உள்நாடு | அரசியல் | 2019-07-29 15:26:38

உள்ளுராட்சி சபைகளுக்குரிய அதிகாரத்தை ஒழிக்க மாகாண சபைகளுக்கு அதிகாரம் இல்லை; மாநகர முதல்வர்கள் மாநாட்டில் தீர்மானம்.

(அஸ்லம் எஸ்.மெளலானா)

உள்ளுராட்சி சபைகளுக்குரிய சிற்றூழியர் நியமன அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அது விடயமாக கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனன மாநாடு நேற்று சனிக்கிழமை (27) அம்பாந்தோட்டை செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கொண்டு வந்த கவனயீர்ப்பு பிரேரணையையடுத்தே இத்தீர்மானம் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

20 மாநகர முதல்வர்கள் பங்கேற்றிருந்த இம்மாநாட்டில் மாநகர சபைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றின் மேம்பாடு, சபைகளின் செயற்பாடுகளையும் அதிகாரங்களையும் வலுப்படுத்தல், மக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், மாநகர சபைகளினால் முன்னெடுக்க வேண்டிய நிலைபேறான அபிவிருத்தித் திட்டங்கள், இன ஐக்கியம், சகவாழ்வு மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான முதல்வர்களின் கூட்டிணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்தல்

உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டதுடன் இவற்றையொட்டியதாக முக்கிய சில தீர்மானங்களும் நிறைவேற்றுப்பட்டுள்ளன.

இம்மாநாட்டில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், சிற்றூழியர் நியமன விடயத்தில் கிழக்கு மாகாண சபைக்கும் அங்குள்ள உள்ளுராட்சி சபைகளுக்குமிடையில் நிலவி வருகின்ற அதிகார இழுபறியை சுட்டிக்காட்டி, உரையாற்றுகையில் கூறியதாவது,

"மாநகர சபைகளின் தேவைக்கேற்ப சிற்றூழியர்களை நியமித்துக் கொள்வதற்கான அதிகாரம் அந்த சபைகளுக்கு உண்டு என்பது மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகும். ஆனால் தமது அனுமதியில்லாமல் சிற்றூழியர்களை நியமிக்க முடியாது என்று கிழக்கு மாகாண சபை ஒரு சுற்றுநிருபத்தை வெளியிட்டு வைத்துள்ளது.

இந்த சுற்றுநிருபம் அரசியலமைப்புக்கு முரணானதாகும். ஏனெனில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் 09 ஆவது அட்டவணையின் 04 ஆவது பிரிவில் சொல்லப்பட்ட விடயம் யாதெனில், உள்ளுராட்சி சபைகளுக்கு இருந்து வருகின்ற அதிகாரங்களை மாகாண சபைகள் இல்லாதொழிக்க முடியாது. விரும்பினால், உள்ளுராட்சி சபைகளுக்கு மேலும் அதிகாரங்களை மாகாண சபைகளினால் வழங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை மேலதிக அதிகாரங்கள் எவையும் உள்ளுராட்சி சபைகளுக்கு தரப்படவில்லை. மாறாக, இருக்கின்ற அதிகாரங்களை பிடுங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகையினால் உள்ளுராட்சி சபைகளுக்குரிய இத்தகைய அதிகாரங்களை பறிப்பதற்கு எதிராக எமது முதல்வர்கள் சம்மேளனம் உறுதியாக செயற்பட வேண்டும் என்று கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் வலியுறுத்தினார்.

கிழக்கு மாகாணத்திற்கு வேளியேயுள்ள மாநகர சபைகளில் சிற்றுழியர் நியமனம் தொடர்பில் அதிகார இழுபறி எதுவும் காணப்படவில்லை என்று ஏனைய முதல்வர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். அதேவேளை இப்பிரச்சினை தொடர்பில் உள்ளுராட்சி சபைகளுக்கு சாதகமாக வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இருப்பதாக மாத்தளை மாநகர முதல்வர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து உள்ளுராட்சி சபைகளுக்குரிய சிற்றூழியர் நியமன அதிகாரத்தை இல்லாமலாக்குவதற்கு மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் இது விடயமாக கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இலங்கை மாநகர முதல்வர்களின் தேசிய சம்மேனனம் உறுதிப்படுத்தியதுடன் கிழக்கு மாகாணத்தில் எழுந்துள்ள இந்த சர்ச்சை குறித்து கவனம்  செலுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts