல்வியும் தழுவினால், அவரை யாருமே மதிக்கமாட்டார்கள். அரசியல் அநாதையாக்கப்படுவார். வெற்றி பெற்றால்...? இன்றைய ஜனாதிபதி மைத்திரி பழம்பெரும் கட்சியான சு.கவின் தலைவராகவிருந்தும், அவரால் உறுதியாக ஆட்சியை கொண்டு செல்ல முடியவில்லை. அந்த பலமின்மையால், அவர் இறுதியாக மிகப் பெரும் அவமானங்களை எல்லாம் சந்தித்துவிட்டார். அவருக்காவது பெயர் சொல்ல ஒரு கட்சி இருந்தது. அது கூட இல்லாமல் சஜித் மிகப் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இவைகளை வைத்து சிந்தனைகளை உலாவ விடும் போது, சஜித் ஒரு போதும் ஐ.தே.கவை புறக்கணித்து, சு.கவுடன் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கமாட்டார். ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பெயரிடப்படாவிட்டால், சு.காவில் இணைந்து கேட்பார் என்ற மக்களின் கதையாடல்களை, தனது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்தி கொண்டிருக்கிறார் என்று கூறவே தோன்றுகிறது. சஜித்தை ஐ.தே.க சார்பாக களமிறக்காது விட்டால், அவர் கட்சி மாறி, ஐ.தே.கவின் வெற்றியை இல்லாமல் செய்வதோடு, ஐ.தே.கவையும் உருக்குலைத்து விடுவாரோ என்ற அச்சம் ரணில் மனதிலும் இருக்குமல்லவா? அதுவே சஜிதின் காய் நகர்த்தல்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts