உள்நாடு | சமூக வாழ்வு | 2019-08-11 13:55:18

சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைவோம்; -கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பெருநாள் வாழ்த்து

நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதம் மேலோங்கியிருக்கின்ற சூழ்நிலையில் அனைத்து சவால்களையும் வெற்றி கொண்டு, நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் அனைவரும் பேதங்கள் அனைத்தையும் மறந்து சமூக ரீதியாக ஒன்றிணைவோம் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அறைக்கூவல் விடுத்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

"இந்த நாட்டில் காலத்திற்குக் காலம் முஸ்லிம்கள் மீதான இனவாத நெருக்குவாரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறன. இப்போது மிகவும் உச்ச நிலையில் தலைவிரித்தாடுகின்ற பேரினவாத செயற்பாடுகள் இந்நாட்டு முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது. சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தண்டிக்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் நிதானத்தை இழந்து செயற்பட முனையக்கூடாது.

முஸ்லிம் சமூகத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எமது சன்மார்க்கம் காட்டிய வழியில் பொறுமை, சகிப்புத்தன்மையுடன் மதிநுட்பமான செயற்பாடுகளையே முன்னெடுக்க வேண்டியுள்ளது. வெறும் உணர்ச்சிகளுக்கு உந்தப்படுவதானது விபரீதங்களையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் கிடையாது.

எமது நாட்டின் இன்றைய இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் எழுகின்ற சவால்களை வெற்றி கொள்வதற்கு அறிவு, ஆற்றல், ராஜதந்திரம், தூரநோக்கு சிந்தனை நிறைந்த ஒரு பக்குவமான தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்கள் அணிதிரள வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. வெறுமனே உணர்ச்சிப் பிழம்புகளால் ஆளப்படுகின்ற தலைமைகளினால் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஒருபோதும் வெற்றிகரமாக கையாள முடியாது என்பதை அனுபவ ரீதியாக கண்டிருக்கின்றோம்.

இவற்றைக் கருத்தில் கொண்டு எமது சமூகக் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு இப்புனிதத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என்று அறைகூவல் விடுப்பத்துடன் அனைத்து உள்ளங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குரிப்பிட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts