கல்வி | கல்வி | 2019-08-27 07:14:42

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழிக் கற்கை நெறி!

(எம்.எம்.ஜபீர்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் இரண்டாம் மொழியினை விருத்தி செய்யுமுகமாக சிங்கள மொழிக் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அமைச்சர் மனோ கணேஷனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.ஆர்.எம்.றிப்கான் மற்றும் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீதிற்குமிடையில் சந்திப்பு நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்யுமுகமாகவும் எதிர்காலத்தில் தமிழ் பேசும் ஊடகவியாலாளர்களை சிங்கள மொழி மூல ஊடகங்களில் பணியாற்ற வைக்குமுகமாக சிங்கள மொழி கற்கை நெறியினை அரச கரும மொழிகள் திணைக்களத்தினூடாக ஊடகவியலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க அமைச்சர் மனோ கணேஷனின் அனுமதியினை பெற்றுத்தருமாறு சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் கோரிக்கை விடுத்தார். 

மேலும் அம்பாறை மாவட்டதத்திலுள்ள ஏனைய ஊடகச் சங்கங்களையும் உள்வாங்கி இக்கற்கை நெறியினை ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீதின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மனோ கணேஷனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் றிப்கான், அமைச்சர் மனோ கணேஷனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன்கருதி சிங்கள மொழி கற்கை நெறியினை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக தெரிவித்தார்.

இக்கற்கை நெறி 100 மணித்தியாலயங்கள் கொண்ட 12 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.  இதில்  பங்குகொள்ளும் அரச தொழில் செய்யும் ஊடகவியலாளர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தினூடாக கடமை விடுமுறை பெற்றுக்கொடுக்கப்படும்  எனவும் தெரிவித்தார்.

இக்கற்கை நெறி தொடர்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஊடகச் சங்கங்களின் தலைவர்களுடன் தான் பேசுவதாக தெரிவித்த அவர், இதில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்குகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இக்கற்கை நெறியில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை உடன் மாவட்டத்திலுள்ள ஊடகச் சங்கங்கள் ஒப்படைக்கும் பட்சத்தில் இதற்கான அனுமதியினை அமைச்சரிடம் விரைவாக பெற்று இக்கற்கை நெறியினை ஆரம்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

சிங்கள மொழி கற்கை நெறியினை முறையாக பூர்த்தி செய்யும் ஊடகவியலாளர்களுக்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் வழங்கும்  இறுதிநாள் நிகழ்வுக்கு அமைச்சர் மனோ கணேஷன் கலந்து கொள்வார் எனவும் தெரிவித்தார்.

இதன்போது சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீதினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழிக் கற்கை நெறியினை ஆரம்பிப்பதற்கான அமைச்சர் மனோ கணேஷனுக்கான கோரிக்கை கடிதத்தினை அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் றிப்கானிடம் வழங்கி வைத்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts